
அனிமேஷன் படவுலகில் புதிய சரித்திரம் படைக்க வெளிவந்திருக்கும் ஆக்ஷ்ன், காமெடி, லவ், பேமிலி சென்டிமெண்ட் நிரம்பிய கலக்கல், கலர்புல் கதையம்சம் கொண்ட அனிமேஷன் திரைப்படம் தான் "தி க்ரூட்ஸ்!" ஐஸ்ஏஜ், ஷெர்க், மெடகாஸ்கர் உள்ளிட்ட உலகின் சிறந்த அனிமேஷன் திரைப்படங்களை தயார் செய்து வெளியிட்ட பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸும், டிரீம்வொர்க் படநிறுவனமும் இணைந்து மிகப்பெரும் பொருட்செலவில் மிகப்பிரம்மாண்டமாக
தயாரித்துள்ள 3டி அனிமேஷன் படம் "தி க்ரூட்ஸ்" என்றால் மிகையல்ல!
தந்தை, மகள் பாசமும், அவர்கள் இருவரிடையே புதிதாக வரும் மகளின் காதலனின் நேசமும், அதனால் அவர்களது குடும்பம் பார்க்கும் புதிய உலகமும் தான் "தி க்ரூட்ஸ்" படத்தின் கரு எனலாம்!
கிரேக் பாசமிகு குடும்பத்தலைவன்., அவரது அன்பு மகள் ஈப்பின் கண்டிப்பான தந்தையும் கூட. ஈப்பும் அப்பாவிற்கு அடங்கி நடப்பவள்தான். ஆனாலும் இளமை குறும்புகளும், துறுதுறுப்பு நிரம்பியவள்! ஒருநாள் அவர்கள் குடும்பம் வசிக்கும் பெரும் குகைப்பகுதி இயற்கை சீற்றத்தினால் சிதைந்து சின்னாபின்னமாகிவிட, புதிய உலகம் தேடி புறப்படுகின்றனர் அத்தனைபேரும்! அதுவரை அவர்கள் அறியாத வாழ்க்கையையும் சந்திக்காத மனிதர்களையும் சந்திக்கும் மகள் ஈப்பையும், அப்பா க்ரைக்கையும் கவருகிறான் இளைஞன் ஒருவன். அவன், ஈப்பின் வாழ்க்கையில் இடம்பெற துடிக்கிறான். ஈப்பும் விரும்புகிறாள். அவர்கள் காதலுக்கு அப்பா கிரேக் சம்மதித்தாரா...? இயற்கை சீற்றங்கள் வழிவிட்டதா இல்லையா...? என்பது க்ளைமாக்ஸ்!!
தந்தை க்ரேக்காக வரும் அனிமேஷன் பாத்திரத்திற்கு பிரபல ஹாலிவுட் ஹீரோ நிக்கோலஸ் கேஜூம், மகள் ஈப் கேரக்டருக்கு ஹாலிவுட் ஹீரோயின் எம்மாஸ்டோனும், காதல் இளைஞன் பாத்திரத்திற்கு மற்றொரு ஹாலிவுட் பிரபலம் ரியான் ரெனோல்ட்ஸ்ம் குரல் கொடுத்திருப்பது, "தி க்ரூட்ஸ்" படத்திற்கு மேலும் பலர் சேர்க்கும் ஹைலைட்ஸ் சமாச்சாரமாகும். கிரிஸ் சாண்டர்ஸின் எழுத்து இயக்கத்தில், குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் கோடை கும்மாளமாக வந்திருக்கிறது தி க்ரூட்ஸ் 3 டி.
மொத்தத்தில் "தி க்ரூட்ஸ்" - ஹாலிவுட் "ஹிட் ரூட்ஸ்"