இசக்கி சினிமா விமர்சனம்

முதலாளி சித்ரா லட்சுமணனுடன், மதுரை வருகிறார், கார் டிரைவர் சரண்குமார். அங்கு ஆஷ்ரிதாவைப் பார்க்கிறார். கண்டதும் காதல். முதலாளியிடம் விஷயத்தை சொன்னதும், பெண் கேட்டு அவள் வீட்டுக்குச் செல்கிறார். அஷ்ரிதா, உள்ளூர் தாதா மகள். இதனால், அவர்கள் இருவரையும் அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். என்றாலும், சரண்குமார் விடுவதாக இல்லை. ஆஷ்ரிதாவை கடத்திச் செல்கிறார். அப்போது, ‘என் மனசுல இசக்கி மட்டும்தான் இருக்கான்.
அவனுக்காகதான் வாழ்ந்துகிட்டிருக்கேன்’ என்கிறார் ஆஷ்ரிதா. ஏற்கனவே சரண்குமாரும், ஆஷ்ரிதாவும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிராக நேசித்தவர்கள். பிறகு அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது எப்படி? இப்போது ஆஷ்ரிதாவுக்கு சரண்குமாரை அடையாளம் தெரியாமல் போனது ஏன்? அவர்களுடைய காதல் நிறைவேறியதா என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது, கிளைமாக்ஸ்.

ஆக்ஷன் ஹீரோ கதையில், சரண்குமார் ஓரளவு சமாளிக்கிறார். ஆஷ்ரிதாவைப் பாத்ததும் காதல் என்று துரத்த ஆரம்பிக்கும்போது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், அதற்கான காரணத்தை அறியும்போது சமாதானமாக முடிகிறது. ஆனால், தான் யார் என்பதை இரண்டு வார்த்தையில் சொல்லிவிடலாம். அதில் ஏன் தயக்கம் என்று தெரியவில்லை. அவர் தன்னை விரும்புகிறாரா என்று தெரிந்துகொள்ள காத்திருப்பதாகச் சொல்லும் அவர், பிறகு ஏன் பெண் கேட்டு அவரது வீட்டுக்குச் செல்கிறார் என்பதற்கான விளக்கம் இல்லை. என்றாலும், முதலாளியுடன் டிரைவராக வரும் எபிசோட்  சுவாரஸ்யம். பிளாஷ்பேக்கில் சரண்குமாரின் நடிப்பு பிரமாதம். மூளை வளர்ச்சியில்லாத இளைஞனாக நடிக்க நிறைய மெனக்கெட்டிருக்கிறார். அப்படி இருந்த அவர், திடீரென்று எப்படி ஆக்ஷன் ஹீரோ ரேஞ்சுக்கு மாறினார் என்பது தெரியவில்லை.

ஆஷ்ரிதா, நடிப்பை நம்பியிருக்கிறார். முதலில் சரண்குமாரை வெறுப்பதும், பிறகு அவர்தான் இசக்கி என்று தெரியும்போதும் அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் தவித்து பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். யோகிராம், ‘பசங்க’ சிவகுமார் இருவரும் வழக்கமான வெள்ளை வேட்டி தாதா கேரக்டரை தாளம் தப்பாமல் செய்துள்ளனர். ஜீவா சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில், பாடல்கள் ஆட வைக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை. சசிகுமாரின் ஒளிப்பதிவு கச்சிதம். புதியவர்களை நம்பி, ஆக்ஷன் படம் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். காமெடி, ஆக்ஷன், கிளாமர் என்று ஆங்காங்கே கமர்சியல் மசாலாவையும் தூவியிருக்கிறார். ஹீரோ திடீரென்று சகலகலா வல்லவனாக மாறுவது, வீட்டுக்குள்ளேயே இருக்கும் அவரை தன் தாய்மாமன் என ஹீரோயினுக்கு தெரியாமல் இருப்பது, பார்க்கிற பெண்ணை எல்லாம் சீரழிக்கும் வில்லன் என்று படத்தில் ஏகப்பட்ட லாஜிக் பிரச்னை.

பழைய பதிவுகளை தேட