மே 1 அஜீத்தின் 42 வது பிறந்தநாள். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி நடிகராக இருப்பதே ஒரு சாதனைதான். இந்த பிறந்த நாளில் அவரின் சில அல்டிமேட் விஷயங்களை பார்க்கலாம். அஜீத்தின் ரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் அவரது பிடித்த பாடல், பிடித்த நடிப்பு என்று ஒரு லிஸ்ட் இருக்கும். அதிகமானவர்களுக்குப் பிடித்த படம்
, பாடல், நடிப்பு... எதுவாக இருக்கும் என்ற தேடலின் விளைவுதான் இந்த அல்டிமேட் லிஸ்ட்.
அல்டிமேட் ஓபனிங்
எனக்குன்னு ஓபனிங் சீன் பில்டப் வைக்காதீங்க என்று இப்போதெல்லாம் இயக்குனர்களிடம் கதை கேட்கும் போதே அஜீத் சொல்லிவிடுகிறார். பல படங்களில் அஜீத்தின் ஓபனிங் காட்சி அட்டகாசமாக அமைந்திருக்கிறது. ஆனால் அல்டிமேட் என்றால் அது தீனா படத்தில் வருவதுதான். அடை மழையில், ட்ராபிக் ஜாமில், கார் கண்ணாடியை உடைத்து அந்த சின்ன கண்ணாடி விரிசல் வழியாக அஜீத்தின் கண்களை காட்டும் காட்சி... ரசிகர்கள் திரையரங்கில் விசிலுடன் வரவேற்ற ஓபனிங் காட்சி. அதுவே நமது சாய்ஸும்.
அல்டிமேட் நடிப்பு
வாலி முதல் மங்காத்தாவரை பல படங்களை நடிப்புக்காக உதாரணம் சொல்லலாம். என்றாலும் வரலாறு படத்தில் நளினமான பெண் தன்மையுடன் கூடிய அஜீத்தின் நடிப்பு மறக்க முடியாத ஒன்று. பாடிலாங்வேஜ் அதிகமில்லாத நடிகர் என்றொரு விமர்சனம் அஜீத் மீது உண்டு. வரலாறு படத்தின் பெண்மை நிரம்பிய கதாபாத்திரத்தில் அஜீத் அதற்கு பதிலளித்திருப்பார். ஆக, அதுவே அஜீத்தின் நடிப்புக்கான சிறந்த உதாரணம்.
அல்டிமேட் வில்லன்
மங்காத்தா. இதற்கு மட்டும் மாற்று கருத்து இருக்காது. முதல் படம் செய்கிற ஹீரோவே வில்லனாக படம் நெடுக வருவதை விரும்புவதில்லை. ஜனங்களுக்குப் பிடிக்குமோ, வில்லனாக முத்திரை குத்தி விடுவார்களோ என்ற பயம். ஆனால் மங்காத்தாவில் அதனை அனாயாசமாக அஜீத் செய்தார். காதலியின் கண்முன் காதலியின் தந்தையை ஓடுகிற காரிலிருந்து உருட்டிவிடுகிற காட்சியில் நடிக்க (கமல் தவிர்த்து) எந்த ஹீரோவும் உடன்பட மாட்டார்கள்.
மங்காத்தாவில் செஸ் ஆடிக்கொண்டே தனது திட்டத்தை தானே சொல்லிப் பார்க்கும் காட்சி அஜீத்தின் வில்லன் நடிப்பின் உச்சம் எனலாம். மங்காத்தாவின் கிளாஸ் சீன்களில் அதுவும் ஒன்று.
அல்டிமேட் ஸ்டைல்
கடந்த பத்தாண்டில் ஸ்டைலிஷான நடிப்பு என்றால் அது பில்லாவாகத் தான் இருக்க முடியும். பில்லா படத்தை முழுதாக பார்க்க வேண்டியதில்லை. மை நேம் இஸ் பில்லா பாடலை மட்டும் பார்த்தால் போதும். கையை விரித்தபடி அஜீத் வரும் காட்சி, கால் மேல் கால் போட்டபடி பக்கவாட்டில் பார்க்கும்விதம் என ஒவ்வொரு அசைவிலும் ஸ்டைலிஷான அஜீத்தை பார்க்கலாம். அஜீத்தின் காஸ்ட்யூம் சிறப்பாக அமைந்ததும் இந்தப் படத்தில்தான்.
அல்டிமேட் காமெடி
அட்டகாசம் படத்தில் வரும் ஆட்டோ காமெடி, வாலியில் விவேக்குடன் செய்யும் காமெடி என பலவற்றை குறிப்பிடலாம். ஆனாலும் வில்லன் படத்தில் வரும் காமெடிதான் டாப். இதுதானா சார் உங்க டக்கு என்று கருணாஸை புலம்ப வைத்த காமெடிக்குதான் முதலிடம்.
அல்டிமேட் ரொமான்ஸ்
“அவ மவுத் ஆர்கன் வாசிச்சுகிட்டிருந்தா. உனக்கு வாசிக்க தெரியுமான்னு கேட்டா.”
“நீ என்ன சொன்ன...? ”
“தெரியும்னேன். ”
“ஏன் தெரியும்னே? தெரியும்னு சொல்ற ஆம்பளைங்களைவிட தெரியாதுன்னு சொல்ற ஆம்பளைங்களைதான் பொண்ணுங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். நீ மட்டும் தெரியாதுன்னு சொல்லியிருந்தா.... ”
கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களா? வாலியில் வரும் டூ இன் ஒன் ரொமான்சுக்கு நிகரில்லை. அஜீத் படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் இப்போது குறைந்துவிட்டன. வயது காரணமாக அஜீத்தே அதனை தவிர்க்க ஆரம்பித்திருக்கிறார். காதல் என்றதும் அஜீத் ரசிகர்களுக்கு மட்டுமல்ல மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கும் நினைவுக்கு வருகிற வாலிக்கே நமது ஓட்டு.
அல்டிமேட் பாடல்
எதை எடுப்பது... எதை விடுவது...? தீனா படத்திலேயே பல பாடல்கள். வத்திக்குச்சி பத்திக்காதுடா... சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்... மங்காத்தாவின் ஆடாமல் ஜெயித்தோமடா... சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் பாடல்களின் சாயலில், சிச்சுவேஷனில் அஜீத்தே வேறு படங்களில் நடித்திருக்கிறார். அமர்க்களத்தில் வரும் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்... ரொம்பவே ஸ்பெஷல். அதேபோன்ற சிச்சுவேஷன்; உணர்ச்சி வேகம் வேறு பாடல்களில் இருந்தது இல்லை.
என்றாலும் நாம் தேர்வு செய்வது ஆசையில் வரும் கொஞ்சநாள் பொறு தலைவா. காதலை அதன் உணர்வோடும் சதையோடும் சொல்லும் பாடல். அஜீத்தின் ஹேண்ட்ஸமான மூவ்மெண்ட்ஸ். வாலியின் அட்டகாசமான வரிகள். சரணத்தில் வாலி விளையாடியிருப்பார்.
நேத்துக்கூட தூக்கத்துல
பார்த்தேன் அந்த பூங்குயில
தூத்துக்குடி முத்தெடுத்து
கோர்த்து வச்ச மாலைப்போல
வேர்த்துக் கொட்டி
கண்முழிச்சுப் பார்த்தா... அவ
ஓடிப்போனா உச்சி மலைக்காத்தா...
சொப்பனத்தில் இப்படிதான்
எப்பவுமே வந்து நிப்பா
சொல்லப்போனா பேரழகி
சொக்கத்தங்கம் போலிருப்பா...
வத்திக்குச்சி இல்லாமலே
காதல் தீயை பத்த வச்சா...
தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள
தேசிய கொடிபோல பொத்தி வச்சேன் நெஞ்சுக்குள்ள...
கனவில் வருகிற காதலி கனவு கலைந்ததும் காணாமல் போவதை இதைவிட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது. தேசிய கொடி போல காதலியை நெஞ்சுக்குள் பொத்தி வைத்த உவமை அருமை. அடுத்த சரணம் அதைவிட அட்டகாசம்.
என்னோடுதான் கண்ணாமூச்சி
என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி
கை கொடுப்பாள் தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்து வந்து போறா.. அவ
சந்தனத்தில் செஞ்சு வச்ச தேரா...
என்னுடைய காதலியை
ரொம்ப ரொம்ப பத்திரமாய்
எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன்
வண்ண வண்ண சித்திரமாய்
வேறொருத்தி வந்து தங்க
எம்மனசென்ன சத்திரமா..?
வாலியின் வரிகளும், ராஜு சுந்தரத்தின் கோரியோகிராஃபும், அஜீத்தின் நடனமும், நடுவில் வரும் காதலியின் அறிமுகமும் இதனை மறக்க முடியாத பாடலாக்குகிறது.