ABBA என்பது 1970, 80 களில் உலகைக் கலக்கிச் சென்ற ஒரு சுவீடன் நாட்டு இசைக் குழு. இப்போதும் அவர்களின் பாடல்கள் எங்காவது ஒரு மூலையிலிருந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும். அந்த குழுவின் பாடல்களை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்ட படம்தான் இது; “mamma mia” என்பது அந்தக் குழுவின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்று. உங்களிற்குத் தெரியுமோ தெரியாது, இந்தியப் படங்கள் மேலை நாட்டுத் திரயரங்களில் வெளியிடப் படும்போது musical என்ற பட்டத்தோடுதான் வரும்; படங்களில் நாங்கள் பாடல்களைத்
திணிப்பதுதான் காரணம். ஆங்கிலத்திலும் musical எனப்படும் படங்கள் உண்டு. ஆனால், இங்கே musical என்றால் அதில் ஒரு எல்லையைத் தொட்டுவிடுவார்கள். படத்தின் முழுக்கதையுமே பாடல்களில்தான் போகும். அதிலும் விசேடம் என்னவென்றால் படத்தில் நடிப்பவர்கள்தான் பாடல்களையும் பாடியிருப்பார்கள். அப்படியான ஒரு படம்தான் “Mamma Mia.”
இருபது வயது Sophie’க்கு கல்யாணம். கிரீஸ் நாட்டிலிருக்கும் ஒரு தீவில் ஒரு வதிவிட விடுதியை நடத்தி வருகின்றார்கள் Sophie’யும், அவளது தாயார் Donna’வும். இருபது ஆண்டின் முன்னர், Donna’வின் ஒரு காதல் விவகாரத்தின் விளைவு Sophie. என்றாலும் தனது அப்பா யாரென்று Sophie’க்கு தெரியாது. கல்யாணத்திற்கு சில நாட்களின் முன்னதாக தாயாரின் 20 வருடத்திற்கு முந்தைய நாட்குறிப்பேடை கண்டெடுக்கும் Sophie, தனது அம்மா, ஒன்றல்ல, மூன்று பேருடன் தொடர்பு வைத்திருந்ததை அறிகின்றாள். இவர்களில் யாராவது ஒருவர்தான் தனது அப்பாவாக இருக்கவேண்டுக் எனத்தீர்மானிக்கும் Sophie, மூன்று பேருக்கும் தாயார் Donna அனுப்பியது போன்று மூன்று திருமண அழைப்பிதழ்களை அனுப்பி வைக்கின்றாள். Donna’வுடன் கடத்திய நாட்களை இன்னமும் இனிமையாக நினைவுகூரும் அந்த மூவரும், அழைப்பை ஏற்று கல்யாணவீட்டிற்கு வருகை தருகின்றார்கள். கடைசித் தருணம் வரையில் இவர்களை தாயாரிடமிருந்து ஒளிக்க நினைக்கின்றாள் Sophie; அவளிற்குத் தெரியாமல் தற்செயலாக இவர்களைச் சந்திக்கும் Donna, மகளிடமிருந்து இவர்களை மறைக்க முற்படுகின்றாள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த “அப்பாக்கள்” ஒவ்வொருவரும், Sophie தனது மகள்தான என தனித்தனியே தீர்மானிக்கின்றனர். இப்படியாக குட்டையைக் கலக்கி, பின்னர் அழகாக (தமிழ்ப் படம் போலல்லாது) தெளியவைக்கின்றது படம்.
படம் எடுத்தவுடனேயே துள்ளிசையோடு ஆரம்பிப்பது, முடியும் வரையினில் அதே வேகத்தோடும், துள்ளலோடும் போகின்றது. ABBA’வின் பாடல்களிற்கு அழகாக திரைவடிவம் கொடுத்திருக்கின்றார்கள். சிக்கலான பாத்திரங்களில் எல்லாம் நடித்து ஒன்றன் மேல் ஒன்றாக ஆஸ்கார் அடுக்கிவைத்திருக்கும் Meryl Streep (அதில் ஒரு சாதனையும் வைத்திருக்கின்றார்), இந்த வயதிலும் ஆடலும் பாடலுமான் பாத்திரத்தில் கட்டறுத்துவிட்டு கலந்திருக்கின்றார். அதிலும், மகளை கல்யாண ஊர்வலத்தில் அனுப்பி வைக்கும் காட்சியில் தனது நடிப்புத்திறனையும் காட்டியிருக்கின்றார். மூன்று அப்பாக்களில் ஒருவராக வரும் Pierce Bronsnan‘க்கும் (பழைய James Bond) வித்தியாசமான பாத்திரம் — சமாளித்திருக்கின்றார். படம் ஐக்கிய இராச்சியத்தில் Titanic’ஐ விட அதிக வசூல் காட்டியிருக்கின்றது! கவலையில்லாது அனைவருக் பார்த்து இரசிக்கக் கூடிய படம். பாட்டில் கதை போவது சிலருக்கு விளங்குவது கடினமாக இருக்கலாம். அப்படியெனின் subtitles’ பதிவிறக்கம் செய்து பாருங்கள்.