The Eye சினிமா விமர்சனம்


2002 ல் வெளியான ஹாங்காங் படமான The Eye ஆவலைத் தூண்டக்கூடிய ஹாரர் படம். உலக சினிமா என்ற பதத்துக்குள் இதனை கொண்டுவர முடியாது. வெளிநாட்டுப் படங்கள் குறித்து எழுத நமக்கு இருக்கும் ஒரே பகுதி உலக சினிமா என்பதால் வேறு வழியில்லை. ஆனால் சுவாரஸியமான படம்.
இரண்டு வயதில் பார்வை பறிபோன இளம் பெண் Wong Kar Mun. அவளது 20 வது வயதில் கார்னியா மாற்று அறுவை சிகிச்சை நடக்கிறது. பல வருடங்கள் பார்வையில்லாமல் இருந்ததால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவளால் ஒளியை எதிர்கொள்ள முடிவதில்லை. அனைத்தும் நிழலுருவாக தெரிகிறது. ஒருநாள் இரவு அவளுக்கு பக்கத்து படுக்கை நோயாளியான வயதான பெண்ணை நிழலுருவாக தெரியும் ஒரு மனிதன் அழைத்துச் செல்வதை Mun; பார்க்கிறாள். மறுநாள் காலையில் அந்த பெண் இறந்து போனது தெரிய வருகிறது. 

வீட்டிற்கு வரும் Mun சில அமானுஷ்ய விஷயங்களை எதிர்கொள்ள நேர்கிறது. அகால மரணமடைந்தவர்கள் அவளின் கண்களுக்கு தெரிகிறார்கள். அதேபோல் ஒருவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அவர்களின் மரணத்தை அவளால் தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்தப் படத்தின் முதல் ஆச்சரியம் அறுவை சிகிச்சை முடிந்ததும் முன்னுக்கு ஏற்படும் அனுபவம். பொதுவாக இதுபோன்ற கார்னியா மாற்று அறுவை சிகிச்சை முடிந்ததும் நோயாளி மெதுவாக கண்களை திறப்பார், எதிரிலிருக்கும் நபர்கள் மங்கலாக தெளிவில்லாமல் தெரிவார்கள், கஷ்டப்பட்டு மெதுமெதுவாக முழுவதுமாக கண்களை திறக்க அட்சர சுத்தமாக பார்வை தெரிய ஆரம்பிக்கும். அம்மா எனக்கு பார்வை கிடைச்சிடுச்சி.... பங்கஜம் என்னால எல்லாத்தையும் பார்க்க முடியுது.... டாக்டர் எனக்கு பார்வை வந்திடுச்சி... என்று ப்ளோருக்கும் சீலிங்குக்குமாக சம்பந்தப்பட்டவர் குதிப்பார். இப்படிதான் இதுவரை நாம் பார்த்த தமிழ் சினிமாக்கள் கற்றுத் தந்திருக்கின்றன.

ஆனால் இந்தப் படத்தில் அவளால் சரியாக கண்களை திறக்க முடிவதில்லை. பல வருடங்களாக இருளையே அனுபவப்பட்ட கண்களால் ஒளியை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. அது அப்படிதான் மெதுவாகவே பார்வை திரும்பும் என சைக்கியாரிஸ்ட் ஒருவரை Mun -க்கு பரிந்துரைக்கிறார்கள். பல வருடங்களாக பொருட்களை தொட்டுணர்ந்த Mun பார்வை வந்த பிறகும் அப்படியே நடந்து கொள்கிறாள். பார்வையால் பொருட்களை உணர்வதற்கு மூளை பழக்கப்பட வேண்டும், பழக்கப்படுத்த வேண்டும் என்கிறார் சைக்கியாரிஸ்ட்.

இந்த இடத்தில் ஒரு இடைச்செருகல். டிஸ்கவரி சேனலில் பார்வைக்கும் மூளைக்குமான தொடர்பு பற்றிய விரிவான நிகழ்ச்சி ஒன்றை நீங்கள் பார்த்திருக்கலாம். அதில் பல்வேறு விஷயங்களை உட்கிரகித்து மூளை பொருட்களைப் பற்றிய ஒரு தீர்மானத்தை உருவாக்கி வைத்திருப்பதையும், அந்த முன் தீர்மானத்தை கலைப்பதன் வழியாக மூளையை ஏமாற்ற முடியும் என்பதையும் விரிவாக காட்டியிருப்பார்கள். குழந்தைகளால் பிறந்த சில மாதங்களுக்கு எதையும் துல்லியமாக பார்க்க இயலாது. மூன்று மாதங்களுக்குப் பிறகே பொருட்களையோ, மனிதர்களையோ பார்க்க இயலும். இதனால்தான் அறுவை சிகிச்சை முடிந்ததும் அவளால் தெளிவாக பார்க்க இயலாமல் போகிறது. சரி, இனி படம்.

பெயர் The Eye , வகைமை ஹாரர், நாயகிக்கு பல வருடங்களுக்குப் பிறகு பார்வை கிடைக்கிறது. இந்த மூன்று தடயங்களை வைத்து பார்வை கிடைத்ததும் அவள் அமானுஷ்யமான எதையோ பார்க்கப் போகிறாள் என்பதை ஹாரர் ஃபிலிம் ரசிகர்கள் எளிதாக யூகித்து விடுவார்கள். ஆனால் படத்தின் போக்கை அப்படியே திருப்பிவிடுகிற காட்சியொன்றும் உள்ளது. Mun மருத்துவமனையில் இருக்கையில் கேன்சர் பாதித்த சிறுமி ஒருத்தி அவளிடம் நட்பாக இருக்கிறாள். முன்னுக்கு பார்வை கிடைத்த பிறகு இருவரையும் புகைப்படம் எடுத்துக் கொள்கிறாள் அந்தச் சிறுமி. ஒருநாள் நாம் எதிர்பார்த்ததைப் போலவே அந்தச் சிறுமியை நிழலுருவ மனிதன் அழைத்துச் செல்வதை Mun பார்க்கிறாள். அடுத்தநாள் அச்சிறுமி இறந்து போகிறாள். இறுதிச் சடங்கு முடிந்து திரும்புகையில் Mun -க்கு சிகிச்சை அளிக்கும் சைக்கியாரிஸ்ட் - இதற்குள் இருவரும் நட்பாகிவிடுகிறார்கள் - அச்சிறுமி Mun -க்கு அளித்த வாழ்த்து அட்டையை காண்பிக்கிறார். அதில் அச்சிறுமியும் Mun -ம் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படம் அவளை அதிர வைக்கிறது. அவர்கள் Mun -க்கு பார்வை தந்த டோனரை தேடிச் செல்கிறார்கள்.

அமானுஷ்ய நிகழ்வுகளை வைத்து தொகுக்கப்படும் ஹாரர் படங்களின் முடிவைப் போலவே இந்தப் படத்தின் முடிவும் சற்று சோர்வு அளிக்கக் கூடியதே. அமானுஷ்யத்தை மனித உணர்வுகளுடன் கோர்க்க முடிந்தால் மட்டுமே அப்படம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். ஷியாமளனின் சிக்ஸ்த் சென்ஸ் இதற்கு சரியான உதாரணம். புரூஸ் வில்லிஸ் ஏற்கனவே இறந்தவர் என்ற அதிர்ச்சியான உண்மையுடன் அவரது மனைவியின் தனிமை, பிரிவு ஆகியவற்றையும் நாம் அனுபவப்படுவதுதான் அப்படத்தின் இறுதிக்காட்சியை மறக்க முடியாததாக்குகிறது.

இந்தப் படத்தை Pயபே சகோதரர்கள் ((Oxide Pang, Danny Pang) இயக்கியிருக்கிறார்கள். இதனை 2008 ல் ஹாலிவுட்டில் ரிமேக் செய்தனர். இந்தியில் Naina என்ற பெயரில் வெளியானது. The Eye -ன் வெற்றிக்குப் பிறகு The Eye 2இ The Eye 10 என இரு பாகங்களை எடுத்தனர். ஆனால் அவை முதல் படத்தின் சுவாரஸியத்தை தர தவறிவிட்டன.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget