நௌ யூ ஸீ மீ ஹாலிவுட் சினிமா விமர்சனம்

தெரியாதவர்களைப் பொருத்த வரை மாஜிக், தெரிந்தவர்களுக்கு அது வித்தை. நான்கு  மெஜிஷியன்கள், இவர்கள் நால்வரை இணைக்கும் கயிறாய் ஒரு மாஸ்டர் மைண்ட்.  முதல் காட்சியிலிருந்து க்ளைமாக்ஸ் வரை ரசிகர்கள் சிந்திப்பதற்கு இடைவெளி அளிக்காத அதிவேகமான திரைக்கதை.
 கண்ணாலேயே நோக்குவர்மம் செய்து பிறர் ஆழ்மனதை ஆட்கொள்ளும் பலே கில்லாடி ஹார்ல் ஜான்சன். கண்சிமிட்டும் இடைவெளியில் கவனத்தை சிதைத்து களவாடிச் செல்லும் டேவ் ஃப்ராங்கோ, மாயாஜால வித்தகர்கள் ஜெஸ்ஸி ஏய்ஸென்பர்க், இஷ்லா பிஷர். இந்நால்வருக்கும் ஒரு வினோத அழைப்பிதழ் கிடைக்க, ஒரு தனியிடத்திற்குச் செல்கின்றனர்.  செல்லுமிடத்தில் தங்களை அழைத்தவன் தங்களைவிட பெரிய தில்லாலங்கடி என இவர்கள் உணர நால்வரும் இணைந்த கைகளாகின்றனர்.  

இந்நால்வரின் மேஜிக் ஷோவிற்கு ஸ்பான்ஸர் செய்கிறார் மைக்கேல் கேன். லாஸ் வேகாஸில் இவர்கள் நடத்தும் மேஜிக் ஷோவில் ப்ரென்ச் நபர் ஒருவர் டெலிபோர்டிங் (ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு அனுப்பப்படுவது) மூலம் அமெரிக்காவிலிருந்து பாரிஸுக்கு மூன்று வினாடிகளில் அனுப்பப்படுகிறார். அங்குள்ள வங்கியிலிருந்து பணம் கவரப்பட்டு மேஜிக் ஷோ நடக்கும் அரங்கில் அது பண மழையாய்ப் பொழிகிறது.

வங்கி கொள்ளையடிக்கப்பட்ட இந்த கேஸை விசாரணை செய்யும் எஃப்.பி.ஐ. போலீஸ் மார்க் ரஃபெல்லோ இவருடன் இணையும் இன்டர்போல் ஆபிசர் மெலோனி லாரன்ட். பல மாஜிக் வித்தைகளின் பின் மறைந்துள்ள சூட்ஷமத்தைக் கண்டறிந்து அதை ஜனரஞ்சகமாகத் தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தி பல மாஜிக் கலைஞர்களுக்கு ஆப்படித்த மார்கன் ப்ரீமேன். 

ஒருபுறம் இந்நால்வர்களைப் பிடிக்கப் பார்க்கும் போலீஸ் மறுபுறம் கேமராவுடன் இவங்க எப்பதான் மாட்டுவாங்கன்னு அலையும் மார்கன் ப்ரீமேன், போதாத குறைக்கு காசு செலவழித்து பிரபலப்படுத்திய மைக்கேல் கேனுக்கே இந்த நால்வரும்  டிமிக்கி கொடுக்க சூடாகிறார் மைக்கேல் கேன். கடைசியில் இந்த நான்கு அதிமேதாவிகள் தங்களைச் சூழ நினைக்கும் படைக்கு மிளகாய் தூவி , அந்த மாஸ்டர் மைண்டுடன் இணைவதுதான் மீதிக்கதை.

நிறைய ஆங்கிலப்படங்கள் மெதுவாகத் தொடங்கும் பின் டாப் கியர் எடுத்து வேகம் பிடிக்கும். ஆனால் இந்தப் படம் முதல் காட்சியிலிருந்து அதிவேகம். படபடவென்று வசனங்கள், வியக்க வைக்கும் மாஜிக் ட்ரிக்குகள், இதுதான் இப்படித் தான் நடக்கும் என்று யூகிப்பு துளிர்விட பாலம் அமைக்காத திரைக்கதையின் ஜாலம். 
காட்சிகளில் வியக்க வைக்கும் பிரமிப்பு பல. கையிலிருந்து பபுள் விட்டு அந்த நுரைக்குள் ஒரு பெண்ணை அடைத்து அவளைப் பறக்கச் செய்யும் காட்சி ஆஸம் ஆஸம்!!! எப்பதான் இன்டெர்வல் வருமென்று நினைக்க வைக்கும் படங்களுக்கிடையில் எதற்காக இன்டெர்வல் விடவேண்டுமென்று எண்ணவைத்த லூயிஸ் லிட்டீரியரின் இயக்கத்திற்கு சபாஷ்.  

பெரிய அளவில் நடக்கப்படும் திருட்டுக்கு ஹீஸ்ட் என்று கூறுவர். இந்த ஹீஸ்ட் வகையில் வெளிவந்த சிறந்த படங்களில் ‘நௌ யூ ஸீ மீ‘ முக்கிய அங்கம் வகிக்கும். 

மொத்தத்தில் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தி கண்கட்டு வித்தைகள் பலவற்றைச் செய்து கடைசியில் மனதையும் கவ்விச் செல்லும் மாய வலை. இதில் விழத் தவறினால் தான் ஆச்சரியம்.    

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget