ஒவ்வொரு மாற்றத்திற்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும் - அந்த மாற்றம் நம்மை புரட்டிப் போட்டு புதுப்பிக்க உதவியிருந்தால்.. காதலில் மட்டுமே இந்த மாயாஜாலம் சாத்தியமாகும். ஒவ்வொரு காதலனையும் கேட்டுப் பாருங்கள்... என்னவள் என்னில் புகுந்த பின்தான் என்னையே நான் உணர்ந்தேன் என்று கூறுவான். அது ஏனோ தெரியவில்லை. அப்பா, அம்மா சொல்லியும் கேட்காதவர்கள் கூட காதலன் அல்லது காதலி சொல்லும்
போதுதான் உடனடியாக கேட்கிறார்கள் - காதலின் மாயமா அது?
ஒவ்வொரு காதல் நினைவும் விசேஷமானதுதான்... அதிலும் முதல் முறையாக காதலை உணரும்போதும், அந்த உணர்வை காதலியிடம் அல்லது காதலனிடம் சொல்லும்போது ஏற்பட்ட சந்தோஷம், பதட்டம், உணர்ச்சிப் பிரவாகம்.. மறக்க முடியாத பசுமையான நினைவுகள்.
காதல் குறித்து ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தபோது இன்றுதான் தேதி 14 ஆச்சே... 14 வகையான காதல் கருத்துக்களை எழுதலாமே என்று தோன்றியது...
ஒவ்வொரு காதல் நினைவுகளும் நாள் ஆக ஆக மறைந்து போகலாம்... ஆனால் நிச்சயம் இளமை மட்டும் கூடிக் கொண்டேதான் போகும் - ஒவ்வொரு நாளும் ஒரு வித அழகை சேர்த்தபடி. நான் விட்ட கண்ணீரை திரும்பிப் பார்க்கிறேன்.. அதில் நீ இல்லை.. ஆனால் என் சிரிப்பை சற்றே திருப்பிப் பார்க்கிறேன்... அதில் நீ மட்டுமே... அதை நினைக்கும்போதுதான் கண்ணில் முட்டுகிறது கண்ணீர். உனது விரல்களுக்கு இடையே இருக்கும் இடைவெளியில் என்னைப் புதைத்துக் கொள்கிறேன்.. காரணம், அந்த இடம் எனக்கானது. உன்னை என் மனதுக்குள் ஒரு வட்டம் போட்டு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் - இதயத்தில் அல்ல. காரணம், இதயம் உடையக் கூடியதாயிற்றே... உலகத்துக்கு நீ யாரோ ஒருவராக இருக்கலாம்... ஆனால் எனக்கு நீ மட்டுமே உலகம். ஆயிரம் வார்த்தை சொல்லி உன்னை நினைவு கூறலாம்.. எனக்கு அது தேவையில்லை..நிஜமான நீ மட்டுமே வேண்டும். நீ அழகாய் இருப்பதால் உன்னை நான் நேசிக்கவில்லை. உன்னை நேசித்ததால் நான் அழகானேன்... ஒரு புன்னகையால் உலகம் மாறி விடப் போவதில்லை. ஆனால் உன் சின்னப் புன்னகையால் நான் மாறிப் போனேன்.. இந்த உலகமே பைத்தியக்காரத்தனமானது -உன்னையும், என்னையும் தவிர - காரணம் நம்முடன் காதல் இருக்கிறதே நாம் தனித்துப் பிறந்தோம்.. தனித்தே வாழ்கிறோம்.. தனித்தே மரிப்போம்.. ஆனால் நம்மை சேர்த்திருப்பது காதல் மட்டுமே. என் மீது கோபம் வந்தால் சீக்கிரம் மன்னித்து விடு.. அழகாக முத்தமிடு... ஆழமாக காதலி...அன்போடு என்னை அரவணை..! உன்னை நேசிப்பது சுவாசிப்பது போல..சுவாசத்தை நிறுத்த முடியுமா...?