1939ஆம் ஆண்டு ஓப்பன் ஹீமர் என்ற விஞ்ஞானி நியூட்ரான் விண்மீன்களைப் பற்றி ஆராய்ந்தார். அவரது கருத்துப்படி நம் சூரியனை விட 3.2 மடங்கு அதிக நிறை உடைய ஒரு நியூட்ரான் விண்மீன், தன்னுடைய சொந்த ஈர்ப்பு விசையை எதிர்க்க முடியாமல், அதனுடைய நியூட்ரான்கள் உள்நோக்கி மேலும் சுருங்குகின்றன.
அப்போது ‘ஒருமைத் தன்மை’ (Singularity) என்ற ஒரு நிலையை அவை அடைகின்றன.
அதாவது அவை பருமன் (Volume) ஏதும் இல்லாமல், ஆனால் முடிவில்லாத (Infinite) ஒரு நிறையையும் அடர்த்தியையும் கொண்டிருக்கின்றன.
இது போன்ற ஒருமைத் தன்மையை அடைந்த நியூட்ரான் விண்மீன்களின் மேற்புற ஈர்ப்பு விசை மிக மிக அதிகமாக இருப்பதால், அவற்றின் அருகில் இருக்கும் அல்லது அவற்றிற்கு அருகே வரும் எந்தப் பொருளையும் அவை தன்னுடன் ஈர்த்துக் கொள்கின்றன. ஒளியின் வேகம் எவ்வளவு என்று நமக்குத் தெரியும். (உலகில் உள்ள எந்தப் பொருளுமே ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியாது) ஒளி கூட இது
போன்ற ஒருமைத் தன்மையில் தப்ப முடியாது.ஒளியைக் கூட இவை தன்னோடு ஈர்த்துக் கொள்கின்றன. இது போன்ற பொருட்களை கரும் பள்ளங்கள் (Black Holes) என்று அழைக்கின்றனர்.
விண்வெளியில் காணப்படும் கரும்பள்ளங்களில் விழும் எதுவுமே அதிலிருந்து தப்ப முடிவதில்லை. கரும்பள்ளங்கள் என்பவை விண்மீன்கள் படு அடர்த்தியாக அமைந்திருக்கும் விண் பகுதிகளிலேயே அதிகமாக உருவாக வாய்ப்புள்ளது. முக்கியமாக காலக்சிகளின் மையப்பகுதிகள் மற்றும் கோளக் கூட்டங்களின் மையப்பகுதிகள் போன்றவற்றில் விண்மீன்கள் அடர்த்தியாகக் காணப்படுவதால், அங்கே கரும்பள்ளங்கள் இருக்கலாம் என நம்பப்படுகின்றன.