ஹேங்க் ஓவர் 3 ஹாலிவுட் சினிமா விமர்சனம்

ஹாலிவுட்டிலே ‘வுல்ப் பேக்‘ என்னும் பெயர் மிகப் பிரபலம். இந்தப் பெயர் காமெடி படங்களிலேயே பாப்புலர் சீரிசான “ஹேங்க் ஓவர்“ படத்தைத் தான் நினைவுபடுத்தும். .  இந்த சீரிஸ்களுக்கு முற்றுப்புள்ளியாய் மூன்றாம் பாகம் அமையும் என முன்பே கூறப்பட்டதால் ஹேங்க் ஓவர் மூன்றாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு சற்று அதிகமாகக் காணப்பட்டது.
பேச்சுலர் பார்ட்டிக்காக லாஸ் வேகஸ் செல்லும் நண்பர்கள் இரவில் மதுவுடன் போதை மாத்திரையை சேர்த்து எடுத்துக் கொள்ள ஒரு நாள் இரவில் எத்தனை மாற்றங்கள் இவர்கள் வாழ்க்கையில் நடக்கிறது என்பதை தமாஷாக சித்தரித்திருந்தது முதல் பாகம். இதனுடைய அச்சசல் ஜெராக்ஸாக இரண்டாம் பாகம் அமைந்திருந்தது.  மூன்றாம் பாகத்தை வித்தியாசப் படுத்திக்காட்ட கதைக் களத்தை மாற்றி அமைத்துள்ளனர். 

இன்டர்நேஷனல் கிரிமினல் சௌ ஜெயிலிலிருந்து தப்பிக்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது. எப்போதும் கிறுக்குதனமாக நடந்து கொள்ளும் ஆலன்,, மெச்சூராக உள்ள இவரின் நண்பர்கள் ஸ்டூ, பில், டக். ஆலனின் தந்தை இறக்க இறுதி அஞ்சலியில் நண்பர்கள் பங்கு பெருகின்றனர். ஆலனின் மன நோய்க்கு ட்ரீட்மென்ட் எடுக்க இவர்கள் ஆலனை அழைத்து செல்ல, வழியில் வேகமாக மினி வேன் மோத இந்நால்வரும் கடத்தப்படுகின்றனர்.  

சௌ தனது இருபத்தியோரு பில்லியன் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளை கடத்தி சென்றதையும் இப்போது அவன் போலீஸிலிருந்து தப்பிய கதையையும் இவர்களைக் கடத்திய கேங் லீடர் கூறுகிறார். ஜெயிலிருந்து சௌ தொடர்பு கொண்டது ஆலன் மட்டும்தான் ( முன்தைய பாகத்தில் சௌவ்விடமிருந்து ஆலன் ட்ரக்ஸ் வாங்க இருவருக்குள்ளும் நட்பு ), எனவே மூன்று நாட்களுக்குள் நீங்கள் சௌவ்வைப் பிடித்துத் தரவேண்டும். இல்லாத பட்சத்தில் நண்பன் டக்கை கொன்றுவிடுவதாக கூறி டக்கை பணயமாக இழுத்துச் செல்கிறான். முதல் பாகத்தில் மொட்டை மாடியில் மாட்டிக் கொள்ளும் டக் இந்த முறை வில்லனிடம் மாட்டிக் கொள்ள, மீதமுள்ள இந்த மூன்று வுல்ஃப் பேக் நண்பர்கள் மூன்று நாட்களில் சௌவ்வைப் பிடித்தார்களா என்பது தான் மூன்றாம் பாகத்தின் மீதிக் கதை. 

முந்தைய பாகங்களில் இருந்த அளவிற்கு அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இதில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ப்ராட்லி கூபர், எட்ஹெல்ம்ஸ் நடித்திருந்தாலும் கூட ஆலன் கதாபாத்திரத்தில் தாடி வைத்து குழந்தை போல் அழும் ஜேக் காலிபெனாகிஸ் தான் மனதில் பதிகிறார். நண்பன் வில்லனிடம் மாட்டிக்கொண்டிருப்பதைவிட செல்போன் தவறியதை நினைத்து கவலைப்படுவது சிரிப்பைத் தான் தூண்டுகிறது. சௌவ்வாக வரும் கென் ஜியாங் செய்யும் கிறுக்குத்தனமான வில்லத்தனம் ரசிக்கவைக்கிறது. 

படத்தின் முக்கிய காட்சியனைத்தும் ட்ரையிலரிலேயே வந்துவிடுகிறது. அதைத் தவிர பெரியதாக விழுந்து சிரிப்பதற்கு காட்சிகள் கிடையாது. முதல் பாகத்தில் புலியை வைத்தும் இரண்டாம் பாகத்தில் குரங்கை வைத்தும் அமைந்திருந்த நகைச்சுவை இந்தப்படத்தில் காணாமல் போனது ஏமாற்றம். ஹேங்க் ஓவர் சீரிஸ் ரசிகர்கள் மட்டும் இறுதி முடிவில் நிறைவைக் காணலாம். 

மொத்தத்தில் "ஹேங்க் ஓவர்-3" மிகுந்த காமெடியும் கிடையாது, அலுக்க வைக்கும் போர் படமும் கிடையாது. ஒன்றரை மணிநேரத்திற்கு ஒரு சாதாரண "டைம் பாஸ் படம்".

பழைய பதிவுகளை தேட