பொதுவாக கறைகள் துணிகளில் படிந்து, அவற்றை நீக்க வேண்டுமென்று நினைத்தாலே கோபமாக இருக்கும். அதிலும் ஒருசில கறைகள் துணிகளில் படிந்தால், அவற்றை நீக்குவது மிகவும் சிரமமான ஒரு செயல். கறைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று மென்மையானவை மற்றொன்று கடினமானவை.
மென்மையான கறைகளை எளிதில் போக்கிவிடலாம். ஆனால் கடினமான கறைகளை நீக்குவது தான் இருப்பதிலேயே கஷ்டமானது. குறிப்பாக கடினமான கறைகளில் மை, இரத்தம், காபி, கிரீஸ் மற்றும் துரு முதலானவை அடங்கும். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கறையை நீக்குவதற்கான வழிமுறையை கையாளும் போது ஒரு கறையை நீக்குவதற்கான வழிமுறை மற்ற கறையை நீக்காது என்பதனை மனதில் கொள்ள வேண்டும். சரி, இப்போது எந்த கறைகளை எப்படி நீக்கினால் எளிதில் போய்விடும் என்பதைப் பார்ப்போமா!!!
மை கறை : படி 1: ஹேர் ஸ்ப்ரே கொண்டு கறை உள்ள இடத்தில் தெளிக்க வேண்டும். படி 2: பின் 5 நிமிடம் கழித்து, அதனை நன்கு துவைத்து உலர்த்த வேண்டும். படி 3: துணியை உலர்த்தியில் போடும் முன்பதாக கறை நன்றாக நீக்கப்பட்டுவிட்டதா என்று பார்க்க வேண்டும். கறை சிறிது நீக்கப்படாமல் இருந்தாலும், உலர்த்தியின் வெப்பத்திற்கு கறையானது துணியில் நிரந்தரமாக படிந்து விடும்.
இரத்த கறை : படி 1: இரத்தக் கறை துணியில் படிந்தவுடன் உடனடியாக துணியை குளிர்ந்த நீரில் ஊற வைக்கவும். பின்பு வினிகரை ஒரு சுத்தமான துணியில் நனைத்து, ஒத்தடம் கொடுக்கவும். (தேய்க்கக்கூடாது) படி 2: இரத்தம் போகும் வரை ஒத்தடம் கொடுத்து கொண்டு இருக்கவும் படி 3: பின்பு வினிகர் வாசனை போகும் வரை நீரில் அலசி எடுக்கவும்.
காபி கறை : படி 1: போராக்ஸ் (Borax) மற்றும் நீர் சேர்த்து ஒரு கலவையை உருவாக்கவும். படி 2: இந்த கலவையை காபி கறை படிந்த இடத்தில் தடவி 30 நிமிடம் வரை வைத்திருக்கவும். படி 3: நீரில் நன்கு அலசிய பிறகு வழக்கம் போல் சலவை செய்யவும்.
எண்ணெய் பசை/க்ரீஸ் கறை : படி 1: அழுக்கு நீக்கும் எரி சாராய கரைசலை (Rubbing Alcohol) கறை படிந்த இடத்தில் ஒரு சுத்தமான துணியில் நனைத்து வைக்கவும். (தேய்க்க வேண்டாம்) படி 2: கறை நீங்கும் வரை தொடர்ச்சியாக, அதன் மேல் வைத்திருக்க வேண்டும். படி 3: பின்னர் பாத்திரம் கழுவும் டிடர்ஜெண்டை இதன் மீது தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் துவைத்து வழக்கம் போல சலவை செய்யவும்.
துரு கறை : படி 1: டார்டார் க்ரீமை (cream of tartar) கறையின் மீது வைத்து கசக்கவும். பிறகு டார்டார் க்ரீம் கறையின் மீது இருக்குமாறு வைத்து துணியை மடிக்க வேண்டும்.. படி 2: ஒரு பாத்திரத்திலோ அல்லது தொட்டியிலோ சுடு நீர் நிரப்பி துணியை அதில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். படி 3: பின்னர் நன்றாக அலசி, வழக்கம் போல் துணியை சலவை செய்யவும்.