உதயம் என்எச்4 திரை முன்னோட்டம்


வெற்றிமாறன் தனது பேட்டிகளில், முதலில் தேசிய நெடுஞ்சாலை என்ற படத்தை எடுக்க இருந்ததாகவும், தனுஷுக்கு பொல்லாதவன் ஸ்கி‌ரிப்ட் பிடித்திருந்ததால் நெடுஞ்சாலையை கைவிட வேண்டியதாயிற்று எனவும் சொல்லியிருக்கிறார். இனி ஒருபோதும் அந்த கதையை எடுக்க முடியாது என தெரிந்திருக்கும் போல. அதே கதை, திரைக்கதை, வசனம், பெயர் மட்டும் உதயம் என்எச்4. இயக்கியிருப்பது
வெற்றிமாறனின் அசோஸியேட் மணிமாறன். வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயா‌ரிப்பு, இணை தயா‌ரிப்பு தயாநிதி அழகி‌ரி.

பதினெட்டு வயது முடிவதற்குள் ஒரு பெண் என்ன முடிவு எடுத்தாலும் அது சட்டப்படி செல்லாது. உதாரணமாக ஹீரோயின் அர்ஷிதா ஹீரோ சித்தார்த்தை காதலிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். விஷயம் வெளியே தெரிந்து ரசாபாசம் ஆகிவிடுகிறது. எப்படியும் பி‌ரித்து விடுவார்கள் எனும் போது காதலர்கள் யாருக்கும் தெரியாமல் ஓடிவிட நினைக்கிறார்கள். ஆனால் ஒரு பிரச்சனை. அர்ஷிதாவுக்கு 18 வயது முடிய இன்னும் ஓர் இரவு பாக்கியிருக்கிறது. அந்த இரவுக்குள் அவர்களை பிடிக்க முயல, அவர்கள் தப்பிக்க முயல...

இதுதான் படத்தின் கதையா என்று கேட்பீர்கள். இதே லைனில்தான் உதயம் எடுக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம். இசைக்கு ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவுக்கு வேல்ராஜ் என்று அதே வெற்றிமாறன் டீம். படத்தின் குவாலிட்டியைப் பார்த்து தம்பி தயாநித் தயா‌ரித்ததை அண்ணன் உதயநிதி வாங்கி வெளியிடுகிறார். அப்படி கிராஸ் ரூட்டில் ஆரம்பித்தது உதயநிதியின் ரூட்டிற்கு வந்திருக்கிறது.

யுஏ வாங்கியிருக்கும் படம் வரும் வெள்ளியன்று திரைக்கு வருகிறது.

பழைய பதிவுகளை தேட