இன்று உலகின் முன்னணி நாடுகள் பலவும் விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. ஆனால் அந்த விண்கலங்களில் ஏதேனும் பிரச்சினை, கோளாறு ஏற்பட்டால் அவற்றைச் சரிசெய்யக் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. இந்நிலையில், மனிதர்களைப் போல `சிந்தித்து’ச் செயல்படும் விண்கலத்தை விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகிறார்கள்.
`2001: எ ஸ்பேஸ் ஒடிசி’ படத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கண்டுபிடிப்பாகும் இது. அந்தப் படத்தில், செயற்கை அறிவுடன் செயல்படும் விண்கல கணினி, விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர்களைக் கொல்ல முடிவெடுப்பதாக வரும்.
இங்கிலாந்து விண்வெளிப் பொறியாளர்கள், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் ஆதரவுடன், செயற்கைக்கோள்களில் பயன்படுத்தக்கூடிய கட்டுப்பாட்டு அமைப்புகள், தானியங்கி ஆய்வு வாகனங்களுடன், தம்மைச் சுயமாகக் கட்டுப் படுத்திக் கொள்ளக்கூடிய விண்கலங்களையும் உருவாக்கி வருகிறார்கள்.
இந்த அதிநவீன விண்கலங்களால், `கற்றுக்கொள்ளவும்’, பிரச்சினைகளைக் கண்டறியவும், பயணத்தின்போது தேவையான மாறுதல் களைச் செய்துகொள்ளவும், தாமே பழுதுபார்த்துக்கொள்ளவும்,
ஒரு நடவடிக்கையை மேற்கொள்வது எந்தளவு நல்லது என்று முடிவெடுக்கவும் முடியும்.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு, தனது தானியங்கி போக்குவரத்து வாகனம் மூலம் விநியோகத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஈடுபட்டது. அப்போது மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தன.
`ஏடிவி2′ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தத் தானியங்கி வாகனத்தை விண்வெளி நிறுவனமான ஆட்ரியம் உருவாக்கியுள்ளது. இந்த வாகனம், முன்னதாக `புரோக்கிராம்’ செய்யப்பட்ட வழித்தடத்தின்படி விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளும். இதில் பல `சென்சார்களும்’, மோதலைத் தடுக்கும் அமைப்புகளும் இருப்பதால், பாதுகாப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் போய் இணையும்.
மனிதர்களைப் பாதுகாப்பாக விண்வெளிக்குக் கொண்டுபோய், திருப்பிக் கொண்டு வரக்கூடிய முதலாவது விண்கலத்தையும் உருவாக்கப் போவதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.