நடிகர் : சர்வானந்த்
நடிகை : ரூபி பரிகர்
இயக்குனர் : தேவா கட்டா
"எங்கேயும் எப்போதும் சர்வானந்த், தமிழில் காலூன்ற வழி செய்யும் வகையில் வெளிவந்திருக்கும் தெலுங்கு டப்பிங் படம் தான் "பதவி" என்றாலும், நேரடித் தமிழ் கமர்ஷியல் படங்களில் இல்லாத அரசியலும், அதிரடியும், காதலும், காமெடியும் தான் படத்தின் பலம்!
கதைப்படி, இரண்டு அப்பாவுக்கும், ஒரே அம்மாவிற்கும் பிறந்த சகோதரர்கள் சர்வானந்தும், சந்தீப்பும். சர்வானந்த்தின் அப்பா, சர்வாவின் சின்ன வயதிலேயே இறந்து போக அவரது நண்பரான சாய்குமார், சர்வாவின் அம்மாவிற்கு இரண்டாவது புருஷனாகிறார். அந்த ஜோடிக்கு சந்தீப் பிறக்கிறார். சர்வானந்தின் அம்மா வந்தநேரம் சாய்குமார் எம்.எல்.ஏ., அமைச்சர் என்று ஏகத்திற்கும் உயர, கூட இருந்து இரண்டாவது அப்பாவிற்கு உதவுகிறார் சர்வானந்த்! ஆனால், சாய்குமாரின் நேரடி மகன் சந்தீப்போ கஞ்சா, மது, மாது என்று தவறான வழிக்கு போகிறார். சர்வானந்தை தன் அரசியல் வாரிசாக நியமிக்கும் சாய்குமார், தான் பெற்ற மகன் சந்தீப்புக்காக, சர்வானந்தை தீர்த்து கட்டவும் துணிகிறார். அதில் இருந்து தப்பிக்கும் சர்வாவுக்கு, தன் தந்தையை கொன்றதும் சாய்குமார் தான் என்பது தெரியவருகிறது. அதன்பிறகு என்ன என்பதுதான் "பதவி படத்தின் மீதிக்கதை!
சர்வானந்த், சாய்குமார், சந்தீப், கதாநாயகிகள் ரூபி பரிகர், ரேஷ்மா கெளதம் மற்றும் ஜீவா, கிஷோர், சுரேகாவாணி பவித்ரா என்று பெரும்பாலும் தெலுங்கு முகம் என்றாலும், அந்த குறை தெரியாமல், கட்சி பாகுபாடின்றி, தமிழக அரசியல் பேசும் வி.பிரபாகரின் வசனவரிகள் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.
ஷியாம்தத்தின் அழகிய ஒளிப்பதிவும், மகேஷ் சங்கரின் இனிய இசையும், தேவா கேவின் இயக்கமும் படத்தின் மற்ற பெரும்பலங்கள்!
மொத்தத்தில், "பதவி", "வெற்றி மேதாவி!"