கிராமத்து மன்மதனாக திரியும் செவ்வாளைக்கு ஒரே மகன் பிண்டு. தன் இன்பங்களுக்கு மகன் இடையூறாக வந்து விடுவானோ எனக்கருதும் செவ்வாளை அவனை அடிமைபோல நடத்துகிறார். அந்த ஊருக்கு பிழைப்பு தேடி வரும் சுசித்ரா உன்னியை காதலிக்கிறார் பிண்டு. தந்தையின் கொடுமை தாங்காமல் ஊரைவிட்டு செல்ல நினைக்கும் பிண்டுவை, உள்ளூரிலேயே சுயமாக வேலை செய்ய வைக்கிறாள் சுசித்ரா. ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிக்கும் பிண்டு பெரிய ஆளாக வருகிறார்.
இத்தனைக்கும் காரணமான வெள்ளச்சியை திருமணம் செய்யப்போகும் நேரத்தில் அவர்கள் காதலை பிரிக்க கொலை செய்ய துணிகிறார் செவ்வாளை. தந்தை, மகனை பழிவாங்கினாரா, பிண்டு-சுசித்ரா காதல் நிறைவேறியதா என்பது மீதி கதை. 80-களில் பாரதிராஜா காட்டிய கிராமத்தில் மீண்டும் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். காட்சி அமைப்பிலும், வசனங்களின் அந்த சாயல் அதிகம். சாய் நடராஜின் கேமராவில் கிராமத்தின் அழகு பளிச். பவதாரிணியின் இசையில் அப்பாவின் (இளையராஜா) சாயல். சில காட்சிகளில் அவரது இசையை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். அப்பாவை எதிர்க்க துணிவில்லாமல் அவரது கொடுமைகளை சகித்துக்கொண்டே வேலை செய்யும் அப்பாவி கேரக்டரிலும், ரியல் எஸ்டேட்டில் வளர்ந்த பிறகு வெள்ளை வேட்டி, சட்டை, தங்க சங்கிலி பளபளக்க பண்ணுகிற அலப்பறை கேரக்டரிலும் பிண்டு கச்சிதம். இரண்டு கேரக்டரிலும் தன் காதலை மென்மையாக கடப்பது அழகு. ‘நீ விஷத்தை கொடுத்தாக் கூட ஏன்னு கேட்காம சாப்பிடுவேன்’ என்று உருகுவதும், காதலியை செல்லமாக அழைப்பதுமாக கிராமத்து யதார்த்த இளைஞனை கண்முன் நிறுத்துகிறார்.
சுசித்ரா வெள்ளச்சியாக நடித்திருக்கிறார். ஓடிப்போன தாயின் அவமானம், தந்தையின் கவுரவம் இவற்றுக்கு இடையில் தவித்து நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆனால் காதல் காட்சிகளில் பிண்டுவிடம் இருக்கும் துடிப்பு இவரிடம் மிஸ்சிங். செவ்வாளை வில்லன், தந்தையாக மிரட்டுகிறார். வில்லனாக அறிமுகமாகும் மதுமாறன் காமெடியனாகி விடுகிறார். காமெடியனாக இருக்கும் கஞ்சா கருப்பு, வில்லனாகிறார். ‘உன் கல்யாணத்துக்கு மொய் எழுத மறந்துடுவேன்’ என்று அடிக்கடிச் சொல்லி சிரிக்க வைக்கிறார் பாண்டு. ஊராரிடம் தன் காதலை மறைக்க “என்னை காதலிக்க அவனுக்கு என்ன தகுதி இருக்கு?’’ என்று கேட்கும் ஹீரோயின், அதே வசனத்தை கிளைமாக்சில் பயன்படுத்துவது உட்பட, ஆங்காங்கே பளிச்சிடும் யதார்த்தங்கள் படத்துக்கு பலம். மற்றபடி கிராமம், காதல், பாட்டு, சண்டை எல்லாம் இருக்கிறது. ஆனால் எதுவும் புதிதாக இல்லையே.