டர்ட்டி பிக்சர் தந்த வசூல், புகழ் இரண்டும் இயக்குனர்களை சில்க் ஸ்மிதாவின் கதையை நோக்கி இழுத்தது. சில்க்கின் கேரக்டரில் நடிக்க நடிகைகளுக்குள் போட்டா போட்டி. அதில் வெற்றி பெற்றவர் சனாகான். தமிழ், மலையாளத்தில் இயக்குனர் அனில் சில்க்கின் வாழ்க்கை கதையை இயக்கியிருக்கிறார். சில்க்காக நடித்திருப்பவர் சனாகான். நடிகையின் டைரி என்ற பெயரில் தமிழில் வெளியாகும் அப்படத்தின் பாடல்கள்
வெளியீட்டு விழா சில நாட்கள் முன்பு சென்னையில் நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட சனாகான், விழா முடிந்த பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சாதாரணமாக நடிகைகளிடம் கேட்கத் தயங்குகிற கேள்விகள் சரமாரியாக கேட்கப்பட்டன. சில்க்கின் வேடத்தில் நடித்தவர்தானே என்ற எண்ணத்தில் நிருபர்களின் மனக்கதவு அன்று தடையின்றி திறந்து கொண்டது.
எனில், சில்க் ஸ்மிதா உயிரோடு இருந்த போது என்னவிதமான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டிருப்பார்? ஏடாகூடமான கேள்விகளுக்கு அனாயசமாக பதிலளித்த சனாகான் ஓர் ஆச்சரியம்தான்.
சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் நடித்திருக்கிற நீங்கள், அவரின் படங்களைப் பார்த்து அவரது மேனரிசங்களை ஸ்டடி செய்தீர்களா...?
சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் நடிப்பது உறுதியானதும், இணையத்தில் அவரின் படங்களை தேடிப் பார்த்தேன். அவருடைய மேனரிசங்களை, முகபாவனைகளை அந்தப் படங்களிலிருந்து தெரிந்து கொண்டேன்.
சில்க்கின் அகால மரணம் குறித்த உங்கள் கருத்து என்ன?
அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக இப்போதும் பேசிக் கொள்கிறார்கள். சிலர் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். வேறு சிலர் அது கொலை என்கிறார்கள். எதுவாக இருந்தாலும் சில்க்கின் மரணம் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்புதான்.
உங்கள் வாழ்க்கையில் சில்க்கிற்கு ஏற்பட்டது போன்ற சோதனைகள் வந்தால்....?
நான் தைரியமான பெண். யாரையும் டிப்பண்ட் பண்ணி இருக்க மாட்டேன். அப்படி இருந்ததும் இல்லை. சொந்தக் காலில் நிற்க எனக்குத் தொப்யும். எந்த ஆணாலும் என்னை விரக்தி அடைய வைக்க முடியாது. என்னால்தான் ஆண்களுக்கு பாதிப்பு வருமே தவிர ஆண்களால் நான் பாதிக்கப்பட மாட்டேன்.
செக்ஸ் உடன்பாடு வைத்துக் கொண்டால்தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என நடிகையின் டைரி படத்தில் ஒரு வசனம் வருகிறது. அது உண்மையா...?
செக்ஸ் உடன்பாடு வைத்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அது அவரவர் பர்சனல் விஷயம். ஆனால் அப்படி எதுவும் எனக்கு நடக்கவில்லை. நடக்கவும் அனுமதிக்க மாட்டேன். நான் உறுதியான பெண். யாருடனும் எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.
சில்க் ஸ்மிதாவின் வேடத்தில் நடித்திருக்கிறீர்கள். சில்க்கின் ஆவி உங்கள் கனவில் வந்தால்...?
பயப்பட மாட்டேன். நிச்சயமாக தெரியும், சில்க்கின் ஆவி என்னை மிரட்டாது. என்னுடைய வேடத்தில் நன்றாக நடிக்கிறாய் என்று என்னை பாராட்டும், என்னுடைய வேடத்தில் நீ நடிப்பதற்காக பெருமைப்படுகிறேன் என்றுதான் சொல்லும்.