பாலாஜி சக்திவேல் இயக்கத்துல "காதல்" வெளிவந்த வருடம் 2004. கே.எஸ்.தங்கசாமி இயக்கத்துல "ராட்டினம்" வெளிவந்திருக்கிற வருடம் 2012. என்ன சொல்ல வர்றோம்னு இப்ப புரிஞ்சிருக்குமே! அதேதான்... இன்னாரு ஸ்கூல் காதல் தான் "ராட்டினம்". காதல் க்ளைமாக்ஸ்ல கதாநாயகன் லூசாயிடுவான். ராட்டினம் க்ளைமாக்ஸ்ல நாம லூசாகுறோம். அவ்வளவுதான் வித்தியாசம். இருந்தாலும்... தெளிவான திரைக்கதையால, காதல் முருகன் அளவுக்கு நமக்கு பாதிப்பில்லை.
ஏலே... எது வந்தாலும் பார்த்துக்கலாம்ல!ன்னு நண்பர்கள் கொடுக்கிற தைரியத்துல ஸ்கூல்ல படிக்கிற தனம்(ஸ்வாதி) பொண்ணை காதலிக்கிறாரு தூத்துக்குடி விடலை ஜெயம்(லகுபரன்). ஜெயத்துக்கு பாசக்கார அண்ணனும், ஒரு அண்ணியும். வழக்கம்போல பொண்ணுக்கு பணபலம். பையனுக்கு ஆள்பலம். ஜெயம் தனம் காதல் வீட்டுக்கு தெரியவர, பிரச்னை ஆகுது. உடனே யாருக்கும் சொல்லாம வெளியூர் கிளம்புது பொண்ணோட குடும்பம். தண்ணி அடிச்சுட்டு தூக்கம் வராம தூத்துக்குடியை சுத்தி சுத்தி வர்றான் ஹீரோ. இந்த சூழல்ல, மார்க் ஷீட் வாங்க தனம் ஊருக்குள்ள வர, ஏலே... நீ பொண்ணை கூட்டிட்டு தைரியமா வாலே! நாங்க பார்த்துக்கறோம்னு மறுபடியும் நட்பு வட்டம் ஏத்திவிட, தனத்தை வெளியூருக்கு கூட்டிட்டுப் போய் ஜெயம் தாலி கட்டுறான். ஜெயம் மேல இருக்கிற கோபத்தை அவன் அண்ணன் மேல காட்டுது தனத்தோட குடும்பம். விஷயம் தெரிஞ்சு தம்பதிகளா ஊருக்குள்ள வர்றவங்களை ரெண்டு அப்பு அப்பி பிரிக்குது போலீஸ். அப்புறம்... திடுக்கிடும்(!) க்ளைமாக்ஸ்.
இரண்டே கால் மணிநேர படத்துல ஒரு காட்சிக்காவது ரசிகர்கள் கை தட்டட்டுமே! ம்ஹூம்... மயக்கத்துல கிடக்கற மாதிரி அப்படி ஒரு அமைதி. காரணம்... இயக்குநர் தங்கசாமி. ஆமா... ஏற்கனவே நாம பார்த்து ரசிச்ச கதைன்னாலும், மறுபடியும் பொறுமையா பார்க்க வைக்கிற அளவுக்கு தொய்வில்லாம திரைக்கதை அமைச்சிருக்காரே! அதுக்காக அவரை பாராட்டியே ஆகணும். அதேமாதிரி, அசத்தும் அழகு... பாடல்ல யாருப்பா மியூசிக்ன்னு கேட்க வைக்குது மனுரமேசனோட இசை.
நாயகன் லகுபரன், நாயகி ஸ்வாதியோட யதார்த்தமான நடிப்பு... படத்துக்கு ப்ளஸ். காதலுக்காக எதையும் இழக்கலாம்! ஆனா, காதல்ங்கற போர்வையில் வர்ற உணர்வுக்காக பாச உறவுகளை, நிம்மதியை இழக்கலாமா...?ங்கற படத்தோட கேள்வி நல்லாதான் இருக்கு. ஆனா, பதில் சொல்ல வேண்டிய இளசுகளுக்கு படம் பிடிக்கணுமே...?
"ராட்டினம்" - பார்த்து ரசித்த "காதல் ஓவியம்!"
ரசிகன் குரல் - (படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் வசனம்) அண்ணாச்சி : இப்ப நான் என்ன பண்ணட்டும்?, ரசிகன் : காப்பி அடிக்காம படம் எடுக்க சொல்லுங்க... அண்ணாச்சி!