சென்னை எக்ஸ்பிரஸ் சினிமா விமர்சனம்

தமிழ் மசாலா படங்களில் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன அதே விஷயங்கள் தான். ஆனா, அதில் ஷாருக்கான் என்ன செய்கிறார் என்பது தான் கொஞ்சம் புதுசு. இந்தி ரசிகர்களுக்கு இந்தப் படம் முழுக்க முழுக்க புதுசாக இருக்கலாம். அதற்காக இது சென்னை சம்பந்தப்பட்ட படம் என்றோ சென்னையில் நடக்கிற கதை என்றோ தவறாக நினைத்துவிட வேண்டாம்.
ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது இந்தி சினிமா உலகம் இது தான் தமிழ் சினிமா என்று கணக்குப் போட்டு வைத்துள்ளது என்பதே! லாஜிக் என்பது துளியும் இல்லை. நாம் தமிழ் சினிமாவில் பார்த்த சாதாரண மசாலாவைக் கூட கரம் மசாலாவா மாற்றி இருக்கிறது சென்னை எக்ஸ்பிரஸ்.

தமிழ் புரியாமல் மாட்டிக்கொண்டு சிரமப்படும் ஷாருக்கான், கலர் கலர் உடைகளோடு பளிச்சென வலம்வரும் தீபிகா படுகோனே, தென்னிந்தியாவின் டான்-னாக இருக்கும் சத்யராஜ் (பெரியதலை) என படம் முழுக்க கலர் ஃபுல் கலாட்டா தான். கில்லி, முத்து, அலெக்ஸ் பாண்டியன் சண்டைக்காட்சிகள், சில தெலுங்கு படங்கள் என அனைத்தையும் கலந்துகட்டிய சென்னை எக்ஸ்பிரஸ் படு வேகத்தில் பறக்கிறது.  

தன் தாத்தாவின் அஸ்த்தியை ராமேஸ்வரம் கடலில் கரைப்பதற்காக தென்னிந்தியாவை நோக்கி புறப்படுகிறார் ஷாருக்கான் (ராகுல்). எதிர்பாராத விதமாக சென்னை எக்ஸ்பிரசில் தீபிகா படுகோனேவை (மீனம்மா என்கிற மீனலோச்சனி அழகுசுந்தரம்) சந்திக்கிறார். அவர் கூட உருவத்தில் பெரியதாக இருக்கும் நான்கு அடியாட்களும் இருக்கிறார்கள்.

தன் அப்பா பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்பதால் ஊரைவிட்டு தப்பிவந்த என்னைக் கண்டுபிடித்து மீண்டும் தன் அப்பாவிடமே கொண்டுசெல்கிறார்கள் என்ற உண்மையை ஷாருக்கானிடம் சொல்லி தன்னைக் காபாற்ற சொல்கிறார் தீபிகா. 

ஷாருக்கானும் ஏதேதோ ட்ரை பண்ண, எல்லாமே காமெடியாக முடிந்துவிடுகிறது. வில்லன்களிடம் தன் குறும்புத்தனமான சேஷ்டைகளை காட்டியதால் ஷாருக்கானும் பிடித்துவைக்கப்படுகிறார். ரயில் தீபிகாவின் சொந்த ஊருக்கு வந்து சேர்கிறது. அங்கு தான் சத்யராஜ் அசத்தல் எண்ட்ரி கொடுக்கிறார்.

வேறு வழியில்லாமல், ஷாருக்கானைக் காட்டி இது தான் என் காதலன் என்று அப்பாவிடம் பொய்சொல்லிவிடுகிறார் தீபிகா. தூக்குங்கடா என் மாப்பிள்ளைய என்று சத்யராஜ் சொன்னதும் ஷாருக்கானுக்கு ராஜ மரியாதை வழங்கப்படுகிறது. 

அப்போது தான் ஒரு வில்லன் வருகிறார். அவர் தான் தீபிகாவுக்கு சத்யராஜ் பார்த்திருக்கும் மாப்பிள்ளை. ஒத்தைக்கு ஒத்தை சண்டைபோடுவோம் என்னை ஜெயிச்சிட்டு தீபிகாவை கல்யாணம் பண்ணிக்கோ என்று சவால் விடுகிறார். வில்லனின் கம்பீர உருவத்தைப்பார்த்து மிரண்டுபோகிறார் ஷாருக்கான். அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றும் மீண்டும் அதே ஊரில் வந்து அவர்களிடமே சிக்கிக்கொள்வது சரவெடி காமெடி.   

என்ன செய்வதென்று தெரியாமல் கில்லி விஜய் ஸ்டைலில் ஒரு கத்தியை தீபிகா கழுத்தில் வைத்து அவரை ஒரு ஜீப்பில் ஏற்றிக்கொண்டு வில்லன்களில் பிரம்மாண்ட சேசிங்குடன் அங்கிருந்து இருவரும் எஸ்கேப் ஆகிறார்கள். தன் தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்து, தன் பாட்டி தனக்கு கொடுத்த கடமையை நிறைவேற்றுகிறார் ஷாருக்.

இதற்கிடையில் ரொமாண்டிக் மெலடி, வேட்டிகட்டி ஒரு குத்துப்பாட்டு என கனவில் மட்டும் இருவரும் காதல் வளர்க்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்குமே காதல் வருகிறது. தீபிகாவுடன் தன் சொந்த ஊருக்குத் தப்பிக்க போகிறார் ஷாருக் என எதிர்பார்கிற நேரத்தில் சத்யராஜ் முன்னாடி வந்து நின்று, தான் தீபிகா மீது வைத்திருக்கும் காதலை சொல்லியது மட்டும் அல்லாது வில்லனை வீழ்த்தி தீபிகாவை எப்படி மணம் முடிக்கிறார் என்பதோடு முடிகிறது படம். 

ஷாருக்கான் தமிழ் தெரியாமல் திணருவதும், இரண்டு மூன்று வார்த்தைகளை தமிழில் பேசும் காலாட்டா காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் ‘உயிரோட வந்த நீ உயிரோட போமாட்ட... வெட்டி பீஸ் பீஸ் ஆக்கி பார்சல் அனுப்பிடுவேன்’ என்று வில்லன் பேசிய வசனத்தை அவரிடமே ஷாருக் பேசிக்காட்டுவது தூள்.

மீனலோச்சனி அழகுசுந்தரம் என்ற பெயரில் அழகு என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாமல் ஒவ்வொரு முறையும் ‘அசுட... அசுட...’ என்று ஷாருக் பேசுவது கலகலப்பு. வழியைத் தொலைத்து திசைமாறி சென்றுவிடும் ஷாருக்கான் கேரளா பக்கம் போக, அங்கே ஒருவர் எந்தானு ஜோலி என்று கேட்க... ‘ஐ யம் நாட் ஏஞ்சலினா ஜோலி’ என்று ஷாருக் பதில் சொல்வது குபீர் சிரிப்பு.

லாஜிக் இல்லாத மசாலா படம் என்றாலும் படம் முழுக்க ஷாருக்கான் அடக்கியே வாசிக்கிறார். நம்ம ஊர் ஹீரோக்களாக இருந்தால் முதல் பாதியில் இரண்டு ஃபைட் இரண்டாவது பாதியில் நான்கு ஃபைட் கேட்டிருப்பார்கள். ஆனால் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் அசரவைத்துவிட்டார் மனிதர்.(நம்ம ஊரு ஹீரோக்கள கிண்டலடிக்கிறாங்க.... ஆனா அதையே ஷாருக்கான் செய்தால் கை தட்றாங்க)

ப்ரியாமணி ஒரு குத்துப்பாடுக்கு வருகிறார். கவர்ச்சி இல்லை என்றாலும் வழக்கமாக திமிரோடு ஷாருக்கானுடன் திமிரிக்கொண்டு ஆடுகிறார். டில்லி கணேஷ், கிங் காங் என நம்ம ஊர் நடிகர்கள் சிலர் வந்துபோகிறார்கள்.

சத்யராஜுக்கு எதிர்பார்த்த அளவுக்கு அழுத்தமான கதாபாத்திரம் இல்லை என்பது வருந்தவைக்கிறது.ஒரு சிங்கதை அழைத்து புல் தரையில் மேய விட்டிருக்கிறார்கள். படம் முடிந்த பிறகு கடைசியாக படத்துக்கு சம்பந்தமே இல்லாத லுங்கி டான்ஸ் வருகிறது. ரஜினைக் கொண்டாட ஷாருக்கான் கொடுத்த வாய்ப்பு (இது நம்ம ஹீரோக்களுக்கு தோனாம போச்சே!)  

ஷாருக்கானை சத்யராஜ் முதன் முதலில் சந்திக்கும் போது ‘என்னமா கண்ணு’ என்று அவர் ஸ்டைலில் சொல்வதும், க்ளைமாக்சில் அதே ‘என்னமா கண்ணு’ வசனத்தை ஷாருக்கான் சத்யராஜிடம் சொல்வதும் ரசிக்க வைக்கிறது.

தீபிகாவின் நாக்கில் தமிழ் படாதபாடு படுகிறது. அவரே டப்பிங் பேசிருக்கிறார் (ஒய் திஸ் கொலவெறி).தமிழை கொஞ்சம் தெளிவாய் உச்சரித்திருந்தால், நச்சரிக்கும் தீபிகாவின் அழகை இன்னும் ஆழமாய் ரசித்திருக்கலாம். படத்தில் வரும் தமிழ் ஆட்கள் பேசும் வசனமும் இந்தி போலவே இருக்கிறது. இவங்க எல்லாம் சொந்தக்குரலில் பேச வேண்டும் என்று யார் அடித்தது. 

சென்னை எக்ஸ்பிரஸ் - நேரத்தைக் குறைத்திருந்தால் சென்னை எக்ஸ்பிரஸின் வேகம் இன்னும் அதிகரித்திருக்கும்... ஷாருக்கான் பேசும் தமிழை நிச்சயம் தமிழ் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget