அநியாய ஆடம்பரம்!
தன்னை `சூரியக் கடவுள்’ என்று அழைத்துக் கொண்ட பிரெஞ்சு மன்னன் பதினான்காம் லூயி வீண் ஆடம்பரத்துக்காகக் கட்டியதுதான் வெர்செய்ல்ஸ் அரண்மனை. நாட்டையே திவாலாக்கிய இதைக் கட்டி முடிக்க 50 ஆண்டுகள் ஆயின. முப்பதாயிரம் பேர் வலுக்கட்டாயமாக கூலியில்லாமல் வேலை செய்ய வைக்கப்பட்டனர். பணியின்போது நூற்றுக்கணக்கான பேர் கொள்ளை நோயால் உயிரிழந்தனர்.
கட்டுமானப் பணிகளை மன்னன் நேரடியாக மேற்பார்வையிட்டான். சலவைக் கல், வெண்கலச் சிலைகள் பல நிறுவப்பட்டன. 250 ஏக்கர் பரப்பில் தோட்டம் அமைக்கப்பட்டது.
ஏராளமான நீரூற்றுகள் அமைக்கப்பட்டன. பல வகையான விலங்குகளும், பறவைகளும் கொண்ட காட்சி சாலையும் ஏற்படுத்தப்பட்டது. அரண்மனையை ஒட்டி ஒரு மைல் நீளமும், 200 அடி அகலமும் உடைய கால்வாய் வெட்டப்பட்டது. அதில் படகுகள் விடப்பட்டன.
1682-ல் மன்னர் தனது பரிவாரங்களுடன் இங்கு குடியேறினார். 1789-ம் ஆண்டு வரை வெர்செய்ல்ஸ், பிரான்சு நாட்டின் தலைநகராக இருந்தது. அரசனின் பரிவாரம், 9 ஆயிரம் வீரர்கள் உட்பட 20 ஆயிரம் பேரைக் கொண்டதாக இருந்தது. அரண்மனையில் ஆயிரம் பிரபுக்களும், 4 ஆயிரம் பணியாளர்களும் வசித்தனர். அது ஆடம்பர மாளிகையாக இருந்ததே தவிர, அடிப்படை வசதிகள் இல்லை. இந்த அரண்மனையின் கோலாகல வாழ்க்கைக்கு 1789-ல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி முடிவு கட்டியது. தற்போது இது அருங்காட்சியமாக உள்ளது