சின்னத்திரை நாயகி ஸ்ரித்திகா

சின்னத்திரையில் உயிரோட்டமான நடிப்பால் பெண்களின் மனதை கவர்ந்தவர் ஸ்ரித்திகா. மலேசிய தமிழ் பெண்ணான இவர் 'ஹோம்லி'
கேரக்டர்களில் அசத்தும் அழகு பதுமை. தொலைக்காட்சியில் 'குல தெய்வம்' சீரியலில் 'அலமுவாக' நடிக்கிறார்.

அவர் நம்மிடம்...

பிறந்து, வளர்ந்ததெல்லாம்
மலேசியாவில். சினிமாவில் நடிக்க சென்னை வந்தேன். முதலில் நான் தொகுப்பாளினியாக இருந்தேன். 'மதுரை டூ தேனி' படத்தில் நாயகியாகவும், 'வேங்கை,' 'வெண்ணிலா கபடிக்குழு' போன்ற படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களிலும் நடித்தேன்.

அதே சமயத்தில் சின்னத்திரையிலும் வாய்ப்பு கிடைத்தது. நாதஸ்வரம் சீரியலில் 'மலர்' கேரக்டர் தான் என்னை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது. இதற்கு இயக்குனர் திருமுருகனை தான் பாராட்ட வேண்டும்.

சின்னத்திரையில் நடிப்போரிடம் குடும்ப உறுப்பினர் போல் பழகுகிறேன். இதனால் தானோ என்னமோ எனது நடிப்பு இயல்பாக உள்ளது. சினிமாவிற்கும், சின்னத்திரைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சினிமாவை பொறுமையாக எடுப்பர். சீரியல் அந்த மாதிரி எடுக்க முடியாது; எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும்.

மொழி பெயர்ப்பு சீரியல் வந்தால் சின்னத்திரை ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அவற்றிற்கு தடை விதிக்க வேண்டும். எனக்கு 'சாப்ட்' கேரக்டர் தான் பொருத்தம் என, எல்லோரும் கூறுகின்றனர். நான் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். இதற்கு எனது முகபாவம் சரியாக வருமா என்று தெரியவில்லை.

நான் எப்போதும் 'ஜாலி' கேரக்டர். சினிமா, சின்னத்திரை மட்டுமின்றி எந்த துறையாக இருந்தாலும் பெண்களுக்கு தொந்தரவு இருக்கும். நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ; அப்படியே ஆண்களும் பழகுவர். அனைத்து துறையிலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என்பது ஆசை. எங்களை போன்றோர் வெளியே செல்லும் போது முக்கியத்துவம் கிடைக்கிறது.

சில நேரங்களில் தனித்துவம் பாதிக்கிறது. எனக்கு தகுந்த கேரக்டர் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், என்றார்.

பழைய பதிவுகளை தேட