
மிசன் இம்பொசிபிள் திரைப்படங்கள் உலகப் புகழ் பெற்றவை. ஈதன் ஹன்ட் எனும் துப்பறிவாளனையும் அவனைச் சுற்றி இருப்போரையும் சுற்றிக் கதைகள் நகரும். உலகின் பெரும் நகரங்களில் கதைகளின் களம் அமையும். முதல் மூன்று பாகங்களும் உலக ரீதியில் வர்த்தக ரீதியில் வெற்றியடையவே இப்போது நான்காம் பாகத்தையும் வெளியிட்டுள்ளனர். வழமை போல டொம் குரூஸ் திரைப்படத்தின் நாயகன்.
அமெரிக்க ருசியா உறவு முறை இப்போது ஒரளவு நன்றாக இருந்தாலும் பனிப் போர் காலத்தில் மிக மோசமாக இருந்த்து. குறிப்பாக ருசியா கியூபாவில் ஏவுகணைத் தளங்களை அமைத்த போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிக மிக மோசமான நிலையை அடைந்தது. ருசிய கப்பல்கள் பசிபிக் கடலைத் தாண்டி வரும் போது தாக்குதல் நடத்துமாறு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி நேரடியாக உத்தரவிடுமளவிற்கு நிலமை தலைகீழாய் இருந்தது.
தற்போது MI4 திரைப்படத்தில் மீண்டும் அமெரிக்க உருசிய உறவுகள் மோசமடைகின்றது. இதற்கு முக்கியகாரணமாக கிரெம்பிளின் மாளிகையில் நடக்கும் குண்டுவெடிப்பும் அதற்கு பொறுப்பாக்கப்பட்ட டொம்குரூஸ் மற்றும் அவர் குழுவினருமாகும் (IMF).
அமெரிக்க அரசு IMF ஐ இடை நிறுத்துகின்றது. தற்போது டொம் குரூசும் அவர் குழுவினரும் கிரம்ளின் மாளிகையில் தொலைந்த ஆவணங்களை மீளக் கைப்பற்றி நடக்க இருக்கும் அணுகுண்டு ஏவுகணைத் தாக்குதலைத் தவிர்க்க முயல்கின்றனர்.
சாதாரணமான கதை ஆனால் சிறப்பான நடிப்பு அருமையான சண்டைக் காட்சிகள் படத்தை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. குறிப்பாக டுபாயின் உயர்ந்த கட்டிடத்தில் நடக்கும் காட்சிகள், மண் புயலினூடு நடக்கும் கார் துரத்தல் காட்சிகள் எல்லாம் அபாரம். டிவிடியில் இந்த திரைப்படம் பார்ப்பதெல்லாம் வேஸ்ட்டு, கட்டாயம் திரையரங்கில் பார்த்துவிடுங்கள்.
கதை என்னவோ அமெரிக்காவில் ஆரம்பித்தாலும் இறுதியில் முடிவடைவது இந்தியாவின் ஒரு தானியங்கி கார் தரிப்பிடத்தில். மும்பாய் என்று அவர்கள் சொன்னாலும் கட்டடங்கள் எங்கும் சண் டீவி இலச்சினையும் தெலுங்கு எழுத்துக்களுமே தெரிகின்றன. ஹைதராபாத்தில் காட்சிகளைச் சுட்டிருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.
ஜெரமி ரைன்னர் காட்சிகள் எங்கும் நடிப்பில் கலக்குகின்றார். வழமையாக ஹீரோ மட்டும் செய்யும் சாகச காரியங்களை அவரும் செய்கின்றார். அதே வேளை சிமொன் பெக் கல கல திணைக்களத்தை குத்தகைக்கு எடுத்து சிரிக்க வைக்கின்றார். மொக்கை காமடிகள் இல்லாமல் போனமை மனதிற்கு ஆறுதல். போலா பட்டன் அழகுப் பதுமையாக வருகின்றார். சண்டைக் காட்சிகளில் சீற்றம் கொண்ட வேங்கையாக மோதுகின்றார். பிறகு அணில் கபூரை பேச்சில் மயக்கி படுக்கை வரை அழைத்து அங்கே வைத்து மொத்துகின்றார். பாவம் அணில் கபூர் ஒரு மொக்கை இந்தியப் பணக்காரன் வேடத்தில் வந்து சில நிமிடங்கள் சிரிக்கவைத்து விட்டுப் போகின்றார்.
டொம் குரூசின் முகம் எங்கும் வயதான ரேகைகள் வெளிப்படையாவே தெரிகின்றது. எமது அபிமான நடிகர்கள் பலரும் வயதாகிப் போனது என்னவோ கவலைதான் தருகின்றது. ஆனால் அவர்களுக்கு வயதாகி விட்டது என்று கவலை பட உலகமே இருக்கின்றது, அவர்களுடன் சேர்ந்து எங்களுக்கும் வயதாகிக் கொண்டே போகின்றது என்று நினைக்கும் போது பக் என்கிறது இதயம்