எங்கு பார்த்தாலும் கொலை வெறி, கொலை வெறிதான். தனுஷ், தமிழையும், ஆங்கிலத்தையும் போட்டுக் குழைத்து உருவாக்கியுள்ள இந்தப் பாடல்தான் எங்கு பார்த்தாலும் கேட்கப்படுகிறது. ஏன் இந்த கொலை வெறி என்று கேட்கும் அளவுக்கு இந்தப் பாடல் மீது இளைஞர்களுக்கு பயங்கர கொலை வெறியாகியுள்ளது. அந்த அளவுக்கு இந்தப் பாடல் அவர்களிடையே பிரபலமாகியுள்ளது.
இதுகுறித்து தனுஷிடம் கேட்டால் பயங்கர குஷியாகி விடுகிறார். அந்தப் பாடலை ஆறே நிமிடத்தில் நான் எழுதினேன். இந்தப் பாடல் வரிகள் மகா எளிமையானவை. அதில் நிறைய இங்கிலீஷ் வார்த்தைகளை நான் பயன்படுத்தியுள்ளேன். அனைவருக்குமே புரியும்படியாக இதை எழுத நினைத்தேன். அதன்படியே அதுவும் வந்தது. இதை ஒரு பாடலாக பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை.இதுதான் இங்கு ஹைலைட்.
இதை தமிழிங்கிலீஷ் பாடல் என்று கூறி விட முடியாது. நான் ஆங்கிலத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட அதில் தமிழ் வாசனை வீசும் (அப்டியா..??) அனைத்துத் தமிழர்களும் இதைக் கேட்க வேண்டும் என்பதே அதற்குக் காரணம் (ஓஹோ...) என்கிறார் தனுஷ்.
தமிழர்கள் அத்தனை பேரும் இதைக் கேட்க வேண்டும் என்பது தனுஷின் விருப்பம். ஆனால் பாலிவுட்டில்தான் இதை மாய்ந்து மாய்ந்து கேட்டு வருகிறார்களாம். எப்படி இப்படியெல்லாம் தமிழில் கலக்குகிறார்கள் என்று அவர்களுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கிறதாம். நாமும்தான் இந்தியில் ஆங்கிலத்தைப் போட்டு கிண்டிக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும் தனுஷ் மாதிரி நம்மால் செய்ய முடியாமல் போனது ஏன் என்ற சிந்தனையில் பாலிவுட் மூழ்கியுள்ளதாம்.
ரூம் போட்டு சிந்திக்கப்பட வேண்டிய விஷயம்தான்...!
புல்லரித்துப் போன அமிதாப்!
இதற்கிடையே, இந்த கொலை வெறிப் பாடல் அமிதாப் பச்சனையும் அசரடித்து விட்டதாம். இதுகுறித்து அவர் புல்லரித்துப் போய் தனது பிளாக்கில் எழுதியிருப்பதாவது...
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறி டி.. ஆஹா, என்ன ஒரு பாடல். உதடுகளை விட்டு நீங்க மறுக்கும் பாடல். மனதை அப்படியே மாற்றிப் போடுகிறது. அருமையான அனுபவம். பாடலைக் கேட்கும்போதே உதடுகளில் புன்னகை வந்து உட்கார்ந்து விடுகிறது, கூடவே சிரிப்பும் வருகிறது. முகத்தில் பலவித ரசங்கள் மாறி மாறி நடமிடுகின்றன.
யூடியூபில் இப்போது இந்தப் பாடல்தான் சக்கை போடு போடுகிறது. காட்டுத் தீ போல இது பரவியுள்ளது. ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் கணவரான தனுஷ்தான் இந்தப் பாடலை எழுதியுள்ளார். இளம் நடிகர் படையின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் தனுஷ், மிக இனிமையாக இந்தப் பாடலை எழுதியுள்ளார். யாரைப் பார்த்தாலும் இப்போது இந்தப் பாடலைத்தான் கேட்கிறார்கள் என்று உணர்ச்சிவசப்பட்டுள்ளார் அமிதாப்.