திருமண தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்


திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும்.
சிலருக்கு அதிக முயற்சிக்கு பிறகு கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

திருமணம் என்றவுடன் பிள்ளையார் சுழி போடுவதுபோல முதலில் நிற்பது ஜாதகம்தான். திருமண பேச்சை எடுத்ததுமே, ஜாதகம் பார்த்தாச்சா? ஜாதகம் எப்படி இருக்கு? தோஷம் இருக்கா? பரிகாரம் செஞ்சீங்களா? உற்றார், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மாறிமாறி கேட்பார்கள். திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. இவை காரணமாக திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.

ஜாதக தோஷங்கள் என்ன?

பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம். இது தவிர வேறு சில முக்கியமான தோஷங்களும் உள்ளன. அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகும்.

செவ்வாய் தோஷம்: ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.

ராகு - கேது தோஷம்: லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.

மாங்கல்ய தோஷம்: இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.

சூரிய தோஷம்: ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது.

களத்திர தோஷம்: களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும்.

மேற்சொன்ன அமைப்புள்ள தோஷ ஜாதகங்களுடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதால் தோஷங்கள் நீங்குகின்றன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். மேலும் சில எளிய பரிகாரங்கள் செய்வதால் தடைகள், இடையூறுகள் விலகும்.
தோஷமும் பரிகாரங்களும்:

செவ்வாய் தோஷம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.

ராகு-கேது தோஷம்: திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாம்.

சூரிய தோஷம்: ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். ஆடுதுறை அருகில் உள்ள சூரியனார்கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

களத்திர தோஷம்: சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் பிட், தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம். ஜாதக அமைப்புகளை சீர்தூக்கி பார்த்து தகுந்த ஜாதகத்தை சேர்ப்பதன் மூலமாகவும் எளிய பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget