உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது. உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும். துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும். துவர்ப்பு: உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வா...