மக்களை தவறான பாதைக்கு கூட்டி செல்லும் கணினி விளையாட்டு

கம்ப்யூட்டர் விளையாட்டுகளும், செல்போன் சேட்டைகளும் இன்றைய இளைய தலைமுறையை கெடுத்துக்கொண்டிருக்கிறது என்பது பரவலாக எழும் குற்றச்சாட்டு. அதில் உச்சகட்ட கொடூரமாக, மக்களை அச்சுறுத்திக்கொண்டிருப்பது ‘ரேப் பிளே’ எனப்படும் கற்பழிப்பு விளையாட்டு! 

இந்த ‘பொழுதுபோக்கு’ இளைஞர்கள் நிறைந்த இந்தியாவை தவறான வழிக்கு கொண்டு சென்று, பெண்கள் பெருமளவு பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் சூழ்நிலையை உருவாக்குவதாக சமூக ஆர்வலர்கள் கவலைகொள்கிறார்கள். செக்ஸ் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன.

அது எப்படி இளைஞர்கள் மனதை கெடுக்கிறது என்று பாருங்கள். முதலில் ஸ்கிரீனில் இளைஞன் ஒருவன் தோன்றுவான். பின்பு சில பெண்கள் தோன்றுவார்கள். அதில் யாரேனும் ஒரு பெண்ணை ‘செலக்ட்’ செய்கிறார்கள். அந்தப் பெண் அணிந்திருக்கும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு எண் தரப்பட்டிருக்கிறது. 

சரியாக அந்த எண்ணை ‘க்ளிக்’ செய்தால் அந்த ஆடை நீக்கப்படும். இப்படி ஒவ்வொரு ஆடையாக களைந்து அந்தப் பெண்ணை நிர்வாணமாக்கிவிட்டால் அந்த கேம் ஓவர். தவறான எண்ணை க்ளிக் செய்தால் அந்தப் பெண் மறைந்து விடுவாள். 

இப்படி ஒரு விளையாட்டு. பெண்கள் ஆடையை நீக்கவேண்டிய மோகப்பொருட்கள் என்ற வக்கிரத்தை இந்த விளையாட்டு உருவாக்குகிறது. அடுத்து பாலியல் வன்முறையை தூண்டும் விளையாட்டு. தலைதெறிக்க ஓடும் பெண்ணை துரத்திப் பிடித்து, அவர்கள் கொடுத்திருக்கும் மறைவான இடத்திற்கு கடத்திச் செல்ல வேண்டும்.

அங்கிருந்து பெண்ணின் அலறல் சப்தம் கேட்கும். இதுவும் ஒரு விளையாட்டு. இப்படி பலவிதமான ‘ரேப் கேம்களை’ சில வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்து, வீடியோக்களாக்கி லட்சகணக்கில் விற்றுக்கொண்டிருக்கின்றன. இதில் நவீன தொழில்நுட்பத்தையும் புகுத்தி மக்களை கவர்கிறார்கள். 

இந்த வகை ‘விளையாட்டு’ சி.டி.க்கள் இந்தியாவை மட்டுமல்ல உலகத்தையே உலுக்கிக் கொண்டுதான் இருக்கிறது. இதில் புதிய வகை கற்பழிப்பு விளையாட்டுகளை கைபேசிகளிலும் உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். 

அந்த விளையாட்டு கைபேசிகளில் இருக்கும் விபரீதத்தை உணராமல் சில பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். பேனா, பென்சில் வாங்கித் தருவதுபோல இந்த கைபேசிகளையும் வாங்கிக் கொடுத்துள்ளார்கள். அதுவே கதி என்று பிள்ளைகள் அதிலே மூழ்கிய பின்புதான் அதன் விபரீதத்தை புரிந்திருக்கிறார்கள். 

இந்த விளையாட்டுக்கே அடிமையாகிப்போனவர்களும் உண்டு. இளைய சமூகம் இதைப் பார்த்து கெட்டுப்போவதை உணர்ந்த மலேசியா, அர்ஜெண்டினா, தாய்லாந்து போன்ற பலநாடுகள் இத்தகைய விளையாட்டு வீடியோக்களுக்கு தடைவிதித்திருக்கிறது. 

பாலியல் வன்முறை என்பது மிக மோசமான சமூகவிரோத செயல். அதைக்கூட விளையாட்டாக்கி பார்க்கும் மனோபாவம் மனித சமூகத்தை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அந்த பயம் இன்று ஒவ்வொரு குடும்பத்தையும் தாக்கத் தொடங்கியிருக்கிறது. 

கம்ப்யூட்டரில் பிள்ளைகளை விளையாட அனுமதிக்கும் பெற்றோர், அவர்கள் எந்த விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் என்று கண்காணிப்பது கஷ்டம் தான். ஆனாலும் கண்காணிக்கவேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. இன்றைய தொழில்நுட்பங்கள் எல்லா பெற்றோருக்கும் புரிவதில்லை. 

ஆனால் பிள்ளைகள் அதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரியாத பெற்றோரால், பிள்ளைகளின் இத்தகைய போக்கை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. 

மனநல ஆலோசகர்கள் இதுபற்றி தெரிவிக்கும் கருத்து என்ன?

“மூடிவைப்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேகம் இளைஞர்களிடம் ஏற்படுகிறது. அந்த ஆர்வத்திற்கு வழிகாட்டுவதுபோல், அவர்களை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் வேலையை இத்தகைய விளையாட்டுகள் உருவாக்குகின்றன. 

இளைஞர்களின் இத்தகைய போக்கை கண்டறிந்து திருத்துவது கடினம் என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை இளைஞர்களிடம் எடுத்துக்கூறவேண்டும். இன்றைய கால சூழலைப்பார்த்தால் சிறுவர்களுக்குகூட அந்த விழிப்புணர்வு அவசியம் என்று நினைக்கிறோம். 

பொதுவான நடவடிக்கைகள் என்று எடுத்துக்கொண்டால், கம்ப்யூட்டரை எல்லோரும் இருக்கும் அறையில் வைக்கவேண்டும். அப்போது தான் அதில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கமுடியும். அவர்கள் தனிமையில் அதிக நேரத்தை செலவிடும்போது அதற்கு என்ன காரணம் என்பதை உடனடியாக தெரிந்துகொள்ளவேண்டும். 

படிப்பில் கவனம் குறைந்தாலோ, நண்பர்களோடு பேசுவதை- விளையாடுவதை நிறுத்தினாலோ அதற்கான காரணத்தை கண்டறிய முன்வரவேண்டும்” என்கிறார்கள். எப்படியோ மக்களை சீரழிக்கும் இந்த மானபங்க விளையாட்டுகளை எல்லோரும் மனதுவைத்தால்தான் தடுக்க முடியும்!  

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget