சூது கவ்வும் சினிமா விமர்சனம்


படம் புது ரக படம். நல்லவன் கெட்டவன் என இருவர், கெட்டவன் வில்லன், நல்லவன் ஹீரோ, ஹீரோவை காதலிக்கும் ஹீரோயின், நகைச்சுவைக்கென தனியே ஒரு காமெடியன் என எந்த பார்முலாவும் இல்லாமல் வந்திருக்கும் படம் தான் இது. அதற்கே இயக்குனருக்கு பூங்கொத்து அனுப்பலாம்.ஒரு அறையில் வேலையில்லாத மூன்று நண்பர்கள் தங்கியுள்ளனர். விஜய்சேதுபதியுடன் ஒரு ஒயின்ஷாப் சண்டையில் ஒன்று சேர்கிறார்கள். பிறகு சிறுசிறு கடத்தல்களை சீரியசாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.
நமக்கு தான் பார்க்க செம காமெடியாக இருக்கிறது.

ஒரு சந்தர்ப்பத்தில் அமைச்சரின் மகனையே கடத்தி 2கோடி பெறும் திட்டம் உருவாகிறது. கடத்தி பணத்தையும் அமைச்சர் மகனின் உதவியுடன் பெறுகிறார்கள். ஆனால் பணத்துடன் போகும் வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது. அதனை பயன்படுத்தி அமைச்சரின் மகன் பணத்தை தூக்கிச் சென்று விடுகிறார்.

பணமும் போய் ஒரு முரட்டு போலீஸ் இன்ஸ்பெக்டரும் துரத்துவதால் கோர்ட்டில் சரணடைகிறார்கள். பிறகு என்னவானது, பிரச்சனையில் இருந்து தப்பினார்களா என்பதே படத்தின் கதை.

படத்தில் கதாநாயகனாக இல்லாமல் இயல்பான கதையின் முக்கிய கதாபாத்திரம் செய்ததற்காகவே விஜய்சேதுபதிக்கு ஒரு பூச்செண்டு அனுப்பலாம். சற்று மனநலம் பிறழ்வு கொண்ட கதாபாத்திரம். கடத்துவதற்கு ஆறு சட்டங்களை போட்டு அதனை கடத்துபவர்களுக்கு பாடமாக எடுக்கும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது. 

முதல் காட்சியே ஒரு பெண்ணை கடத்த முயற்சித்து அந்த பெண்ணிடமே அடி வாங்கி தப்பித்து ஒடும் காட்சியில் ஆரம்பிக்கும் அவரது அட்டகாசம் படம் இறுதி வரை குறையாமல் இருக்கிறது.

கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி. தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தில் அஞ்சலியின் தோழியாக அறிமுகமாகி கொள்ளைக்காரன் படத்தில் விதார்த்துடன் நடித்தவர். அப்படிப்பட்டவரா இவர் என கேட்கும் வகையில் மாடர்ன் உடையில் எப்பொழுதும் விஜய்சேதுபதியின் உடன் வரும் கதாபாத்திரம். சற்று அலுப்பு ஏற்படும் போது பாதி படத்துடன் அனுப்பி வைத்து விடுகிறார்கள்.

வேலையில்லாத நண்பர்கள் கதாபாத்திரத்தில் ஒருவராக சிம்ஹா. ஊரில் நயன்தாராவுக்கு கோயில் கட்டி அதனால் பிரச்சனை ஏற்பட்டு ஊரே அடித்து துரத்தி சென்னைக்கு பிழைக்க வருகிறார். இன்ஸ்பெக்டருக்கு பயந்து உதட்டில் சிகரெட் துடிக்க பயந்து இருக்கும் காட்சியில் தியேட்டரே அலறுகிறது.

மற்றொரு நண்பராக ரமேஷ். காலையில் சரியாக எட்டு மணிக்கு அலாரம் வைத்து எழுந்து குளித்து விபூதி வைத்து டேபிளில் அமர்ந்து நிதானமாக சரக்கு அடிக்கும் கேரக்டர். டார்க் ரூமில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்து அடித்து துவைக்கும் போது "இதுக்கு பேரு தான் இருட்டு அறையில் முரட்டு குத்தா" என்று அலறும் போது தியேட்டரில் விசில் சத்தம் தான். கவனிக்கப்பட வேண்டிய நடிகர். சரியான படங்கள் அமைந்தால் நல்ல எதிர்காலம் உண்டு.

கடைசி நண்பராக அசோக்செல்வன் வேலை பார்க்கும் இடத்தில் சைட் அடிக்கும் பெண்ணை கண்டு பயந்து விலகி ஒடும் கேரக்டர். அந்த பெண் காதலிக்க சொல்லி மிரட்டி கையை அறுத்துக் கொள்ள போய் இவரது கையில் வெட்டுபட்டு நிற்கும் போது சிரிப்பில் அலறுகிறது தியேட்டர்.

இன்னும் படத்தில் கவனிக்க பலர் பெயர் தெரியாத நடிகர்கள் இருக்கின்றனர். வேட்டையாடு விளையாடு படத்தில் ஜோதிகாவின் முதல் கணவனாக நடித்து இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவர், உடன் வரும் கான்ஸ்டபிள், இயக்குனர் டாக்டர், அமைச்சரின் மகன் இன்னும் பலர் இருக்கின்றனர். இவர்களுடன் அனுபவமிக்க ராதாரவியும் எம்.எஸ். பாஸ்கரும் இருக்கின்றனர்.

போலீஸ் பாலோ செய்து வரும் போது இரண்டு கோடி பணத்துடன் அமைச்சரின் மனைவி வரும் போது அவரிடம் இருந்து பணத்தை எடுக்கும் காட்சியில் பிரமாதமான காட்சியமைப்பு. எதிர்பாராத ட்விஸ்ட் அது. லாஜிக் பார்க்காமல் படத்தை பார்த்தால் சிறந்த எண்டர்டெயினர் படம் இது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget