கெளரவம் சினிமா விமர்சனம்


நடிகர் : அல்லு சிரிஷ்
நடிகை : யாமி கவுதம்
இயக்குனர் :ராதாமோகன்

“அழகியதீயே’மொழி’ அபியும்நானும்’ உள்ளிட்ட வெற்றி திரைக்காவியங்களை தந்த இயக்குனர் ராதா மோகன் - தயாரிப்பாளர் பிரகாஷ்ராஜ் கூட்டணியில் புதிய திரைப்படம் தான் கௌரவம்’. கலை படமாகவும் இல்லாமல் கமர்ஷியல் படமாகவும் இல்லாமல்
டாக்குமெண்ட்டரி படங்கள் டைப்பில் தற்போது தமிழகத்தில் இல்லாத ஜாதியத்தையும் இரட்டை டம்ளர் முறைகளைப் பற்றியும் பேசும் “கௌரவம்’ 1970-80களில் வெளிவந்திருந்தால் மேற்படி ராதா மோகன் - பிரகாஷ் ராஜ் கூட்டணிக்கு கௌரவமாக இருந்திருக்கும்.

கதைப்படி. சென்னைவாசியான இளம் ஹீரோ அல்லு சிரீஷ் ஏதோ வேலை விஷயமாக டி.வெண்ணூர் கிராமத்தை காரில் கடக்கும்போது, அவருக்கு தன்னுடன் இன்ஜினியரிங் படித்த சண்முகத்தின் ஞாபகம் வருகிறது. தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்த சண்முகத்திற்கு டி.வெண்ணூர் தான் சொந்த ஊர் என்பதால் நண்பனைத்தேடி அந்த ஊருக்குள் போகிறார். அங்கு நண்பனின் ஒன்றுவிட்ட அண்ணன் குமரவேல், சண்முகம் ஊர் பெரியவரின் மகளை இழுத்துக் கொண்டு ஓடிப் போய்விட்டதாக கூறி அல்லு கிரீஷை சண்முகத்தின் வயசாளியும், நோயாளியுமான அப்பாவிடம் அழைத்து போகிறார். அவரோ அல்லு சிரீஷின் கையை பற்றிக்கொண்டு, ஊர் பெரியவரும், உயர் ஜாதிக்காரருமான பசுபதி ஐயாவின் மகளை இழுத்துக் கொண்டு சண்முகம் ஓடிப்போய்விட்ட பிறகு என்னை கூப்பிட்டு அனுப்பிய பசுபதி ஐயா, இன்று முதல் எனக்கு அவள் மகளும் அல்ல, உனக்கு அவன் மகனும் அல்ல... என்று சத்தியம் செய்துவிட்டு வேறு வேலையை பார்ப்போம் என்றார். அதுமுதல், பெரிய மனுஷன் அவர் சொல்படி கேட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன்.., என்றாலும் அவ்வப்போது பிள்ளை நினைப்பு, வாட்டி வதைக்கிறது... நீதான் தம்பி என் பிள்ளையை தேடி கண்டுபிடித்து தரணும்.... என்கிறார். 

அல்லுசிரீஷ் சென்னை திரும்பி தன் நண்பனை கூட்டிக் கொண்டு மீண்டும் டி.வெண்ணூர் போகிறார். அங்கு கம்யூனிசவாதி நாசரின் மகளும் இளம் வக்கீலுமான கதாநாயகி யாமி கௌதமின் துணையுடன் சண்முகம் ஜோடியை தேடும் படலத்தில் குதிக்கிறார். பசுபதி ஐயாவின் மகனாலும், ஓடிப்போன பெண்ணின் கணவராக காத்திருந்த முறை மாமன் மற்றும் உள்ளூர் போலீஸாலும் மிரட்டல்களுக்கு உள்ளாகிறார். அப்புறம்? அப்புறமென்ன?... சண்முகத்துடனும் தன்னுடனும் படித்த ஒட்டுமொத்த இன்ஜினியர்களையும் அந்த ஊருக்கு வரவழைத்து மீடியாக்களின் உதவியுடன் போராட்டம் நடத்துகிறார். ஒரு கட்டத்தில் பசுபதி ஐயா குடும்பத்தாரால் சண்முகம் ஜோடி கவுரவ கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வருகிறது. விழுவாரா ஹீரோ? வில்லன்களை பொளந்து கட்டுகிறார். பசுபதியின் மகனை கூண்டில் ஏற்றுகிறார். பசுபதி ஐயா தற்கொலை செய்து கொள்கிறார். நாசரின் மகளும் நாயகியுமான இளம் பெண் வக்கீலுமான யாமி கௌதமுடன் இடையிடையே டூயட் பாடி இறுதியில் ஹீரோ தன் காதலை சொல்கிறார். ஜாதி வெறியால் ஒரு காதல் மடிந்த இடத்தில் ஓர் புதிய காதல் உதயமாகிறது. இதுதான் “கௌரவம்’ படத்தின் மொத்த கதையும் இந்த கதையை எத்தனை மெதுவாகவும் மெருகின்றியும் எடுக்கமுடியுமோ அத்தனை வெறுப்பேற்றும்படியும் விறுவிறுப்பின்றியும் இயக்கியிருக்கிறார் ராதாமோகன்! படத்தின் பல காட்சிகள் இது ராதாமோகன் படமா? சாதா மோகன் படமா? என்றே கேட்க தூண்டும் விதத்தில் இருப்பது பலவீனம்.

கதாநாயகர் அல்லு சிரீஷ்., நாயகி யாமி கௌதம் இருவர் நடிப்பில் நாயகி யாமி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிடுகிறார் என்றால், நாயகர் மூன்றாம் வகுப்பில் கூட தேறமறுத்து நம்மை தேற்ற மறுக்கிறார். பசுபதி ஐயாவாக பிரகாஷ்ராஜ், அவரது மனைவி, மகன், வளர்ப்பு மகன்., ஓடிப்போன பெண்ணின் முறைமாமன் எல்லோருமே பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே! பலே! 

விஜியின் வசனங்களும், எஸ்.எஸ். தமனின் இசையும் கௌரவம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன என்றால் ப்ரீதாவின் ஒளிப்பதிவு பலவீனத்தை கூட்டியிருக்கிறது.
ராதாமோகன் - பிரகாஷ்ராஜ் கூட்டணி தமிழகத்தில் இப்பொழு இல்லாத ஜாதி கொடுமைகளை ஒழிக்கிறேன் பேர்வழி என தங்களுக்கென நிரந்தரமாக நிரம்பியிருந்த ரசிகர்கள் கூட்டத்தை ஒழித்து கட்டியிருப்பதைதான் கௌரவ கொலை என குறிப்பிட வேண்டும்!
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget