தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14 கோச்சடையானின் ட்ரெய்லர் வெளியாகும் என பெரும்பாலான ஊடகங்கள் எழுதின. கோச்சடையானின் இன்றைய நிலை ஓரளவு தெரியும் என்பதால் அப்படியொரு செய்தியை நாம் வெளியிடவில்லை. ட்லெய்லரை இன்னும் சில வாரங்களுக்கேனும் எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மை.
இதனை படத்தின் இயக்குனர் சௌந்தர்யா தனது ட்விட்டரில் உறுதி செய்திருக்கிறார். சிலர் குறிப்பிட்ட மாதிரி ஏப்ரல் 14 கோச்சடையான் ட்ரெய்லர் வெளியாகும் என்பது வதந்திதான். ஆனால் இந்த வாரத்தில் தலைவரின் சில அசத்தலான படங்களை வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோச்சடையான் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகும் அனிமேஷன் படம். முதலில் ரஜினியின் உருவத்தை - இன்றைய ரஜினியின் தொள தொள உடம்புக்கு சம்பந்தமில்லாமல் கட்டுமஸ்தாக சிக்ஸ்பேக்கில் வரைந்தனர். காலை தூக்கி சிவன் போஸில் ரஜினி நிற்கும் புகைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். சிக்ஸ்பேக்கில் முட்டியை நெஞ்சுக்கு மேலாக தூக்கி அட்டகாசமாக இருப்பார். நிஜத்தில் தலைவரால் இடுப்புக்கு மேல் முட்டியை தூக்குவதே சிரமம். இது ஹரியின் படத்தில் வரும் வடிவேலு காமெடி மாதிரி, வச்ச உடம்பு கிடையாது, வரைந்த உடம்பு. இந்த இமேஜில் ரஜினியின் அங்க அசைவுகளை தனியாக படம் பிடித்து அதில் சூப்பர்இம்போஸ் செய்வார்கள்.
அப்படி தொழில்நுட்பத்தால் ஊட்டி வளர்த்த தலைவரின் அட்டகாசமான புகைப்படத்தைதான் சௌந்தர்யா வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். அதை வைத்து ரஜினியை குஸ்திக்கு யாரும் அழைக்காதீர்கள். பாவம் தலைவர்.