ஹேங்வோவர் 2 ஹாலிவுட் கண்ணோட்டம்!


அமெரிக்கா மெல்ல மெல்ல திவாலாகிக் கொண்டிருக்கிறது... அதன் டிரவுசர் கிழிந்துக் கொண்டிருக்கிறது... வால்ட் ஸ்ட்ரீட் முற்றுகை அதைத்தான் உணர்த்துகிறது...’ என்று தொண்டைத் தண்ணீர் வற்ற வற்ற இந்தாண்டின் நிகழ்வுகளை சானல்களில் புள்ளி விரங்களுடன் பக்கம் பக்கமாக தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பார்கள். அக்கம் பக்கம் பார்க்காமலேயே அந்தப்பக்கங்களை ஒதுக்கிவிட்டு, மேலே சொன்ன வரியை மட்டும் உருவி இங்கே கட் பேஸ்ட் செய்யலாம்.



காரணம், ஹாலிவுட்டின் இந்தாண்டு நிலைக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்கா ஆட்டம் கண்டு வருவதற்கும் நிறைய தொடர்பிருக்கிறது. ஒண்டிக்கு ஒண்டி நின்ற ரஷ்யாவும் இப்போது இல்லை. தொடை தட்டிய பின்லேடனையும் சுட்டுப் பொசுக்கியாயிற்று. பெட்ரோலுக்காக மத்திய கிழக்கு நாடுகளை மிரட்டிய காலமும் மலையேறி விட்டது. எனவே, ஜேம்ஸ் பாண்டுக்கும் வேலையில்லை. ராம்போவுக்கும் சண்டை போட ஆளில்லை. கடலுக்கு அடியில் இருந்த சகல ஜந்துக்களையும் அழித்தாயிற்று. டைனோசர் முளைத்த இடத்தை ஆசிட் ஊற்றி கழுவியாயிற்று. பனியும் உருகிவிட்டது. உலகத்தையும் பலமுறை அழித்தாயிற்று. உயிர்பெற்ற மம்மியையும் அடக்கம் செய்து தூசியை துடைத்தாயிற்று.


இனி என்னதான் செய்வது?


ரூம் போட்டு மல்லாக்கு படுத்தபடி ஹாலிவுட் கதாசிரியர்கள் ரொம்பவே யோசித்திருக்கிறார்கள். அதன் விளைவுதான் இந்த 2011ம் ஆண்டு வெளியான படங்கள். ஆனால், இன்னும் விடையேதும் கிடைக்கவில்லை என பட்டியல் போட்டு குதியாட்டம் போட்டிருக்கிறது பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள். எந்த ஆண்டும் இல்லாத நிகழ்வாக, இந்தாண்டு மொத்தம் 28 பட தொடர்ச்சிகள் வெளியாகியிருக்கின்றன. அதாவது இந்தப் படங்கள் அனைத்துமே முந்தைய ஆண்டுகளில் வெளியாகி சக்கைப் போடு போட்ட படங்களின் தொடர்ச்சிகள். அந்தளவுக்கு கதை பஞ்சம். அல்லது எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை. அதைப் போலவே எண்ணற்ற நாவல்களும் திரை வடிவம் பெற்றிருக்கின்றன. இதில் முக்காலே மூன்று சதவிகிதம் படுதோல்வி என்று சொல்ல வேண்டியதில்லை.


ஆனால், மனிதர்களை நம்பாமல் கார்ட்டூனை நம்பிய புண்ணியவான்கள் சுவிஸ் பாங்க் கொள்ளாத அளவுக்கு கல்லா கட்டி விட்டார்கள். குறிப்பாக, ‘கார்ஸ்: 2’, ‘ரியோ 2’, ‘குங்க்ஃபூ பேன்டா 2’, ‘தி ஸ்மர்ஃப்ஸ்’ ஆகியவை டாப் 10 பட்டியலில் இடம்பெற்று புஜகர பராக்கிரமசாலிகளான ஹீரோக்களை நோக்கி சியர்ஸ் சொல்கின்றன.  பட தொடர்ச்சிகளில் எதிர்பார்த்தது போலவே ‘ஹாரிபாட்டர்’ பட வரிசையின் 8ம் பாகமும், இறுதி பாகத்தின் 2ம் பாகமுமான ‘ஹாரிபாட்டர் அண்ட் தி டெத்லி ஹாலோஸ் 2’, வயிறு நிறைந்து ஏப்பம் விடும் அளவுக்கு வசூலித்திருக்கிறது. ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்’ பட வரிசையின் நான்காம் பாகமான ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்: ஆன் ஸ்ட்ரேன்ஜர் டைட்ஸ்’ கில்லியாக எகிறி அடித்திருக்கிறது.


ஆனால், ‘ஹேங்வோவர் 2’ படத்தின் சக்ஸஸ்தான் குறிப்பிட வேண்டிய விஷயம். எப்படி இதன் முதல் பாகம் எதிர்பார்ப்பில்லாமல் வெளியாகி பிரபஞ்சத்தை புரட்டி எடுத்ததோ, அப்படியே இந்த 2ம் பாகம், எதிர்பார்ப்புடன் வெளியாகி, எதிர்பார்த்ததை விட அதிகமாக வசூலித்திருக்கிறது. குறைந்த பட்ஜெட். குடிகார நண்பர்களின் அட்டகாசங்கள் என்ற ஒற்றை வரியை ஆச்சர்யப்படுத்தும் திரைக்கதையுடன் வழங்கியதே இந்த க்ராண்ட் சக்சஸின் காரணம்.


பேய்களின் ரொமான்ஸை ஜன்னி வர சித்தரிக்கும் ‘டுவிலைட் சாகா’ பட வரிசையின் நான்காம் பாகத்தின் முதல் பாகமான ‘தி டுவிலைட் சாகா: பிரேக்கிங் டான்’ மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் ஆக்ஷன் கொத்து பரோட்டாவாக சித்தரிக்கப்படும் ‘டிரான்ஸ்பார்மர்’ பட வரிசையின் 3ம் பாகமான ‘டிரான்ஸ்பார்மர்: டார்க் ஆஃப் தி மூன்’ ஆகியவை தயாரித்தவரையும் வாங்கியவரையும் திருப்திபடுத்தியது என்றால் &‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரிஸ்’ பட வரிசையின் 5ம் பாகமான ‘ஃபாஸ்ட் ஃபைவ்’, ஆக்ஷன் பட விரும்பிகளை விருப்பத்துடன் பார்க்க வைத்திருக்கிறது. இந்த ஒரேயொரு படம்தான், ஆக்ஷன் ஹீரோக்கள் நடித்து ஜெயித்த படம்!




மற்றபடி தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இந்தாண்டும் முடிசூடா மன்னனாக அமர்ந்திருக்கிறது. காமிக்ஸ் நாயகர்கள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு திரை வடிவம் பெற்றிருக்கிறார்கள். ‘அவதார்’ மேனியா இந்தாண்டும் தொடர்ந்தது. அதன் விளைவாக 3டி படங்கள் வெள்ளிக்கிழமைதோறும் ரிலீசாகி கண்களை எரிய வைத்தன. கூட்டி கழித்துப் பார்த்தால், புதியதாக எந்த ஹாலிவுட் படமும் இந்த ஆண்டு வெற்றி பெறவில்லை என்பதையும், பழைய படங்களின் தொடர்ச்சிகளே இம்முறையும் ஆதிக்கம் செலுத்தி இருப்பதையும் புரிந்து கொள்ளலாம். இந்நிலையில் வரும் ஆண்டு எப்படி இருக்கும்?விடைக்காக காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget