விளம்பரங்களில் வைரத்தைப் பற்றி “EF” கலர், “FG” கலர் என்று குறிப்பிடுகிறார்களே, அது என்ன? வைரக்கல் நிறத்தை, ஆங்கில எழுத்துக்களில் குறிப்பிடுகிறார்கள். “D” நிறம் மிக உயர்ந்த வெள்ளையை குறிக்கிறது. இந்த நிற வைரம் கிடைப்பது மிக அரிது. “E” “F” “G” ஆகிய நிறங்கள்தான் அதிகமாக வியாபாரம் செய்யப்படுகிறது. இவைகளில் வித்தியாசம் அதிகமாக இருக்காது. H,I என்று போகும்போது இன்னும் வெண்மை நன்றாக குறையும். J,K,L என்ற நிறங்கள் சிறிது சிறிதாக மஞ்சளாக ஆரம்பிக்கும். இப்படி `பளிச்` சென்ற தன்மைக்கு தகுந்தபடி “Z” வரை நிறம் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் கிடைத்த பெரிய வைரம் கோகினூர் மட்டும்தானா? வேறு வைரங்கள் ஏதேனும் உண்டா ?
நிறைய உண்டு. அவை:
1. ரீஜென்ட் (Regent): இந்தியாவில் கிடைத்த பெரிய வைரங்களில் இது குறிப்பிடத்தக்கது. இந்த வைரத்திற்கு மற்றொரு பெயர் பிட் வைரம் (Pit Diamond) .
பட்டை தீட்டப்படாத பொழுது இதன் எடை 410 காரட்டுக்கும் மேல். 1700-ல் ஆந்திராவில் கோல்கொண்டாவில் இருந்து 72 கி.மீ. தெற்கில் உள்ள பர்க்கால் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. இது இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரங்களில் ஒன்று.
அப்போது சென்னை கவர்னராக இருந்த தாமஸ் பிட் (இவர் முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் வில்லியம் பிட்டின் தாத்தா) என்பவரால் இந்த வைரம் சுமார் ஒரு லட்சம் டாலருக்கு வாங்கப்பட்டு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு 140.50 காரட் எடையுள்ள வட்ட சதுரக் கல்லாக பட்டை தீட்டப்பட்டு, Pit வைரம் என்று பெயர் இடப்பட்டது. பிறகு 1717-ல் பிரெஞ்ச் அரசரால் 5 லட்சம் டாலருக்கு வாங்கப்பட்டு ரீஜென்ட் என்று பெயர் மாற்றப்பட்டது.
இது பல கைகள் மாறி, கடைசியாக நெப்போலியனிடம் போய் சேர்ந்தது. நெப்போலியனுக்கு பணக் கஷ்டம் வந்தபோது, 40 லட்சம் டாலருக்கு இதை ஒரு தனவந்தரிடம் அடகு வைத்து பிறகு மீட்டார். இந்த வைரத்தை நெப்போலியன் தன் போர்வாளின் கைப்பிடியில் பதித்து வைத்திருந்தார்.
இன்று இது பாரிஸ் நகரில் லூவர் மிசியத்தில் உள்ளது.
2. பைகாட் வைரம் (The Pigot Diamond):
இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட இந்த வைரத்தின் எடை சுமார் 48 காரட்கள். 1775-ல் அப்போதைய மெட்ராஸ் கவர்னராக இருந்த பேரன் பைகாட் (Baron Pigot )என்ற ஆங்கிலேயருக்கு சில அரசு காரியங்கள் முடித்து கொடுத்ததற்காக ஒரு இந்திய இளவரசரால் பரிசளிக்கப்பட்டது. இந்த வைரத்திற்கு முதலில் தி கவர்னர்(The Governer)என்று பெயரிடப்பட்டது. அதன் பிறகு பைகாட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1799-ல் இவர் இறந்த பிறகு 1801-ல் அவருடைய சந்ததியினர் இதை நெப்போலியனின் தாயார் லெட்டிசியா போனபார்டே(Letizia Bonaparte)என்பவருக்கு விற்றுவிட்டார்கள். இப்போது இருக்குமிடம் தெரியவில்லை.
3. ஷா வைரம் (Shah Diamond)
இது இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு வித்தியாசமான வைரம். நான்கு புறங்களிலும் நீளமான பட்டையுடன், நிறம் சற்று குறைந்த, உட்புறம் முற்றிலும் சுத்தமான கண்ணாடிபோல் வடிவம் கொண்டது. இந்தியாவில் அகமது நகர் கவர்னராக இருந்த புர்கான் நிஜாம் ஷா என்பவருடைய பெயர் ஒரு பகுதியில் எழுதப்பட்டு உள்ளது. மற்றொரு பக்கத்தில் முகலாய அரசர் ஜஹாங்கீர் மகனுடைய பெயரும், இன்னொரு பக்கத்தில் பாரசீக அரசர் பாத் அலி ஷா (Fath Ali Shah) பெயரும் அவரவர் ஆட்சி புரிந்த வருடங்களை குறிப்பிட்டு அராபிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. இன்று இது ரஷியாவில் கிரம்ளின் மாளிகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஆப்பிரிக்கா தவிர வேறு எங்கும் வைரம் கிடைக்கிறதா?
கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள ரியோடின்டோ (Riotinto) சுரங்கம் மற்றும் ரஷ்யா, இஸ்ரேல், பிரேசில் இப்படி பல நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது. இதைத்தவிர, ஒரு ருசிகர தகவல் என்னவென்றால், மனித உடலிலிருந்தும் வைரம் தயாரித்திருக்கிறார்கள்.அமெரிக்காவில் உள்ள நிணி நிறுவனம் இறந்துவிட்ட ஒருவரின் உடலை முழுவதும் சாம்பல் ஆக்கி அதில் இருந்து கார்பன் வேபர் டெபாஸிஷன் (Carbon vapour deposition method) என்ற ஒரு முறையில் ஒரு காரட் வைரத்தை பரிசோதனை முறையில் உருவாக்கி உள்ளது. ஆனால் இதற்கு ஆகும் செலவு, வாங்கும் வைரத்தை விட பல மடங்கு அதிகம்.
ஆனால் இந்த முறையில் வைரத்தை உருவாக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் நம் முன்னோர்கள் “வைரம் பாய்ஞ்ச உடம்பு” என்றார்களோ என்னவோ!
இப்படி பல புதுமைகள் வைரத்திற்கு இருப்பதால்தான் என்றும் நம்மை அது ஈர்ப்பதாக உள்ளது