முகமூடி திரை விமர்சனம்


முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் கும்பலை முகமூடி அணிந்த வாலிபன் அழித்து ஒழிக்கும் கதையே ‘முகமூடி’. சென்னை நகரில் முகமூடிக் கும்பல் ஒன்று கொலை, கொள்ளை போன்ற அட்டூழியங்களில் ஈடுபடுகிறது. அவர்களை அடக்குவதற்காக மும்பையிலிருந்து உதவி கமிஷனர் ஒருவர் சென்னை வருகிறார். இந்த நிலையில் குங்பூ கற்று வரும் இளைஞன் லீ, தனது குருவுக்கு உதவி செய்வதற்காக குங்பூ பயிற்சிக்கு ஆட்களை தேடி அலைகிறான். மீனவர்களிடம் சென்று குங்பூ பயிற்சி
கற்றுக் கொள்ள வருமாறு அழைக்கிறான். 

ஆனால், அவர்கள் தங்களுக்கு குங்பூ பயிற்சி தேவை இல்லை. எங்களுடைய ஆயுதமே எங்களுக்கு பாதுகாப்பு என்று கூறுகிறார்கள். அதற்கு லீ அந்த ஆயுதத்தால் என்னிடம் சண்டை போட்டு நீங்கள் வெற்றி பெற்றால் உங்களுக்கு பயிற்சி தேவை இல்லை. நான் வெற்றி பெற்றால் கட்டணம் செலுத்தி நீங்கள் பயிற்சி பெறவேண்டும் என்று அவர்களிடம் கூறுகிறான். 

இந்த சவாலை ஏற்றுக் கொண்ட மீனவர்கள் அவனுடன் மோதுகிறார்கள். இறுதியில் தோல்வியடைந்து தப்பி செல்லும் ஒருவனை லீ விரட்டிச் செல்கிறான். அப்போது அங்கு வரும் உதவி கமிஷனரின் மகள் சக்தி, லீயின் முகத்தில் மயக்க மருந்து ‘ஸ்பிரே’யை அடித்து அவனை போலீசில் பிடித்துக் கொடுக்கிறாள். 

போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வரும் லீ, தன்னை பிடித்துக் கொடுத்த சக்தியை பழிவாங்குவதற்காக அவளது வீட்டுக்குச் செல்கிறான். அவளைப் பார்த்த பிறகு மனம் மாறி அவள் மீது காதல் வயப்படுகிறான். ஒருநாள் சக்தியை பார்ப்பதற்காக இரவில் முகமூடி அணிந்து அவளுடைய வீட்டுக்குச் செல்கிறான். 

திரும்பும் வழியில் எதிர்பாராதவிதமாக திருடன் ஒருவனை போலீசாரிடம் பிடித்துக் கொடுக்கிறான். இதனால் முகமூடி மனிதன் மீது மக்களுக்கு ஒரு தனி மரியாதை வருகிறது. 

மற்றொரு நாள் முகமூடி அணியாமல் சக்தியின் வீட்டுக்குச் தனது காதலை சொல்ல லீ செல்கிறான். அப்போது கமிஷனரை கொலை செய்ய வரும் ஒருவன் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விடுகிறான். அவர் மீது குண்டு பாய்கிறது. இதை பார்த்துவிடும் லீ அவனை பிடிக்க முயற்சி செய்கிறான். ஆனால் துப்பாக்கியை லீயின் கையில் விட்டுவிட்டு கொலைகாரன் தப்பிவிடுகிறான். சத்தம் கேட்டு அங்கு வரும் போலீசார் லீயின் கையில் துப்பாக்கி இருப்பதைக் கண்டு இவன்தான் கமிஷனரை சுட்டான் என்று முடிவு செய்கிறார்கள். லீயை பிடிக்க போலீசார் வரும்போது தப்பித்து ஓடி தலைமறைவாகி விடுகிறான். 

பின்னர், தன் மீது விழுந்த பழியை போக்குவதற்காகவும், கொள்ளைக் கும்பலை பிடிப்பதற்காகவும், தன் காதலை காதலிக்கு உணர்த்துவதற்காகவும் லீ என்ன செய்கிறான் என்பதே மீதிக்கதை. 

லீயாக வரும் ஜீவா, கதையின் முன்பாதியில் யதார்த்தமான இளைஞனாக வந்து கலகலப்பூட்டுகிறார். குங்பூ கலையை கற்றுத் தேர்ந்தவர் என்பதை சண்டைக் காட்சிகளில் நிரூபித்திருக்கிறார். காதல் காட்சிகளிலும், முகமூடி அணிந்து வரும் தோற்றத்திலும் தனது பாணியை வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். 

முதன்முதலாக வில்லன் வேடம் ஏற்றிருக்கும் நரேன் அதற்கு பொருத்தமானவர் என்பதை காட்சிக்கு காட்சி மெய்ப்பித்திருக்கிறார். அழகான வில்லனாக வலம் வரும் அவர் அங்குச்சாமி என்ற கதாபாத்திரத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளார். 

சக்தியாக வரும் நாயகி பூஜா ஹெக்டே அழகான தோற்றத்தில் பளிச்சிடுகிறார். நாசர் சாதாரண உடையில் வந்தாலும் தோற்றத்திலும், மிடுக்கிலும் உதவி போலீஸ் கமிஷனராகவே முத்திரை பதிக்கிறார். 

கே-யின் இசையில் இரு பாடல்களும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம். கதைக்கு ஏற்ப பின்னணி இசையிலும் கைதேர்ந்தவர் என்பதை காட்டியிருக்கிறார். மதன் கார்க்கியின் வரிகளில் ‘வாய மூடி சும்மா இருடா’ பாடல் இளைஞர்களின் வாயை முணுமுணுக்கச் செய்யும். சத்யாவின் ஒளிப்பதிவு இப்படத்திலும் வித்தியாசமாக இருக்கிறது. 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பவர் மிஸ்கின். தனது முந்தைய படங்களைவிட இதில் வித்தியாசத்தை காட்ட முயற்சி செய்திருக்கிறார். முகமூடி என்றாலே அந்தரத்தில் பறக்கும் சாகச வீரன் என்ற எண்ணத்தை உடைத்தெறிந்திருக்கிறார். என்றாலும், கதை ஓட்டம் முன் பகுதி ‘பாஸ்’ பின் பகுதி கொஞ்சம் ‘மிஸ்’. கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் த்ரில் ஆக்கியிருக்கலாம். 

மொத்தத்தில் ‘முகமூடி’யை முகத்துக்கு பொருந்த வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget