சித்திரை தமிழ் மாதம் நட்சத்திரப் பலன்கள் 2013


விஜய வருடம் சித்திரை மாதம் ஆரம்பம் மகர லக்னமாகி கிரக நிலைகள் பின்வருமாறு அமைந்துள்ளன.

‘‘விசய வாண்டு வாணிபந் தழைக்கு
மெனினும் அகச் சலனம் கூடும்-
வெப்பமது மிகுத்திருக்க அகமது
மெத்தமே நோவுமே - நீருக்குப்
போராடணுங் கண்டீர் - குடிதமக்கு

குபேர சம்பத்து கூடி பாப விமோசனங்
காணுமே. உண்டிக்கொரு குறைவிலையே’’

-என்ற பாடலின் மூலம் சற்று வெப்பநிலை அதிகரித்தாலும் குடிமக்கள் சுபிட்சத்திற்கு குறைவின்றி வாழ்வர்; உணவுப் பொருட்கள் இவ்வாண்டு குறைவின்றி நிறைந்திருக்கும் என்பதினால் குடிமக்கள் தம் துயர் துடைக்கப்படும் என பொருள். இனி நட்சத்திரப் பலன்களைக் காண்போம்:

கிருத்திகை - உத்திரம் - உத்திராடம்:

‘‘முயன்று முடிப்பீர் கருமத்தை-
தடை நின்று சோதிப்பினுஞ்
செயமுண்டு கடையில் சோர்வ
கற்றே! ஆஸ்தி தம்மாலாதாயங்
காணலாங் கண்டீர் - பலவழி
பொறையும் தன்னால் போட்டியுங்
காணுமாயினு விஜயதனில் செயமுண்டு
தப்பாதே - கடனுபாதை யறுபட திக்
விசயஞ் சேரும் பாரே.’’

என பாம்பாட்டிச் சித்தர் பாடுகின்றார். பலவிதத்தில் தடைகள் தோன்றி சோதனை செய்தாலும் தமது முயற்சியினால் தடைகளை உடைத்தெறிந்து இந்த நட்சத்திர அன்பர்கள் வெற்றி வாகை சூடுவார்கள். போட்டி, பொறாமை என்று ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இல்லை. இந்த விஜய ஆண்டு வெற்றிக்கு வித்திடும் ஆண்டும் ஆகும். கடன் உபாதைகள் தீரும் காலமிது. பல ஊர்களுக்கு யாத்திரை செல்ல ஏதுவான மாதமிது என்பதாம்.

ரோகிணி - அஸ்தம் - திருவோணம்:

‘‘குறைவில்லை குதூகலமது பெருகுமே 
இன்பமாய் இல்லறமது தேற சுபமான
கருமமுங் காணலாகுமே. ஆஸ்தி யண்டும்
கூட்டாளியால் ஏற்றமுண்டாம் - மேலோர்
பாராட்டும் கிட்டும்; பணி மேன்மை
யுண்டே: சற்று மேனி பீடைகாணு
மாயினுங் கண்டமேது கூறு?’’

குடும்பத்தில்  குறைவில்லாத ஆனந்தம் சேரும். சுபகாரியங்களுக்கான ஆரம்ப வேலைகளை மேற்கொள்ளும் காலம் இது. பொருட்சேர்க்கை கிட்டும். நண்பர்கள், பணிவழி கூட்டாளிகள் போன்றவர்களால் மேன்மை கிடைக்கும். உடல் சுகம் பலவீனமாக இருந்தாலும் ஆபத்து எதுவும் இல்லை என்கிறது இந்தப் பாடல்.

மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம்:

‘‘ஊருண்டு உற்றார் தம்மால் உண்டு-
வஞ்சகர் தம்மால் வாழ்விலுஞ்சோதனை காணும்
கூடிநின்று கெடுப்பாரை யறிந்து
வொதுங்கி நட - விரய காலமிது -
நன்மை செய்தே நிற்க பழியுஞ்சூழும்
பொறுக்க பின்னை காலமிது மேன்மையுண்டே.’’

நெருக்கமான சொந்தத்தாலும் சங்கடம் வரலாம். வஞ்சகர் தம்மால் பலவித சோதனைக்கு ஆளாகினாலும் மீண்டுவிடக்கூடிய காலம் இது. தீயோரை புத்தியால் அறிந்து சற்று எட்டிப் போவது மேன்மை பயக்கும். நன்மை செய்தாலும் கெட்ட பெயர் சம்பாதிக்க வைக்கும் இந்த மாதம். ஆகவே, சற்று எச்சரிக்கையாய் இருப்பின், பின்வரும் காலத்தில் சுபிட்சம் தோன்றும் என்பதாம்.

திருவாதிரை - சுவாதி - சதயம்:

‘‘கூடுமே மங்களமது மனையிலே
கடனுபாதை மங்குமே - எண்ணிய
கருமங்கள் அகங்குளிர நடந்தேறுமே
உற்றாரொடு ஊராருங் கூடி
யும்மோடின்புறப் பாரு. பணிமேன்மை
சேருமதனோடு பெருத்த தனமுங்
கிட்டுங் கண்டீர் - கருமந்தன்னை
எண்ணித் துணிய என்ன குறையீண்டே.’’

என்கின்றார், கொங்கணர். வீட்டில் மங்களகரமான காரியங்கள் நடக்க அச்சாரமிடும் மாதம் இது. கடன்கள் கட்டுக்குள் வரும். மனம் அமைதி பெறும் வகையில் காரியங்கள் நடந்திடும். சொந்த பந்தங்களுடன் மகிழ்வை பகிர்ந்து கொள்ளும் மாதம் இது. தொழில் முன்னேற்றங் காணும். பெரிய லாபஞ்சேரும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து செயல்பட வெற்றி நிச்சயம்.

புனர்பூசம் - விசாகம் - பூரட்டாதி:

‘‘சிறுவிரயமே யாயினுந் நன்மை
யுண்டாம். வாக்குப் பலிதமுண்டாம்-
தீங்கிலாத் திங்களிது திரவியந் தந்து
காரிய சித்தி யீயுமன்றோ. பணியாளர்
தம் பணிமேன்மை பெற பாரே - சர்ப்ப
கிரக கோளாறு தம்மால் வாரிசால்
பீடை சேருமே: கணக்கிட்டு
காலத்தை செம்மை யாக்குவீரே.’’

-இப்பாடலால் சிறு பொருள் விரயம் ஏற்படும் வாய்ப்புண்டு எனத் தெரிகிறது. சொன்ன சொல்லை காப்பாற்றும் காலம் இது. உத்தியோகத்தில் இருப்போர் மேன்மை பெறும் மாதம் இது. சர்ப்ப கிரகமாம் ராகு-கேதுவின் கோளாறினால் குழந்தைகளுக்கு பீடை நேரும். பெரியோர்கள் ஆலோசனை, அறிவுரைகளைக் கேட்டு பின்பற்றினால் முன்னேற்றம் காணலாம் என்பதாம்.

பூசம் - அனுஷம் - உத்திரட்டாதி:

‘‘கருமமது விக்கினங் காணுமே
மெய் மொழி காண்பதறிவு - சொல்லால்
குற்றங் காணுமிடர் வந்து வாட்டுமே-
உறவால் சோதனை வந்தகலப் பாரீர்-
தாரவழி விரயமுங் காணலாகுமே,
புத்தி கூராக்கி நிதானமே யாக்கமென
நிற்பர் ஜெயம் பெறப் பாரே.’’

-சற்று சிரமமான மாதம் இது. செலவினங்கள் கூடும் காலம். எடுத்த காரியம் தாமதமாகும். நல்லதை சொன்னாலும், சொல்லில் குற்றம் கண்டு, பிறர் ஏசும் மாதமிது. தாம்பத்ய வழி உறவினரால் சற்று கூடுதல் செலவுகள் வரலாம். எந்த காரியத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க ஆதாயம் சேரும்.

ஆயில்யம் - கேட்டை - ரேவதி:

‘‘அலைச்சல் காணுமாயினும் ஆதாயமது
அற்பமே யடுத்தார் நலத்தில் கவனங்
காட்டி தந்நலமிழக்குங் காலமிது.
தந்நலம் பேணுவார் நேசம்
மிகுத்து வருந்திங்களிது, கைவிட்டு
போன பொருளுமேய்க்கும். குருதி
வழி உறவு தன்னால் எந்நாளுஞ்
சேமக் குறைவாயினு மவரோடு வாதமகற்று
நூதனப் பணி சேருமாயினும்
ஆதாயதான் தாமதமாகுமே, பொறுத்திருக்க
பெரும் கீர்த்தி வந்தண்டுமே.’’

-சற்று அலைச்சல் அதிகம் வந்து வாட்டம் தரும். அடுத்தவருக்கு உதவி செய்து தனது சுகத்தை கெடுக்கும் நேரமிது என்பதினால் எச்சரிக்கை தேவை. கடன்கள் வந்து சேருவதில் தாமதம் தோன்றும். நல்ல வியாபாரங்கள், தொழில்கள் அமைய வித்திடும் மாதமிது. எனினும் உடனடியான லாபம் ஆதாயமிராது. சகோதர, சகோதரி வழியில் எல்லா காலத்திலும் மனக்கசப்பு இருக்கும் என்றாலும் இந்த மாதத்தில் வாக்குவாதம் தவிர்ப்பது சேமம் தரும். பொறுமையின் அவசியத்தை உணர்த்தும் திங்கள் இது.

அசுவினி - மகம் - மூலம்:

‘‘சோதனை பலவந்து விலகி
பேரறிவு கொண்டிருக்க, நட்பால்
கீர்த்தியுஞ் செல்வமுஞ் சேருமே-
பெண்டிரால் மேன்மையுஞ் சுபிட்சமு
மண்டப் பாரீர் - கீர்த்தியுந் நட்புங்
கூடி முயங்க, மேலான திரவியமும்
வந்தண்டுமே. பலவழி திட்டமும்
பலன் தர மேனி சுபிட்சத்துச்
சற்று கவனங் கொள, மூட்டு வாதச்
சுரமது கட்டில் கிடக்கு முணரு-
சீரண உறுப்பு சீர் கெட விழியில் பீடை
கோர்க்க மதிவலியால் மாண்புடனே
வாழ்வாங்கு வாழலாகுமே.’’

-என்கிறார், அகத்தியர். ஆரம்ப காலத்தில் பட்ட அனுபவம் நல்ல அறிவாற்றலை தந்திருக்க, கீர்த்திக்கும் தனத்திற்கும் இனி குறைவு வாராது. பெண்களினால் நல்ல முன்னேற்றம் சேரும். பெண்களுக்கும் சிறப்பான காலம் இது. திரவியம் பல வழிகளில் சேர்த்தாலும் மூட்டு வலி, முதுகு, இடுப்பு போன்ற தொல்லைகளுக்கு ஆளாக நேரும். சற்று சிரத்தையுடன் ஆராய்ந்து செயல்பட, வியாதிகள் விலகும். குறிப்பாக குடல், கண் போன்ற இடங்களில் தோன்றும் உபாதைகள் அகலும். பயமே வேண்டாம் என்கிறது நாடி.

பரணி - பூரம் - பூராடம்:

‘‘இறையருளுண்டு - குறைவேது கூறு
ஒத்தாசைக் கொருவர் இலையாயினும்
உன்னாலுயர்ந்து யுனக்கு தீங்கே
யெண்ணுவாரை இக் காலஞ் செயமே
கொள்வாய். பெண் சுகமுஞ் சேரும்
பின் தொல்லையாய் நிற்கும்.
அருச்சுனரை ஆராதிக்க தடையான
மணமுந் தாம்பத்யமு மின்பங் காணுமே-
பிரிந்தார் பிரிவு அகலுமே. பீடை
விலகுமே. ஏவலும் பில்லியு மகல
எந்நாளுமின்பந்தானே.’’

-என்றார், குதம்பை சித்தர். அருச்சுனர் என்பது கண்ணனையே காட்டும். கிருஷ்ண பக்தி செய்து தாம்பத்ய சுகத்தை அடையலாம். தடையான திருமணம் நடக்க ஏதுவாகும். பிரிந்து நிற்கும் உறவும் நட்பும் காதலும் பிரிவைத் தாண்டி சேர்ந்து இன்பம் காணும். நோய் நொடிகளுக்கு விடிவு காலம் கிட்டும். சூனியங்கள், எதிரிகளின் தொல்லைகள் முழுதும் அறுபடும் காலமிது என்பதாம்.

‘‘ராம நாம சங்கீர்த்தனஞ்
செய்வதுஉம்; சங்கர னோடு
உடையவரை ஆராதிப்பதுவும்
உற்ற பிணி யகற்றுதலுடனே
எண்ணிய யெண்ணமெலாம்
திண்ணமென யீடேறுமிதற்கு
அனுமன் சான்றே.’’

-எனப் பேசுகின்றார் கபிலமுனி. இந்த சித்திரை மாதம் முழுக்க ராம நாம ஆராதனை செய்பவருக்கு பெரும் செல்வம் சேருகின்றது. ஆதிசங்கரனாரை, ஸ்ரீராமானுஜரை ஆராதனை செய்தால் எப்படிப்பட்ட நோயும் அகல்கின்றது. எப்படிப்பட்ட காரியத்தை மனதில் எண்ணி நின்றலும் ஆஞ்சநேயன் மீது சத்தியமாய் ஈடேறும் என்ற பொருள் கொண்ட பாடல் இது.

மேஷம், சிம்ம ராசிக்காரர்கள் கண்டிப்பாக ராம நாம கீர்த்தனை செய்வது தக்கது. ரிஷபம், கடக ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு நிற்பது பெரு நன்மை பயக்கும். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள், ராமானுஜ நூற்றந்தாதியை பாராயணம் செய்வது பெருஞ்சிறப்பை தரும். விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் ஆதிசங்கர பகவத் பாதாளை சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பூஜிப்பது பெருஞ் செல்வத்தை சேர்க்கும். 

மகர ராசிக்காரர்கள் அட்சய திருதியை திதியன்று சொர்ண லட்சுமி பூஜை புரிந்து வெண்பொங்கல் தானம் செய்தால் குறைவற்ற தனம் பெறலாம். கும்ப ராசிக்காரர்கள் கத்தரி ஆரம்ப நாளன்று (4.5.2013) தாமரைப் பூவை சமர்ப்பித்து, சூரிய நாராயண பூஜை புரிந்து, பால் பாயசம், சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து விநியோகம் செய்ய தீராத நோய்கள் தீரும்  என்பது அகத்தியர் வாக்கு.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget