தொழில் நுட்பமும் வாழ்க்கை மாற்று நுட்பமும்

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் கூகுள் பிக்ஸெல் ஸ்மார்ட் போன்கள், இன்று தங்கள் போன்களில் உள்ள கேமராக்கள் தான் உலகின் தலை சிறந்த ஸ்மார்ட் போன் கேமராக்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு விளம்பரப்படுத்தி வருகின்றன. மற்றவர்களை அழைத்துப் பேசப் பயன்படுத்தப்படும்
போன்களில், ஏன் கேமரா முக்கியமான ஓர் அம்சமாகப் பேசப்படுகிறது. எதற்காக, ஸ்மார்ட் போன் வாங்கும் ஒவ்வொருவரும், போனில் உள்ள கேமராவின் பண்புகள் என்ன, என்ன மாதிரியான ஸூம் லென்ஸ், ப்ளாஷ் உள்ளன என்று ஆய்வு செய்கின்றனர்? பத்து
ஆண்டுகளுக்கு முன்பு வரை, கேம்கார்டர்கள் என்று சொல்லப்பட்ட, கைகளில் எளிதாக எடுத்துச் சென்று இயக்கக்கூடிய கேமராக்களே மக்களின் விருப்பமாக இருந்து வந்தன.
ஆனால், இன்று அவற்றைக் காட்டிலும் சிறப்பாகவும் துல்லியமாகவும், வியத்தகு வண்ணங்களிலும் படங்களை எடுக்கக் கூடிய கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட் போன்கள் வந்து நம் வாழ்வின் திசையைத் திருப்பி விட்டன. கேமராக்களிலும், இணைய தொடர்பு கொண்ட கேமராக்கள், எடுத்த படங்களை உடனே இணையத்திற்கு அனுப்புகின்றன. இதே போல, நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை, டிஜிட்டல் தொழில் நுட்பம் மாற்றி உள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

கார் இயக்குதல்


இன்றைய தொழில் நுட்பம் கார் மற்றும் பிற வாகனங்களை இயக்குவதை எளிதாக மாற்றியுள்ளது. உள்ளூரிலோ, அல்லது வெளியூரிலோ மட்டுமல்லாது, அதுவரை காணாத வெளிநாடுகளில் உள்ள ஊர்களில் கூட ஒருவர் மற்றவர்களிடம் “எக்ஸ்கியூஸ் மி. இந்த தெருவிற்கு, ஊருக்கு எப்படி போவது?” என்று கேட்க வேண்டியதில்லை. ஜி.பி.எஸ். சிஸ்டங்கள், வாகனம் ஓட்டுவதை எளிமையாக்கிவிட்டன. பெரும்பாலான ஜி.பி.எஸ். சிஸ்டங்கள், மொபைல் அப்ளிகேஷன்களாக இப்போது கிடைக்கின்றன. பலரும் பயன்படுத்துவது கூகுள் மேப்ஸ் செயலியைத்தான். இருப்பினும் வேறு பல நிறுவனங்களும், ஜி.பி.எஸ். செயல்முறையில் வழி காட்டும் செயலிகளைத் தந்து வருகின்றனர். போன்களில் மட்டுமல்லாது, வாகனங்களிலேயே அமைக்கப்பட்டு கிடைப்பவையாகவும் இவை உள்ளன. நாம் இருக்கும் இடத்தை அவை கணக்கிட்டுக் கொள்கின்றன. நாம் எங்கு செல்கிறோம் என்பதை இலக்காக அமைத்துவிட்டு, ஸ்மார்ட் போனை வாகனத்தைச் செலுத்துபவர் பார்க்கும் நிலையில் வைத்து வாகனத்தைச் செலுத்த வேண்டியதுதான். குரல் வழியாக இவை வழியைக் கூறுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இருந்தால், ஒவ்வொரு வழியாகவும் எவ்வளவு நேரத்தில் செல்லலாம்; சாலைகளின் தன்மை என்ன என்று காட்டுகின்றன. எந்த வழியில் போக்குவரத்து நெரிசலாக உள்ளது என்ற எச்சரிக்கையையும் காட்டுகின்றன. இந்தியாவின் சிறு நகரங்களில் கூட இந்த சாதனத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் டெஸ்லா என்னும் கார் பயன்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. இது மின் சக்தியில் தானாக இயங்கும் கார். இதில் டிஸ்பிளே திரை ஒன்று ஸ்டியரிங் வீல் அருகே உள்ளது. போனின் திரையைத் தொட்டு இயக்குவது போல, இந்த திரையைத் தொட்டு காரை இயக்கலாம். அதிவேக நெடுஞ்சாலைகளில், வேகம், செல்லும் லேன் செட் செய்து விட்டால், நேராக, வேறு வாகனங்கள் மீது மோதாமல் செல்லும். லேன் மாற வேண்டும் எனில், டிஸ்பிளே திரையில் அதற்கான டேப் தொட்டுக் காட்டினால் போதும். தானாகவே, அடுத்த லேனில் வரும் வாகனங்களை உணர்ந்து மாறிக் கொள்ளும். சாலைகளில் கட்டுப்பாடு விளக்குகளை உணர்ந்து நிற்கும், காத்திருக்கும், பின்னர் செல்லும். கார் நிறுத்த வேண்டும் எனில், தானாக, நிறுத்துமிடத்தை உணர்ந்து நிறுத்திக் கொள்ளும். பின்னர், ரிமோட் மூலம் கட்டளை இட்டால், தானாக இயங்கி, நாம் நிற்கும் இடம் முன் வரை வந்து காரை நிறுத்தும்.

ஜி.பி.எஸ். மட்டுமின்றி, வேறு வாகனத்துடன் மோதுவதைத் தவிர்க்க பிரேக் போட்டு காரை நிறுத்தும் சாதனம், பின்புறமாக இயக்குகையில் எச்சரிக்கும் சாதனம் எனப் பல டிஜிட்டல் சாதனங்கள் இன்று நமக்கு உதவுகின்றன. சாலை வரிகள் செலுத்த கார்களிலேயே பணம் கட்டி அமைத்த டிஜிட்டல் சாதனங்கள் உதவுகின்றன. கார்கள் நிற்காமலேயே செல்கையில், செலுத்த வேண்டிய கட்டணம் லேசர் கற்றை மூலம் கழிக்கப்பட்டு, வசூலிக்கும் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

பொருட்கள் வாங்குதல்


வங்கிகள் தரும் சிப்கள் இணைந்த கார்டுகள் இன்று நாம் பொருட்கள் வாங்கும் வழக்கத்தையே மாற்றிவிட்டன. இந்த கார்டுகளைப் பயன்படுத்தி, பொருட்களை வாங்கி பணம் செலுத்த முடிகிறது. பெட்ரோல் மற்றும் பிற எரிபொருள் பெற இந்தக் கார்டுகளைச் செலுத்தி, தானாக எரிபொருள் நிரப்பும் குழாய்களை அளவாக இயக்க முடிகிறது. இணையம் வழியாக, நம் வங்கிக் கணக்கைக் கையாள முடிகிறது. மற்றவர்கள் கணக்கிற்கு நிதியை மாற்ற முடிகிறது.

உடை, அணிகலன்கள்


ஸ்மார்ட் வாட்ச் எனப்படும் டிஜிட்டல் கடிகாரம் இன்று மக்களிடையே பிரபலமாகி வருகிறது. எத்தனை கலோரி சக்தி இன்று நம் உடல் பயிற்சியினால், நடைப் பயிற்சியினால் எரிக்கப்பட்டது எனக் காட்டும் தேகப் பயிற்சி சார்ந்த கடிகாரங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இவை ஆடைகளிலும் இணைந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. சாம்சங் நிறுவனம் நம் இடுப்புகளில் அணியும் பெல்ட்களில் நாம் மேற்கொள்ளும் தேகப் பயிற்சி அளவைக் காட்டும் டிஜிட்டல் மீட்டரைப் பொறுத்தி விற்பனை செய்கிறது. சில ஷூ தயாரிப்பாளர்கள், நீங்கள் விரும்பும் அளவு மட்டுமின்றி, வண்ணம், அமைப்பு போன்றவற்றையும் இணையம் வழியாகத் தேர்ந்தெடுத்து அமைத்துத் தயாரிக்கும் வகையில் செயலிகளைத் தருகின்றன.

வீடுகளில் பயன்படுத்தப்படும் தொலைக் காட்சிப் பெட்டிகள், இப்போது ஸ்மார்ட் டி.வி. என அழைக்கப்படும் இணையம் இணைந்த டி.வி.யாக மாறிவிட்டன. இணையத்திலிருந்து தொலைக்காட்சி நிலையம் ஒளி பரப்பும் நிகழ்ச்சிகளைக் காண இயலுகிறது. இணையத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள பாடல்களையும், படங்களையும் பார்த்து, கேட்டு ரசிக்க முடிகிறது. வீட்டில் இணையம் இணைந்த கண்காணிப்புக் கேமராவினை அமைத்துவிட்டால், பூட்டிய வீடு பாதுகாப்பாக உள்ளதா என, எந்த நாட்டிலிருந்தும் கண்காணிக்க முடிகிறது. வீடு பிறரால் அத்துமீறப்படும் பட்சத்தில், எச்சரிக்கை செய்திகள் நமக்கு மட்டுமல்ல, முன்பே அமைத்து வைக்கப்பட்ட காவல்துறை பிரிவு எண்களுக்கும் செல்கிறது.

வீட்டு வேலைகளைச் செய்திடவும் டிஜிட்டல் சாதனங்கள் வந்துள்ளன. தானாக வீடு பெருக்கி துடைத்து சுத்தம் செய்திடும் ரோபட் எனப்படும் சாதனங்கள் வந்துள்ளன. இதன் ரேடார் போன்ற சிறிய சாதனத்தை, அறையில் ஒரு மேஜையின் மீது வைத்துவிட்டால், அது அறையின் அளவை, அங்குள்ள பொருட்களைச் சில நொடிகளில் கணக்கிட்டு, தரையில் வைக்கப்பட்டிருக்கும் வீட்டினைப் பெருக்கும் சாதனத்திற்கு கட்டளைகளைக் கொடுத்து இயக்குகிறது. இதே போல, தோட்டத்தில் நீரூற்ற, புல் வெட்டி அழகு படுத்த என சாதனங்கள் உள்ளன.

வருங்காலத்தில், நாம் எந்த இடத்திற்குச் சென்றாலும், வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் இயக்கும் கட்டுப்பாடு தரும் டிஜிட்டல் சாதனங்கள் வர இருக்கின்றன. நம் வாழ்க்கை முறையும் முற்றிலும் மாற இருக்கின்றது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget