
திருநெல்வேலியின் ஒரு கிராமத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து வரும் பெரியவரை, அந்த ஊர் மக்கள் தெய்வமாக போற்றி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அப்பெரியவரின் செல்வாக்கு மீது பொறாமை கொண்ட, வில்லன் அவரை தீர்த்துக்கட்டுகிறான். இந்த கொலையை பார்த்துவிட்ட பெரியவரின் 13-வயது மகன், பழிக்குப்பழியாக அவனது நண்பர்களுடன் சேர்ந்து வில்லனை தீர்த்துக் கட்டுகிறான். இதனால் நால்வரும் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகின்றனர்.
10 ஆண்டுகள் கழித்து பெரியவரின் மகன் தனது நண்பர்களுடன் சீர்திருத்த பள்ளியிலிருந்து வெளிவருகிறான். சிறுவயது தோழியான நாயகியை அவளது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கரம் பிடிக்கிறான்.
ஊர் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் நாயகனை, மக்கள் பெரியவருக்கு அடுத்தபடியாக தெய்வம் என போற்றி வருகின்றனர். இந்நிலையில் அந்த மாவட்ட அமைச்சரின் மகன் ஊரில் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்துவிடுகிறான். இதனை காணும் நாயகியின் அண்ணன் நாயகனிடம் வந்து முறையிடுகிறான். உடனே ஆத்திரம் கொண்ட நாயகன் நண்பர்களோடு சேர்ந்து அமைச்சரின் மகனை வெட்டிக் கொல்கிறான்.
மறுபுறம் சிறுவயதில் நாயகன் கொலை செய்த வில்லனின் தம்பி, அண்ணனின் சாவுக்கு காரணமான நாயகனை தீர்த்துக்கட்ட எண்ணுகிறான். இவனுடன், தன் மகனை பறிகொடுத்த வேதனையில் இருக்கும் அமைச்சரும் நாயகனை தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறார்.
இறுதியில் இருவரின் பகையில் சிக்கிய நாயகனின் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.
இப்படத்திற்கு கதை, வசனம், திரைக்கதை, பாடல் எழுதி இயக்கியிருக்கும் சேகர்.ஜி. கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். பாளையங்கோட்டையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னாள் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கி இருக்கிறார்.
நாயகியாக வலம் வந்திருக்கும் இன்பநிலாவுக்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவே. என்றாலும் தான் வரும் காட்சிகள் அனைத்தையும் திறம்பட செய்திருக்கிறார்.
இந்தியனின் ஒளிப்பதிவு திருநெல்வேலி மாவட்டத்தின் குளுமையையும், காட்சிகளில் விறுவிறுப்பையும் கூட்டியிருக்கிறது. செல்வதாசன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
மொத்தத்தில் ‘பாளையங்கோட்டை’ ரசிகர்களை சிறைக் கைதியாக்கியிருக்கிறது.