தைப் பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் களை கட்டியுள்ளது. புதுப்பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் வைத்து இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும், அறுவடைத் திருநாளாகவும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
வளம் தரும் பொங்கல்
தை முதல்நாள் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, தமிழர் திருநாள் என்றும், அறுவடைத்திருநாள் என்றும் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகின்றனர்.
பொங்கல் என்பது "பொங்கு' என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும். வளம், செழிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் ஆகிய எல்லா நலன்களும் எல்லோரின் உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்கவேண்டும் என்ற சிந்தனையை தரும் விழாவாக அமைந்துள்ளது.
நன்றி தெரிவிக்கும் விழா
ஆண்டு முழுவதும் நிலத்தில் பாடுபட்ட விவசாயி, தன் நிலத்திற்கும், உழைப்புக்கும் துணை இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதம் கொண்டாடும் பண்டிகை பொங்கல். அந்த போகத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியை, புதுப்பானையில் பொங்கலிட்டு, தோட்டத்தில் விளைந்த இஞ்சி, மஞ்சள், கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்து, நன்றி தெரிவிக்கும் விவசாயின் விசுவாசமே பொங்கல். எளிமையும், உயிரோட்டமும் நிறைந்த இந்த பண்டிகை ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடப்படுகிறது.
வாசல் முன் வண்ண கோலமிட்டு அடுப்பு மூட்டி அதில் புதுப்பானை வைத்து அந்த பானையில் இஞ்சி, மஞ்சள் செடிகளை கட்டி பொங்கல் வைக்கின்றர். புத்தரிசி, வெல்லம், பால், நெய், முந்திரி போன்றவைகளை கொண்டு பொங்கல் வைக்கின்றனர். பொங்கல் பொங்கி வரும் போது "பொங்கலோ பொங்கல்' என்று வீட்டில் உள்ள அனைவரும் உற்சாகத்துடன் கூறி மகிழ்வர். கிராமங்களில் பொங்கல் பொங்கும் போது குலவை ஒலிக்க அரிசியையும், பாலையும் பானையில் இடுகின்றனர். பொங்கல் சமைத்தவுடன் தலை வாழை இலை பரப்பி அதில் சமைத்த பொங்கலையும், கரும்பு வைத்தும் படைத்து இயற்கைக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்துவர்.
கரும்பு படைப்பது ஏன்?
உழைப்பின் அருமையை கரும்பு நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். இளமையில் கஷ்டப்பட்டு உழைத்தால்தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும் என்ற உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம்.
சூரியனுக்கு உகந்த ஞாயிறு
இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி தை மாதம் பிறக்கிறது.
சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமையிலும், உகந்த அஸ்தம் நட்சத்திரத்திலும், சூரியபகவானின் நட்பாக கருதப்படும் விருச்சிக லக்னத்திலும் தை மாதம் பிறக்கிறது. கர வருடத்தில், மகர சங்கராந்தி பலனும் அதிக நன்மை கிடைப்பதாகவே கணக்கிடப்பட்டுள்ளது.
பொங்கலிட உகந்த நேரம்
வீடுகளில், புத்தரிசி கொண்டு புதுப்பானையில் பொங்கலிட உகந்த நேரம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.35 மணியில் இருந்து 9.35 மணி வரையிலும், அதன்பின் 10.35 மணியில் இருந்து பகல் 12 மணி வரையிலும் நல்ல நேரம் ஆகும். இந்த வேளைகளில், புத்தாடை அணிந்து, புத்தரிசி கொண்டு பொங்கலிட்டு சூரிய பகவானுக்கு படைத்து குடும்பத்துடன் உண்டு மகிழலாம் என வேத விற்பன்னர்கள் தெரிவித்துள்ளனர்.