பெண்களை இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு, காதல் வலை வீசி, பிறகு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லும் சைக்கோ கையில் சிக்குகிறாள், பள்ளி மாணவி லீமா. கொடூரமாக கொலை செய்யப்படுகிறாள். அவளின் இணைய தள காதலன் பற்றி அறியும் தோழி ஸ்ரீ இரா, அவன் வலைக்குள் தானாகவே சென்று பழிவாங்குவது கதை. ஸ்ரீ இரா, லீமாவின் பள்ளி வாழ்க்கை பசுமையானது என்றால் இருவரும் சைக்கோவிடம் மாட்டிக் கொண்டு படும்
அவஸ்தைகள் கொடூரம். சைக்கோவாக நடித்திருக்கிறார் நளன். சாந்தமாக பேசி பெண்களை மயக்கி பிறகு தன் சுயரூபத்தை காட்டும்போது மிரட்டுகிறார். தோழியின் கொலைக்கு பழிவாங்க வரும் ஸ்ரீ இரா, அப்பாவியாக சைக்கோவின் வீட்டுக்குள் புகுந்து பிறகு “லதா யார்னு தெரியுமாடா?’ என்று நம்மையும் சேர்த்து மிரட்டுகிறார். அதுவரை குழந்தைபோல நடித்தவர் திடீரென ஆவேசமாகி, ஆக்ரோஷமாக தாக்கும் இடத்திலும், தோழியை நினைத்து அழும் இடத்திலும், சைக்கோவிடம் அடிபட்டு துடிக்கும் காட்சியிலும் யார் என்று கேட்க வைக்கிறார்.
லீமா அப்பாவி மாணவி. கடைசியில் கொடூரமாக கொலையாகி அனுதாபத்தை அள்ளுகிறார். சைக்கோவை கண்டுபிடிக்கும் தனியார் டிடெக்டிவாக இயக்குனர் இதயனும், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபினாவும் அவ்வப்போது காமெடி பண்ணுகிறார்கள். பின்னணி இசை பயமுறுத்தினாலும், பாடல்கள் ரசிக்க வைக்கவில்லை. ஒளிப்பதிவு சுமார். சைக்கோ யார்? அவர் பின்னணி என்ன, அவர் ஏன் சைக்கோவானார் என்ற டீட்டெய்ல் எதுவும் படத்தில் இல்லை. திடீரென அவர் நண்பர் ஒருவர், சைக்கோ போல வருகிறார். சைக்கோ வீட்டில் ஒரு பெண் குற்றுயிராக கிடக்கிறார், அவர் யார் என்று கடைசிவரை சொல்லவில்லை. சைக்கோவை துப்பறிவதில் உள்ள புத்திசாலித்தனம் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் இல்லை. தொழில்நுட்பத்திலும், திரைக்கதை அமைப்பிலும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சுடச்சுட இருந்திருக்கும்.