தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற "டேஞ்சர்" படத்தின் தமிழ் டப்பிங் தான் "அபாயம்".
ஆண், பெண் பாகுபாடில்லாமல் பழகும் ஐந்து நண்பர்கள் நரேஷ், சங்கர், சாய்ராம், ஸ்வாதி, ஷெரின் ஆகியோர். இந்த ஐவரில் ஸ்வாதிக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட, அதை அமர்க்களமாக கொண்டாட வீட்டிற்கு தெரியாமல் நண்பர்
ஒருவர் தரும் இரவு விருந்து ஒன்றிற்கு செல்கின்றனர் ஐவரும்! அவ்வாறு போகும் வழியில் போலீஸ் ஜீப்பை மோதிவிட்டு நிற்காமல் செல்லும் இவர்களது சொகுசு காரினால் வருகிறது வினை!
போலீஸ் ரெய்டுக்கு பயந்து அடர்ந்த காட்டிற்குள் அடைக்கலமாகும் இவர்கள் ஐவரும், பதவி வெறிப்பிடித்த ஒரு பெரிய மனிதர் தரும் நரபலியை பார்த்து அலறுவதுடன், அதை வீடியோ ஷூட்டும் செய்வதால் வருகிறது மேலும் வினை! அப்புறம்? அப்புறமென்ன, அந்த பெரிய மனிதரின் ஆட்களும், அதிகாரமும் இவர்களை துரத்த, இவர்கள் தப்பித்தார்களா...? பிழைத்தார்களா...? நிட்சயித்தபடி ஸ்வாதியின் திருமணம் நடந்தேறியதா...? பெரியமனிதரின் பதவிவெறியை பப்ளிசிட்டி செய்தார்களா...? இல்லையா...? என்பது த்ரில்லும் திருப்பங்களும் நிறைந்த "அபாயம்" படத்தின் மீதிக்கதை!
"போராளிகள்" நரேஷ், "துள்ளுவதோ இளமை" ஷெரின், சுப்ரமணியபுரம் ஸ்வாதி உள்ளிட்ட ஐந்து நண்பர்களும், நாயகர்-நாயகியராக பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
ஜோஸ்வா ஸ்ரீதரின் மிரட்டும் பின்னணி இசையும், ஓம்பிரகாஷின் இருட்டிலும் ஒளிரும் ஒளிப்பதிவும், இயக்குநர் கிருஷ்ணவம்சியின் (நிஜத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர்...) மிரளவைக்கும் வித்தியாசமும், விறுவிறுப்புமான திரைக்கதை இயக்கத்திற்கு ஒருசில குறைகள் இருந்தாலும் "அபாயம்" ஏற்படுத்துகிறது "நல்ல பயம்!"