கல்லாப்பெட்டி சினிமா விமர்சனம்

வழக்கமான கந்துவட்டி கதைதான். அதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கும் விதத்தில் "கல்லாப்பெட்டி" களை கட்டியுள்ளது என்றால் மிகையல்ல! கதைப்படி நாயகர் அஸ்வின் பாலாஜி ரியல் எஸ்டேட் புரோக்கர் எனும் பெயரில், நண்பர் பிளாக் பாண்டியுடன் சிங்கிள் டீக்கு கூட வழியில்லாமல் ஊர் சுற்றி வருபவர். குடி, கும்மாளம்(இதற்கு மட்டும் ஏது காசு) என திரியும் அவருக்கு, அந்த ஊர் ஆட்டக்காரி ரோஸின் ஜாலி
மீது காதல். ஹீரோவின் அம்மாவோ, கந்துவட்டிக்காரர் நமோ நாராயணாவிடம் கொஞ்சம் வட்டிக்கு பணம் வாங்கி மார்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து, தன் வயிற்றையும், தன் பிள்ளையின் (அதாங்க ஹீரோ) வயிற்றையும் ஒரு சேர கழுவி வருகிறார். 


இந்நிலையில் கந்துவட்டி நமோ நாராயணாவின் குரூப்பால் வட்டி ஒழுங்காக கட்டாததால் அவமானப்படுத்தப்படுகிறார் ஹீரோ அஸ்வின் பாலாஜியின் தாயார். அதேநேரம் தன் காதல் நாயகி ரோஸின் ஜாலியும், அவரது தங்கை ஜோதிஷாவும் ஆட்டகாரிகள் ஆவதற்கும், அவர்களது அம்மாவுக்கும் குடியிருக்கும் வீடு பறிபோக காரணம் கந்துவட்டி நமோ நாரயணன் தான் எனும் விஷயமும், கூடவே தன் காதலி ரோஸின் ஜாலி மீது நமோ நாராயணனுக்கு ஒருவித நப்பாசை என்பதும் ஹீரோவிற்கு தெரியவருகிறது. நேர்மையான போலீஸ் அதிகாரி ஜெயப்பிரகாஷ் உதவியுடன் கந்துவட்டி கோஷ்டியை எதிர்க்க துணிகிறார் ஹீரோ. இறுதியில் வென்றது நாயகரா? நமோ நாராயணன் கோஷ்டியா...? என்பது வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!



புதுமுகம் அஸ்வின் பாலாஜி யோகா எனும் பாத்திரத்தில் ரியல் எஸ்டேட் புரோக்கராக அந்தக்காலத்து டி.ஆர். மாதிரி அவ்வப்போது வந்து முடியை சிலுப்புவதும், குடி, கும்மாளம் என கலர் கலர் ஜிகினா காஸ்டியூம்களில் ஆட்டம் பாட்டமென பட்டையை கிளப்புவதும் செம காமெடி! சுடுகாட்டில் குடித்துவிட்டு மல்லாந்து படுத்தபடி நிலவை பார்த்து புலம்பும் இடங்களில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது! மனிதர் கதாநாயகர் ஆசையை கைவிட்டு விட்டு காமெடியனாக களம் இறங்கினால் தமிழ் சினிமாவில் சந்தானத்திற்கு போட்டியாகலாம்!




ரோஸின் ஜாலி, ஜோதிஷா என இரண்டு நாயகியர். இருவரும் அக்கா தங்கையாக படம் முழுக்க வருகின்றனர். முன்னவர் கிளாசிக்கல் டான்ஸராக கந்துவட்டி நமோ நாராயணனின் ஆசைக்கும், காசுக்கும் ஆடுகிறார் என்றால், பின்னர் கிளாஸ் - கள் - சாராய டான்ஸராக குடி மையங்களில் கிளாமர் கோதாவில் இறங்கி ஆடுவது என்று இருவேறு பரிமானங்களில் பளிச்சிட்டிருக்கின்றனர். ரோஸின் ஜாலியுடனான ஹீரோவின் காதலை விட ஜோதிஷாவுடனான ஹீ‌ரோவின் ஜாலி தான் ஹைலைட்!




பிளாக் பாண்டியன் கடி, மேனேஜர் கிருஷ்ணமூர்த்தியின் குடி போன்ற போர் சமாச்சாரங்களை ஒதுக்கிவிட்டு போலீஸ் அதிகாரி ஜெயப்பிரகாஷின் புதுமையான டீலிங், இரண்டு பொண்டாட்டி., 3வதாக ஒரு குட்டி... என அலையும் கந்துவட்டி நமோ நாராயணனின் டீசண்ட் காட்டு மிராண்டிதனம் எல்லாம் ரசிக்கும் ரகம்!




ஹீரோ பலவீனம், ஹீரோயின்கள் சுகவீனம்(!) என்பது உள்ளிட்ட ஒரு சில குறைகள் இருந்தாலும் ஜி.செல்வக்குமாரின் ஒளிப்பதிவு, சபேஷ் முரளியின் இசை, லை ஜீஸின் படத்தொகுப்பு உள்ளிட்ட பலங்கள், புதியவர் ராராவின் எழுத்து-இயக்கத்தில், "கல்லாப்பெட்டி"-யை நல்லாவே நிரப்பும் என சொல்ல தூண்டுகிறது! 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget