அம்மணி சினிமா விமர்சனம்

நடிகையும் பெண்(ணிய) இயக்குனருமான லஷ்மி ராமகிருஷ்ணனின் இயக்கத்திலும், நடிப்பிலும், டேஹ் எண்டர்டெயின்மென்ட் வென் கோவிந்தாவின் தயாரிப்பில் மிகவும் யதார்த்தமாக வெளிவந்திருக்கும் தரமான படம் தான் "அம்மணி".

பிள்ளைக்குட்டி, சொத்து சுகம், அரசு உத்தியோகம்... என இன்னும் பிற சந்தோஷங்கள்... எல்லாம் ஒரு கட்டத்தில் ஒரு பெண்மணிக்கு சுமையாயாய் தெரிய, அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாது,
வாரிசுமின்றி வயதான காலத்தில் புருஷனையும் இழந்து, உழைப்பை மட்டுமே நம்பி, மனதளவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து மடியும் ஒரு வயோதிகப் பெண்மணியின் வாழ்க்கை சுகமாக தெரிகிறது. அதன் விளைவாக., தன் சொந்த பந்தங்கள், சொத்து பத்துக்களை விட்டு, அது மாதிரியான ஒரு வாழ்க்கைக்கு போய், தன் வாழ்க்கையில் மாண்டு போன சந்தோஷங்களை மீண்டும் கொண்டு வர முயலும் ஒரு பெண்மணியின் கதை தான் "அம்மணி!"

அரசு மருத்துவ மனையின் கடைநிலை ஊழியரான ஆயாம்மா.. என்றாலும் அரசு ஊழியர்... சொந்த வீட்டுக்காரர்... மூன்று பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிய தாய்... என்று ஆரம்பத்தில், கெத்துடன் திரியும் சாலம்மாவாகவும், பின், உபகாரம் மட்டுமே எதிர்பார்க்கும் உறவை வெறுத்து, சலித்து.. ஒதுங்கும் சாதாரண அம்மாவாகவும்... சபாஷ், சாலம்மா எனும் படியான கதையின் நாயகியாக, லஷ்மி ராமகிருஷ்ணன் நடிக்கவில்லை... வாழ்ந்திருக்கிறார். வாவ்!

இப்படி ஏகப்பட்ட சபாஷ், வாவ்... களுக்கு சொந்தக்காரரான இக்கதையின் நாயகி சாலம்மா - லஷ்மியையும் மிஞ்சுகிறார்... இப்பட டைட்டில் நாயகியான அம்மனி-எனும் சுப்பு லஷ்மி பாட்டிம்மா. அம்மனி மிக்ஸ் எனும் அளவிற்கு, பழைய புதிய பாடல்களை பிறரது சிச்சுவேஷன் புரிந்தும்புரியாமலும், பாடி சாலம்மாவை சகஜ நிலைக்கு கொண்டு வருவதில் தொடங்கி, " இனி, இது தேவையில்லாபாரம்... இந்தா, நீ வச்சுக்க..." என தன் சாவுக்கு முன் தனது நகைகளை சாலம்மாவிடம் கொடுப்பது வரை... ஒவ்வொரு காட்சியிலும் நாம், கண்டுகொள்ளாது விட்ட நம் பாட்டி - தாத்தாக்களை நம் கண் முன் நிறுத்துகிறார். இந்தப் பாட்டிக்கு ஏதோ ஒரு உயரிய விருது நிச்சயம்.

சாலம்மாவின் இளைய மகனாக பெற்றோரின் சொத்து மட்டுமே குறிக்கோளான இன்றைய இளைஞர்களை பிரதிபலிக்கும் ஆட்டோ டிரைவர் சிவாவாக நிதின் சத்யா, "ஜெயிக்கிறவனுக்கு தான்டா இங்க மரியாதை...." என நண்பனிடம் புலம்பும் குடிகார மூத்த மகன் செல்வமாக ஸ்ரீ பாலாஜி, ஆயாவின் ரிட்டயர்டுமென்ட் பணத்தில் பாரின் போகத்துடிக்கும் சாலம்மாவின் ஒடிப்போன மகள் வழிப் பேரன் சரவணனாக ரெஜின் ரோஸ், வாயாடி மருமகள்கள் வெண்ணிலாவாக ரேணுகா.சி, அமுதாவாக எஸ்.அன்னம், இவர்கள் எல்லோரையும் தாண்டி மீன்பாடி வண்டி இழுக்கும் முத்துவாக ஜார்ஜ் மரியான்... உள்ளிட்ட ஒவ்வொருவரும் சாலம்மா, அம்மணிக்கு ஈடு கொடுத்து தங்கள் பாத்திரங்களுக்கு வலு சேர்த்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றனர்.

அதே மாதிரி, "லைப்பு மச்சான்..." எனத் தொடங்கித் தொடரும் லஷ்மியின் சாவு இமாஜின் குத்துப்பாடலுக்கு ரோபோ சங்கரின் குத்துக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்.

ரெஜித்.கே.ஆரின் படத்தொகுப்பு, பக்கா தொகுப்பு.

இம்ரான் அகமது.கே.ஆரின் ஒளிப்பதிவில் பெரும்பாலான இரவு நேர காட்சிகள் சென்னையின் யதார்த்தை பிரதிபலிக்கும் வகையில் இயல்பாய் மிளிருகிறது.

கே.வின் இனிய, இயல்பான இசையில்., "மழை இங்கில்லையே வெயிலும் இல்லையே.... வானவில் வந்ததே...", "நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளைகள் தானடா...", "லைப்பு மச்சான் மச்சான்...", "எங்கிருந்தோ வந்தாய்...." உள்ளிட்ட இப்பட பாடல்களின் வாயிலாகவும் சமீபத்தில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வாழ்ந்து கொண்டிருப்பது தெரிகிறது.

"வலையில மீன் மாட்டட்டும் வறுக்கறதா.. குழம்பு வைச்கிறதான்னு அப்புறம் முடிவு பண்ணலாம்...", "கண்ண மூடிட்டா அமைதியா போறமா, ஆரவாரமா போறமா...ன்னு யாருக்குத் தெரியும்...?", "பிரதமரே குப்ப பொறுக்க சொல்றார்டி....", "அப்படிப் பார்த்தா எல்லோருமே தனி மரம் தாண்டி.... இந்த வெளிச்சம் போன நிழல் கூட சொந்தமில்லை..." உள்ளிட்ட பன்ச் டயலாக்குகள் மூலம் திருப்தியாக திரும்பி பார்க்க வைத்திருக்கும் லஷ்மி ராமகிருஷ்ணன்,

என் புள்ளய பார்க்க ஐநூறு ரூபாய்... கேட்குறான்மா.. எனும் பிரசவ கேஸின் உறவினரிடம்., "ஆண் வாரிசு பொறந்திருக்கு ஆயிரம் ரூபாயா அவன் மூஞ்சியிலகடாசிட்டு போய் சந்தோஷமா உன் பிள்ளையை பார்க்க வேண்டியது தானே?" எனும் டயலாக்கில் நம் ஊர் அரசு ஆஸ்பத்திரிகளின் கையூட்டு அவல நிலையை அழகாக தன், நடிப்பின் மூலமும் இயக்கத்தின் மூலமும் அழகாக, அசத்தலாக தோலுரித்துக் காட்டியிருக்கும் பெண் இயக்குனர் லஷ்மி ராமகிருஷ்ணன், இன்னும் பல விஷயங்களையும் சமூக அக்கறையுடன் சொல்லி, கடைசி காலத்தில் காப்பாத்துவார்கள்... என பிள்ளைகளை மலைபோல நம்பும் பெற்றோருக்கு, பெரும்பாடமாக "அம்மணி"யை மிகவும் அழகாகவும், யதார்த்தமாகவும் தன் எழுத்து, இயக்கத்தில் படைத்திருக்கிறார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget