
அஜித்துடன் எந்த நடிகை, நடிகர் நடித்தாலும் படப்பிடிப்பு தளத்தைவிட்டு வெளியே வந்ததும் அவரை புகழத் தொடங்கிவிடுகிறார்கள். இரண்டு பத்திரிகையாளர்கள் சந்தித்தாலும், அவரு வேறப்பா என்றுதான் பேசுகிறார்கள். சினிமாவில் இருக்கும் கடைநிலை தொழிலாளர்களிலிருந்து, சக நட்சத்திரங்கள்வரை அஜித்தை நேசிப்பதற்கான காரணம் என்ன? அஜித் குறித்த ஐந்து விஷயங்களை
உங்களிடம் பகிர்ந்து கொண்டால் உங்களுக்கும் அவர்மீது ப்ரியம் தோன்றலாம்.
தன்னம்பிக்கை : எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்குள் வந்தவர் அஜித். ஆரம்பகால தோல்விகளின் போது அவரை வழி நடத்த, கைப்பிடித்து தூக்கிவிட, அணைத்து ஆறுதல் சொல்ல யாருமில்லை. அவரே விழுந்தார், அவரே எழுந்தார், அவரே போராடினார், அவரே அவருக்கான சாம்ராஜ்ஜியத்தை அமைத்துக் கொண்டார். முதுகுத் தண்டில் பதினொரு அறுவை சிகிச்சைகள் செய்து கொண்ட பின்பு ஒருவர் எழுந்து நடமாடுவதே அசாத்தியம் எனும் போது உயிரை பணயம் வைக்கும் சண்டைக் காட்சிகளில் அஜித் நடித்து வருகிறார். அவர் எடுத்துக் கொண்ட மருந்துகள் காரணமாக அவரின் உடல் எடை ஜி படத்தின் போது அதிகரித்தது. அவரின் நிலையை கருத்தில் கொள்ளாமல் பலர் அவரது உடல் எடையை கிண்டல் செய்ய, அதற்காகவே மூன்றே மாதங்களில் தனது உடல் எடையை குறைத்தார். ஐந்தாறு வருடங்களுக்கு முன்புவரை மருந்துகள் எடுத்து கொண்டே, கடும் வலியையும் பொருட்படுத்தாமல் மருத்துவரை அருகில் வைத்துக் கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ஆக்ரோஷமாக சண்டைக் காட்சியில் நடித்துவிட்டு கேரவனுக்குள் வலி தாளாமல் அவர் கதறியதை பல பத்திரிகையாளர்கள் அறிவர். இதனை ஒருபோதும் அஜித் பொதுவில் பேசியதில்லை.
கரிசனம் : தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களின் உடல்நிலையில், மனநிலையில் கவனம் எடுத்துக் கொள்கிறவர் எம்ஜிஆர். அவருக்கு அடுத்து அப்படியொரு கரிசனத்தை அஜித்திடம் காணலாம். தன்னுடன் நடிக்கும் நடிகைகளின் வசதியில், பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதால்தான் அவருடன் நடிக்கும் அனைத்து நடிகைகளும் அஜித் ஒரு ஜென்டில்மேன், அவருடன் நடிக்கும் போது கம்ஃபர்ட்டபிளாக ஃபீல் பண்ணுறேன் என்று தவறாமல் பேட்டி தருகிறார்கள். நடிகைகள் மட்டுமின்றி அவருடன் நடித்த சுரேஷ் கோபி, அர்ஜுன் போன்ற முன்னணி நடிகர்களும், மகத் போன்ற அறிமுக நடிகர்களும் அஜித்தின் இந்த ஒத்துழைப்பு, கரிசனத்தை வியந்து கூறியிருக்கிறார்கள்.
வேண்டாம் விளம்பரம் : என்னுடைய படமாக இருந்தாலும், அதனை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஒருபோதும் வலியுறுத்த மாட்டேன் என்ற கொள்கையில் அஜித் உறுதியாக இருக்கிறார். சினிமாவுக்கு வெளியே அவர் எதையும் ரசிகர்கள் மீதும் பிறர் மீதும் திணிப்பதில்லை. அதனால் தனது படத்தின் பிரமோஷனில் அவர் கலந்து கொள்வதில்லை. அதேபோல் நமது பிரச்சனைக்காக மக்களிடம் கலை இரவு என்ற பெயரில் கை ஏந்துவதையும் அவர் ஆதரிப்பதில்லை. விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது சங்கத்தின் கடனை அடைக்க வெளிநாடுகளில் நட்சத்திர கலை இரவு நடத்தினார். அதில் கலந்து கொள்ள மறுத்த அஜித், தேவை பணம் என்றால் அதனை தருகிறேன், விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறினார். ரஜினி, கமலிடம் இல்லாத பணமா உன்னிடம் இருக்கு என்று விஜயகாந்த் அப்போது அஜித்தை ஒருமையில் பேசி திட்டினார். கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர்கள் தங்களின் சங்க கடனை அடைக்க அஜித்தைப் போல தங்கள் பாக்கெட்டிலிருந்து தந்திருந்தால் அவர்களின் இமேஜ் மேலும் உயர்ந்திருக்கும் என்பதே உண்மை.
பேஷன் : அஜித்தின் கார் ரேஸ் பிரியம் அனைவரும் அறிந்தது. வயது கடந்த போதும் கார் ரேஸ் மீதிருந்த பிரியம் காரணமாக ஸ்பான்சர்கள் இன்றி தானே கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு ரேஸில் கலந்து கொண்டார்.
இன்று உலகில் இருக்கும் ரேஸ் வீரர்கள் எல்லாம் டீன் ஏஜ் பருவத்துக்கு முன்பே பயிற்சியை தொடங்கியவர்கள். அதையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள். மாறாக அஜித் தனது 30 வயதுக்கு மேல்தான் ரேஸுக்கு சென்றார். கடும் பயிற்சியால் ஃபார்முலா 2 பந்தயத்தில் கௌரவமான இடத்தையும் பிடித்தார். தனது சின்ன வயசு ஆசை, பணம் காரணமாக நிறைவேறாமல் போய், வயது கழிந்த நிலையில் அதனை போராடி சாதித்துக் கொண்ட அஜித்தின் கார் ரேஸ் மீதான பேஷன் போன்று வேறொருவரிடம் பார்ப்பது அரிது.
மதிப்பு : ரசிகர்களை தொடர்ந்து சந்தித்து, அவர் தலைவர் ரசிகர்கள் தொண்டர்கள் என்று அவர்களை நினைக்க வைத்ததில்லை. சரிசமமாகவே பாவிக்கிறார். ஆஞ்சநேயா படப்பிடிப்பின் போது ரோடு போடும் வேலை செய்யும் பெண்மணி ஒருவர் தனது குழந்தையுடன் அஜித்தை சந்தித்து, தனது குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என்றார். அந்தப் பெண் குழந்தைக்கு அஜித் தனது அம்மாவின் பெயரையோ, வேறு ஏதாவது பெயரையோ வைத்திருக்கலாம். ஆனால் அஜித் அப்படி செய்யவில்லை. அம்மா... இது உங்க குழந்தை. இந்தக் குழந்தைக்கு பெயர் வைக்கிற உரிமை உங்களுக்குதான் இருக்கு. உங்க பாட்டி பெயரையோ, அம்மா பெயரையோ ஏதாவது கடவுள் பெயரையே இல்லை உங்களுக்குப் பிடித்த வேறு ஏதாவது பெயரையோ வையுங்கள். உங்க குழந்தைக்கு பெயர் வைக்கிற உரிமையை மட்டும் வேறு யாருக்கும் தராதீங்க. நான் வெறும் நடிகன்தான் என்று அந்த பெண்மணியை அனுப்பி வைத்தார்.
ஆசையோடு பெயர் வைக்க வருகிறவர்களுக்கு மனம் நோகாமல் பெயர் வைப்பது ஒருவகை என்றால், அவர்களின் தன்னமானத்தை, உரிமையை அவர்களுக்கே புரிய வைப்பது இன்னொருவகை. தனிமனித வழிபாடு மிகுந்த சமூகத்தில் முன்னதைவிட பின்னதுதான் அதிகமாக தேவைப்படுகிறது.