மயக்கம் என்ன படத்தில் தனுஷ் பாடியுள்ள ‘காதல் என் காதல் கண்ணீரிலே பாடல்’ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தப் பாடல் பெண்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கி தனுஷ் நடித்துள்ள படம் 'மயக்கம் என்ன'. இந்த படத்தில் காதல் என் காதல் என கண்ணீருல.. என்று தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ளது. அதில் ‘அடிடா அவள, உதடா அவள, வெட்றா அவள, தேவையே இல்ல’ என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.
அத்துடன் ‘பொண்ணுங்க எல்லாம் வாழ்வின் சாபம்’ என்ற வரியும் இடம் பெற்றுள்ளது. இவை பெண்களை இழிவுபடுத்துபவை என்றும் பெண்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுபவை என்றும் ராமசுப்பிரமணியம் என்பவர் புகார் கூறியுள்ளார்.
பெண்களை கொண்டாடும் நாம் கலாசாரத்துக்கு இந்த பாடல் முற்றிலும் எதிரானது என்றும் தனது புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மயக்கம் என்ன படம் ரிலீசாகி பல நாட்களுக்கு பிறகு பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதற்கு கீதாஞ்சலி செல்வராகவன் வியப்பு தெரிவித்துள்ளார். இந்த பாடலில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வரிகள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஜோவியலான மூடில் பாடுவது போல உள்ளதே தவிர பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பாடல் எழுதப்படவில்லை என்றும் தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பாடலை தனுசும் படத்தின் இயக்குனர் செல்வராகவனும் இணைந்து எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.