மொபைல்போன் விற்பனையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்து நோக்கியா வாகை சூடியுள்ளது.சிறந்த மொபைல் தயாரிப்பிற்கான நிறுவனங்களில் நோக்கியா முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டில் 11 கோடியே 35 லட்சம் மொபைல்களை விற்பனை செய்து முதல் இடத்தை பிடித்து வெற்றி வாகை சூடி இருக்கிறது நோக்கியா.
வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக பிரசித்தி பெற்ற சாம்சங் நிறுவனம் மொபைல் தயாரிப்பாளர்களில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. இந்நிறுவனம் 9 கோடியே 76 லட்சம் மொபைல்களை விற்பனை செய்து, 22.8% சதவிகிதத்தில் 2-ஆம் இடத்தை தக்க வைத்திருக்கிறது சாம்சங்.
ஐபோன்-4 எஸ் மூலம் சர்வதேச மொபைல் மார்கெட்டையே ஒரு கலக்கு கலக்கிய ஆப்பிள் நிறுவனம் 3-வது இடத்தை பிடித்து இருக்கிறது. போன முறை 5-வது இடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனம் இந்த முறை மூன்றாவது இடத்திற்கு வந்திருப்பது மிக பெரிய முன்னேற்றம். ஆப்பிள் நிறுவனம் 3 கோடியே 7 லட்சத்தி 4 ஆயிரம் ஐபோன்களை கடந்த ஆண்டில், அதுவும் 3 மாதத்தில் விற்பனை செய்திருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தென் கொரியா மற்றும் சீனா நிறுவனங்களை முந்தி கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறது. மொபைல் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு முன்னுக்கு செல்வதன் மூலம் உலகளவில் தொழில் நுட்பங்கள் வளர்ந்து இருப்பது ஊர்ஜிதமாகிறது.
இன்டர்நேஷனல் டேட்டா கார்பரேஷன் மூலம் இந்த புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது. நோக்கியாவின் இந்த வெற்றி நோக்கியா நிறுவனம் மட்டும் அல்ல நோக்கியா வாடிக்கையாளர்களும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம்தானே.