பதினெட்டான்குடி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் பிருத்வி, யோகி, ஜெயகாந்த், அருண். சிங்கப்புலி நடத்தும் பந்தல் கடையில் வேலை செய்கிறார்கள். பக்கத்து ஊரில் பந்தல் போடப்போன இடத்தில் ஸ்ரீநிஷாவை காதலிக்கிறார் பிருத்வி. ஸ்ரீநிஷாவை மணக்க, அவரது முரட்டு முறைப்பையன் வெங்கடேசும் காத்திருக்கிறார். வெங்கடேசுக்கு தோஷம் இருப்பதால் உடனடியாக அவருக்கு ஸ்ரீநிஷாவை திருமணம் செய்து வைக்க, ஏற்பாடு செய்கிறார்கள். விஷயம் பிருத்விக்கு தெரியவர, உரிய வயதுக்கு முன் திருமணம்
செய்வதாக போலீசுக்கு புகார் செய்கிறார். போலீஸ் திருமணத்தை நிறுத்துகிறது. இருந்தாலும் ரகசிய திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார்கள். இதை அறியும் பிருத்வியும், நண்பர்களும் பெண்ணை கடத்திச் செல்கிறார்கள்.
பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.
சந்தோஷமான நிகழ்ச்சிக்கு ஒருவிதமான உடை, துக்கமான நிகழ்ச்சிக்கு ஒரு விதமான உடை அணிந்து செல்லும் பந்தல்காரர்களின் வாழ்க்கையை சொன்ன விதத்தில் இயக்குனரை பாராட்டலாம். பந்தல்காரர் சிங்கப்புலியை பிருத்வி அண்ட்கோ படுத்தும் பாடு கலகலப்பு ஏரியா. இருந்தாலும் கழிப்பிட சமாச்சாரங்களை கொண்டு செய்யப்பட்டிருக்கும் காமெடி முகம் சுழிக்க வைக்கிறது. பின்பாதி படத்தை தாங்கிப் பிடிப்பவர் சிங்கப்புலி. வில்லன் கோஷ்டிகளிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் தவிப்பு வயிற்றை பதம் பார்க்கும் காமெடி பதார்த்தம்.
பிருத்வி, அப்பா பாண்டியராஜன் மேனரிசத்தை கலந்து காமெடியும் காதலும் செய்திருக்கிறார். “அவ கழுத்துல தாலி கட்டுறப்போ, நான் சந்தோஷமா இருக்கணும்டா. அப்பதான் அவ சந்தோஷமா இருப்பா’ என்று உருகவும் வைக்கிறார். அவரது நண்பராக வரும் யோகி, சதா பேசியே வெறுப்பேற்றுகிறார். ஸ்ரீநிஷா கிராமத்து பெண் வேடத்துக்கு பொருத்தம். பந்தல்காரர் பிருத்வி மீது அவருக்கு காதல் வருவதுதான் ஏன் என்று தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் மணக்கோலத்தில் தன்னை கடத்தும் அவரிடம் எதிர்ப்பே காட்டாமல், வீட்டில் உள்ளவர்கள் தவிப்பார்களே என்ற எண்ணமும் இல்லாமல் ஆட்டுக்குட்டி மாதிரி பின்னாலேயே போவதும், தாலிகட்டும் நேரத்தில் தவிக்க விட்டு சென்ற காதலன் ஏன் சென்றான் என்றுகூட விசாரிக்காமல் முறைப்பையனுடன் மணமேடையில் உட்கார்ந்திருப்பதும் என்ன லாஜிக்கோ தெரியவில்லை.
சரவண கணேஷ் பழைய ஹிட் பாடல்கள் மெட்டில் பாட்டு போட்டிருக்கிறார். பின்னணி இசையில் விசேஷம் இல்லை. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். கிராமத்து ஏழை பையனுக்கும், பணக்கார பெண்ணுக்குமான காதல், கடத்தல், வில்லன் துரத்தல், டாட்டா சுமோ, அரிவாள், உறவுகள் கதறல், கிராமத்து திருவிழா என்ற பார்த்து சலித்த சமாச்சாரங்களைத் திரும்பவும் காட்டியிருக்கிறார் இயக்குனர். வில்லன் எடுக்கும் கடைசி நேர முடிவு மட்டும் கொஞ்சம் ஆறுதல்.