இணையத்தில் என்னதான் இல்லை! என்று பெருமையுடன் பேசு பவர்களுக்கு உரம் ஊட்ட அண்மையில் சுவையான தளம் ஒன்றினை நம் வாசகர் ஒருவரின் துணை யுடன் காண நேர்ந்தது. அனைத்து வகை உணவினைத் தயாரிக்க உதவிடும் அந்த தளத்தில் சைவ, அசைவ உணவு வகைகள் என அனைத்து வகைகளுக்கும் இதில் உணவினைத் தயார் செய்திடும் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இதன் வகைகளைப் படித்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது. ரொட்டி, தின்பண்டங்கள், அரிசி உணவுப் பண்டங்கள், ஊறுகாய்கள், சட்னி, ஸ்வீட், சூப், சாலட்,
பசி எடுக்க வைக்கும் சூப், குடிக்க பானங்கள் எனப் பல பிரிவுகள் இந்த தளத்தில் அவற்றிற்கான லிங்க்குகளுடன் காத்திருக்கின்றன.
தென்னிந்திய உணவு பண்டங்களுக்கென உள்ள தளத்தில், தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களின் உணவு வகைகளைத் தயாரிப்பதற்கான பட்டியல் தரப்பட்டு செய்முறை விளக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்களில் தயாரிக்க தனியான உணவுப் பண்டங்கள் கொண்ட தளம் ஒன்றும் தரப்பட்டுள்ளது. தீபாவளி, ஹோலி, கணேஷ் சதுர்த்தி என இது நீள்கிறது.
நான் டயட்டில் இருக்கிறேன். எனக்கு இது சரியாக வராதே என்று கூறுபவர்களுக்கு எனத் தனியே ஒரு பக்கம் உள்ளது. குறைந்த கலோரி உள்ள உணவுப் பண்டங்களை எப்படி, எந்த வகை தானியம், காய்கறி கொண்டு தயாரிப்பது எனவும் ஒரு பக்கம் உள்ளது. மைக்ரோ வேவ் அடுப்புதாங்க இன்றைக்கு நடைமுறை, இந்த ரெசிப்பியெல்லாம் சரியாக வருமா என்ற கேள்வி கேட்பவர்களுக்குத் தனியே மைக்ரோவேவ் அடுப்பில் உணவுப் பண்டங்களைத் தயாரிப்பது குறித்தான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இதிலும் சைவம், அசைவம் என பிரிவுகள் உள்ளன.
தங்கள் மகள்களைத் திருமணம் முடித்துக் கொடுக்கும் தென் மாவட்டங்களில் உள்ளவர்கள், முன்பு விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மகளிர் அமைப்புகள் வெளியிட்டுள்ள சமையல் நூல்களை வாங்கி, சீதனத்தோடு கொடுத்து அனுப்புவது வழக்கம். இப்போது இந்த தளக் குறிப்புகளை டவுண்லோட் செய்து "சிடி'யாகத் தரத் தொடங்கி உள்ளதாக, இந்த குறிப்பு குறித்து கோடி காட்டிய வாசகி எழுதி உள்ளார். அந்த வாசகிக்கு நன்றி. உங்கள் மகள் மணமுடித்துப் போனாலும், வேலை நிமித்தம் வெளிநாடு சென்றாலும், சமையலுக்கு அவர்களுக்கு உதவ இந்த தளம் நிச்சயம் உதவிடும் என்பது உறுதி. ஒருமுறை சென்று பார்த்தால், தினமும் உங்கள் சமையலை இதன் அடிப்படையில் தான் முடிவு செய்வீர்கள்.