துக்கடு சினிமா விமர்சனம்


பிரகாஷ்ராஜ் நியாயமான அரசியல்வாதி. சொந்த பணத்தை செலவு செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். சர்வதேச தாதா சோனு சூட், பிரகாஷ்ராஜ் தொகுதியில் போலி மருந்து விற்க வருகிறான். பிரகாஷ்ராஜ் அதற்கு எதிராக நிற்கிறார். இதனால் பிரகாஷ்ராஜை போட்டுதள்ளி விட்டு போகிறார் சோனு சூட். இதில் பிரகாஷ்ராஜ் தம்பி செத்துப்போக, இன்னொரு தம்பி சிறைக்குச் செல்ல, வில்லன் தாக்கியதில் கோமா நிலையை அடைகிறார் பிரகாஷ்ராஜ்.
மக்கள் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்க மும்பை மருத்துவமனையில் 20 வருடங்கள் கழித்து கண் திறக்கிறார் பிரகாஷ்ராஜ். 

அவரது மகன் மகேஷ் பாபு மும்பையில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருக்கிறார். கண்விழித்த பிரகாஷ்ராஜுக்கு எந்த வித அதிர்ச்சி தரும் தகவலும் சொல்ல வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். அதனால் பிரகாஷ்ராஜ் ஆசைப்பட்டது மாதிரியே மகேஷ்பாபு எம்.எல்.ஏ ஆனது போலவும், இறந்து போனவர்கள் உயிரோடு இருப்பது போலவும் நாடகம் ஆடுகிறார்கள். இதற்கிடையில் பிரகாஷ்ராஜை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை அவருக்குத் தெரியாமலேயே அவரைக் கொண்டு பழிவாங்குகிறார்கள். இந்த இரண்டும் எப்படி நடக்கிறது என்பதை லாஜிக் பற்றி கவலைப்படாமல் சுவராஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

மகேஷ்பாபுவின் ஸ்டைல், நடை, பஞ்ச், டான்ஸ் அத்தனையும் அப்படியே விஜயை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கிறது. காதலி சமந்தாவிடம் ரொமான்ஸ் விடுவதும், போலீஸ் கண்டிப்பை காதலியிடம் காட்டிவிட்டு பின்பு அவரிடம் அசடு வழிந்து நிற்பதிலும் மகேஷ்பாபு, சபாஷ்பாபு ஆகிறார். அப்பாவுடனான சென்டிமென்ட் காட்சியில் கண்ணீரையும் வரவழைக்கிறார். 

 சமந்தா வழக்கம் போல அழகு பதுமை. மகேஷ்பாபுவுடன் கவர்ச்சி உடைகளில் டூயட் பாடுகிறார். காதலிக்கும் போது பூரித்து நிற்கிறார். பிரகாஷ்ராஜும், நாசரும் தங்கள் முத்திரைகளை அழுத்தமாக பதித்துவிட்டுச் செல்கிறார்கள். நடிப்பு ஆசையில் வீட்டை சூட்டிங்கிற்கு கொடுத்து விட்டு அடிவாங்கியே சிரிப்பு மூட்டி, வயிற்றை வலிக்க வைக்கிறார் பிரம்மானந்தம்.

படத்துக்கு பெரிய பலமே வசனங்கள்தான். டைமிங்காக வெளுத்து கட்டியிருக்கிறார்கள். சமந்தாவின் மீது கோபம் கொள்ளும் மகேஷ்பாபு, “வேணா பாருங்க கடைசியில அவளுக்கு காதலிக்க யாரும் கிடைக்காம ஈயைத்தான் காதலிக்கப்போறா” (‘நான் ஈ’ படத்தில் சமந்தா ஈயை காதலிப்பார்). இப்படி பல இடங்களில் வசனங்கள் கைதட்டலை அள்ளுகிறது. தமனின் இசையில் பாடல்கள் டூயட்டாக இருந்தாலும் ஆட வைக்கிறது. ஒளிப்பதிவு ரிச். சண்டைக் காட்சிகளில் அபாரமாக பணியாற்றி இருக்கிறது கேமரா. லாஜிக் இல்லாத வேட்டைதான் என்றாலும் ரசிக்கலாம்.

பழைய பதிவுகளை தேட