கல்விக் கடன் வாங்கினால் வருமான வரி சட்டம் 80 இ பிரிவின் கீழ் வரி விலக்கு பெற முடியும். உங்களுக்காகவோ, உங்கள் மனைவி, குழந்தைகளுக்காகவோ கல்விக் கடன் வாங்லாம். நீங்கள் வெளிநாட்டிலோ அல்லது இந்தியாவிலோ கல்வி கற்க கடன் பெறலாம். உயர் கல்வி கற்க, நிதி நிறுவனத்தில் இருந்தோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில் இருந்தோ பெறப்பட்ட கல்விக் கடனுக்காக வசூலிக்கப்படும் வட்டியின்
மூலம் நீங்கள் வரி விலக்கு பெறலாம்.
உயர் கல்வி என்றால் பொறியியல், மருத்துவம், மேலாண்மை போன்றவற்றில் முழுநேர பட்டப்படிப்பாக இருக்க வேண்டும் அல்லது முழுநேர முதுகலை பட்டப்படிப்பாக இருக்க வேண்டும் அல்லது கணிதம் மற்றும் புள்ளியியல் துறைகளுக்கு உட்பட்ட பயனுறு அறிவியல் அல்லது தூய அறிவியல் போன்றவற்றில் முழுநேர முதுகலை பட்டப்படிப்பாக இருக்க வேண்டும்.
கடன் பெறும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:
கல்விக் கடனுக்கு குறிப்பிட்ட ஆண்டில் செலுத்தப்பட்ட வட்டியில் இருந்து நீங்கள் வரி விலக்கு பெறலாம்.
வரி சலுகைகள் நீங்கள் செலுத்தும் வட்டிக்கு மட்டும் தான், அசலுக்கு கிடையாது. உங்களின் முதல் தவணை தொடங்கிய தேதியில் இருந்து 8 ஆண்டுகள் வரை மட்டுமே வரி சலுகைகள் பெற முடியும். 8 ஆண்டுகளுக்கு பிறகு, வரி சலுகைகளை பெற உங்களுக்கு தகுதி இல்லை. எனவே 8 ஆண்டுகளுக்குள் கல்வி கடனை திரும்ப பெறுவது நல்லது.
நிதி நிறுவனத்தில் இருந்தோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில் இருந்தோ அல்லது வங்கிகளில் இருந்தோ கல்விக் கடனை பெற்றிருக்க வேண்டும்.
உங்களின் உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் இருந்து பெறப்பட்ட கடனிற்கு பிரிவு வருமான வரி சட்டம் 80 இ பிரிவின் கீழ் வரி சலுகைகள் பெற முடியாது.
முழுநேர கல்வி கற்பவருக்கு மட்டும் தான் வரி சலுகைகள் உண்டு.