அடிக்கடி நோய் ஏற்படுவதை தவிர்பது எப்படி


உங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ உங்கள் வீட்டு சமையல் அறை சுகாதாரமற்று இருக்கலாம். அங்கு சமைக்கப்படும் உணவுகளை நீங்கள் உண்டால், உங்களுக்கு அடிக்கடி நோய் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.  புட் பாய்சன் எனப்படும் உணவில் விஷத்தன்மை ஏற்படுதல், அலர்ஜி,   வயிற்றுக் கோளாறு, நோய்த் தொற்று, எலிக்காய்ச்சல் போன்ற பல்வேறு
பாதிப்புகள் சமையல் அறை சுத்தமின்மையால்தான் ஏற்படுகின்றன. சமையல் அறையில் எதை, எப்படி சுத்தப்படுத்த வேண்டும் என்று பார்ப்போம். 

* காய்கறி, பழங்களை கழுவித் தான் பயன்படுத்துவோம். அதுமட்டும் போதாது. அவைகளை நறுக்க பயன்படுத்தும் கத்தியும் தூய்மையாக இருக்க வேண்டும். நறுக்கிய பழங்களை பரிமாறும் பாத்திரங்களும் தூய்மையாக இருக்கவேண்டும். 

பச்சை காய்கறிகளை நறுக்கும்போது அதில் இருக்கும் நுண்கிருமிகள் கத்தியிலும், அரிவாள் மனையிலும் படிந்துவிடும். அதை கழுவாமல் அப்படியே வைத்திருந்தால் அவை பெருகிக்கொண்டே இருக்கும். அதே கத்தியை கழுவாமல் பயன்படுத்தும் போது அந்த நுண்கிருமிகள் புதிதாக   வெட்டும் பொருளில் பதிந்து விடும். அவைகளை சாப்பிடும்போது, வயிற்றுக்குள் சென்று பல்வேறு விதமான நோய்களை உருவாக்கும். 

* சமையலறை ‘சிலாப்பை’ அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டியது அவசியம். சுத்தமான துணியால் துடைத்து அழுக்கை போக்க வேண்டும். 

* ‘ஸ்டவ்’ அடுப்பை சுற்றியுள்ள பகுதியை தினமும் சுத்தப்படுத்த வேண்டும். துடைக்கும் துணிகளை அவ்வப்போது துவைத்து பிறகு பயன்படுத்துவது நல்லது. சிலாப் மீது வைத்து எந்த பொருளையும் நறுக்கக்கூடாது. நறுக்கி, உண்டால் சுகாதார சீர்கேட்டால் நோய்கள் உருவாகும். 

* பருகும் நீர் மட்டுமல்ல, சமையலுக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரும் தூய்மையாக இருக்க வேண்டும். கேன் தண்ணீரை பயன்படுத்துகிறவர்கள், கேனை மாற்றும் போது கீழிருக்கும் ‘டேப்’ பகுதியை கழுவி சுத்தப்படுத்த வேண்டும். கொதிக்கும் நீரில் சிறிது சோடா உப்பு சேர்த்து கேனை ஊறவைத்து நன்றாக கழுவி பயன்படுத்தவேண்டும். 

* பாத்திரங்களை துலக்கும் சோப்புகள், பாத்திரங்களில் ஒட்டியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சோப்பு சிறிதளவேணும் ஓரங்களில் ஒட்டியிருந்தால் நாம் சமைக்கும் உணவோடு கலந்து விடும். அதனால் பலவிதமான ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு, வயிற்றிற்குள் சென்று புட் பாய்சன் ஏற்படும். 

* வெளியில் சென்று சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்றுக் கோளாறு களுக்கு பெரும்பாலும் தூய்மையின்மையே காரணம். ஒரு சிறு குடும்பத்தில் சமையலறையை தூய்மையாக நிர்வகிக்க முடியாத போது ஒரு நாளைக்கு பலபேர் சாப்பிடும் இடங்களில் எப்படி தூய்மையை கடைபிடிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுதல் அவசியம். 

* பாத்திரங்களை கொட்டிவைத்து கழுவும் 'சிங்க்'கை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். அதை சுத்தமாக்கிய பின்பே அதில் பாத்திரங்களை வைத்து கழுவ வேண்டும். பிசுபிசுப்பு படிந்த பாத்திரங்களை அதிக நேரம் வைத்திருக்காமல் உடனே கழுவி துடைத்திடவேண்டும். 

* உணவுப் பொருட்களை பாத்திரங்களில் பல மணி நேரம் வைத்திருந்தால் அதில் சிலவகை பாக்டீரியாக்கள் உருவாகும். அது நேரம் அதிகமாகும்போது பன்படங்கு பெருகும். இதனால் பலவித வயிற்று உபாதைகள் உருவாகும். 

* 'சிங்க்'கில் தண்ணீர் தேங்கக்கூடாது. தேங்கும் தண்ணீரில் பாத்திரங்களை கழுவவும்கூடாது. அதுபோல் பாத்திரங்களை துலக்கிய பின்பு சிங்கை நன்றாக கழுவி உலரச் செய்யவேண்டும். சிங்கை கழுவுவதற்கென்று ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் கடைகளில் உள்ளன. அவைகளை வாங்கி பயன்படுத்துங்கள். இதில் சுத்தம் செய்யவும், கிருமிகளை அழிக்கவும் இரண்டு விதமான சக்திகள் கொண்ட பொருட்கள் உள்ளன. 

* துலக்கிய பாத்திரங்களில் இருக்கும் நீரை வடித்து, சில மணி நேரம் வெயிலில் காயவைத்த பின்பே பயன்படுத்த வேண்டும். வெயில் நல்ல கிருமி நாசினி. சமையலறைகளில் ஜன் னல்களை திறந்து வைத்து சூரியன் உள்ளே படும்படி இருக்க வேண்டும். அப்போது தான் நோய்க்கிருமிகள் அழியும். 

*  கெட்டுப் போன காய்கறிகள், பழங்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அவற்றை குப்பையில் போட்டு விடவேண்டும். அதில் இருக்கும் கிருமிகள் உற்பத்தியாகி பல மடங்கு பெருகி மற்ற உணவு பொருட்கள் மீது பரவும். இது நம் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் செயல். அதனால் அழுகிய பொருட்களை உடனே அகற்றிவிடவேண்டும். 

* சிங்க்கின் மேற்புறத்தை மட்டும் கழுவி விட்டு பைப் லைனை விட்டுவிடக் கூடாது. உணவுப் பொருட்கள் பைப்லைனில் அடைத்துக் கொள்வது நல்லதல்ல. பைப் லைனை சுத்தம் செய்ய ஆன்டிபாக்டீரியா லிக்யூட் பயன்படுத்த வேண்டும். 

அந்த லிக்யூடை பைப் லைனில் விட்டு சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரை பைப் லைனில் ஓட விட்டால் பைப் லைன் தூய்மையாகிவிடும். இந்த திரவத்தை பயன்படுத்தும் வாய்ப்பில்லாதவர்கள் சிறிது சோப்பு தூள், சிறிதளவு அரிசி மாவு இரண்டையும் தண்ணீரில் கலந்து பைப்லைனில் ஊற்றவேண்டும். பின்பு நிறைய வென்னீரை விட்டு கழுவ வேண்டும். 

* காய்கறி, பழங்களை புதிதாக வாங்கி, நன்றாக கழுவி பயன்படுத்துங்கள். மலிவான விலைக்கு வதங்கல்களை வாங்கி சாப்பிடுவது உடலுக்கு ஏற்றதல்ல. பூசனம் பரவி இருந்தால் அந்த பகுதியை மட்டும் வெட்டி நீக்கிவிட்டு மீதமுள்ளதை சாப்பிடுவது நல்ல பழக்கம் இல்லை. 

இந்த பூசனம் என்பது ஒரு பொருள் மீது படர்ந்து விட்டால் அந்த பொருளின் உட்பகுதியிலும் சென்றிருக்கும். ஒரு பகுதியை வெட்டுவதால் மட்டும் அது நீங்கி விடாது. அதனால் பூசனம் ஏற்பட்ட உணவை முழுமையாக தவிர்த்திடுங்கள். 

* கடையில் வாங்கும் எல்லா உணவுப் பொருட்களையும் அதன் காலாவதி தேதியைப் பார்த்து வாங்குங்கள். காலாவதி ஆன எந்தப் பொருளையும் சாப்பிடாதீர்கள். காலாவதியான உணவுப் பொருட்களை வாங்கிச்சாப்பிடுவது, ஆபத்தை விலைக்கு வாங்கிக்கொள்வதாகும். 

* பழைய மாவு, ரவை போன்றவற்றில் வண்டு, கிருமிகள் தோன்றி விட்டால் அதை சலித்து காயவைத்து மறுபடியும் பயன்படுத்தாதீர்கள். ஒரு கிருமி வெளியேறும் போது பல முட்டைகளை வைத்து விட்டுத் தான் போகும். அது கண்ணுக்குத் தெரியாத கிருமிகள். 

சலித்தாலும் நீங்காது. ஆரோக்கிய வாழ்வின் ரகசியமே சுத்தமான கிச்சனில் இருந்து தான் தொடங்குகிறது. இதை தெரிந்து கொண்டால் நோய்களை நிரந்தரமாக உங்களிடம் இருந்து அகற்றலாம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget