பொறியியல் கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்வு செய்வது எவ்வாறு?

இது என்ஜினீயரிங் அட்மிஷன் சீசன். தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக வருகிற 13ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 20ம் தேதி வர சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுன்சலிங் நடைபெறுகிறது. 540 பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் 1.71 லட்சம் இடங்கள் இந்த கவுன்சலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. கவுன்சலிங் மூலம் கல்லூரிகளையும் படிப்புகளையும் தேர்வு செய்வதில் மாணவர்களுக்கு சில யோசனைகள் இதோ!


  • கவுன்சலிங்கிற்கு வரும் மாணவர்கள், தாங்கள் சேர விரும்பும் கல்லூரி குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்வது நல்லது. விரும்பிய கல்லூரியில் இடம் இருக்கும். ஆனால் அந்தக் கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவுகளில் இடம் இல்லாமல் போகலாம். விருப்பமில்லாத கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவில் இடங்கள் காலி இருக்கலாம். ஆனால், எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவைத் தேர்வு செய்வது என்பதை கவுன்சலிங்கின்போது குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிவுசெய்ய வேண்டும். நாம் நினைக்கின்ற கல்லூரியோ பாடப்பிரிவோ கிடைக்கா விட்டால் நமது அடுத்த சாய்ஸ் என்ன என்பதை வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • ஒரே மாதிரி பெயரில் பல கல்லூரிகள் இருக்கலாம். எனவே நாம் சேர விரும்பும் கல்லூரிக்கு அண்ணா பல்கலைக்கழகம் கொடுத்துள்ள எண்ணையும் சேர்த்து குறித்துக் கொள்ள மறக்காதீர்கள். கவுன்சலிங் மூலம் கல்லூரியையும் பாடப்பிரிவையும் தேர்வு செய்து அதற்கான ஆணைக் கடிதத்தைப் பெற்ற பிறகு, அதை மாற்ற முடியாது. எனவே, கல்லூரியையும் படிப்பையும் தேர்வு செய்வதில் கவனம் தேவை.
  • விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டுள்ள தமிழகப் பொறியியல் கல்லூரிகள் பற்றிய தகவல் கையேட்டைப் பார்த்தும் நாம் சேர விரும்பும் கல்லூரிகளின் இணைய தளங்களைப் பார்த்தும் சில அடிப்படைத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
  • கல்லூரிகள் குறித்து பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வருகின்ற விளம்பரங்களைக் கண்டு மயங்கி விடக்கூடாது. பிரமாண்டமான கட்டடங்கள் இருப்பதால் மட்டுமே ஒரு கல்வி நிறுவனம்சிறந்த கல்வி நிறுவனம் ஆகி விடாது. அங்கு ஆய்வகங்கள் எப்படி இருக்கின்றன? தேவையான தரமான புத்தகங்களும் ஆய்வு இதழ்களும் கொண்ட நூலகம் இருக்கிறதா?...இப்படி கல்லூரிகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பார்த்துத் தீர்மானிக்க வேண்டும்.
  • இதையெல்லாம் விட, அக் கல்லூரியில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அவர்களில் எத்தனை பேர் பேராசிரியர்கள், பிஎச்.டி. பட்டம் பெற்றவர்கள் என்பது மிகவும் முக்கியம்.
  • கல்லூரிகளில் பாடம் தவிர, மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு உதவும் ஜெர்மன், ஜப்பானிய மொழி போன்ற பிற மொழிகளைக் கற்றுத் தரவசதிகள் செய்யப்படுகிறா, ஆங்கில மொழி அறிவு பயிற்சி, பர்சனாலிட்டி டெவலப்மெண்ட் போன்ற ஆளுமைப் பயிற்சி அளிக்கப்படுகிறதா என்ற கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்றால் அந்தக் கல்வி நிறுவன நிர்வாகம் மாணவர்களின் வளர்ச்சியில் காட்டும் ஆர்வத்தைப் புரிந்துகொள்ளலாம்.
  • சிறந்த கல்வி நிலையங்களில் சேருவது என்பது வேலைவாய்ப்புக்கான முதல் படி. ஏனெனில் சிறப்பு வாய்ந்த கல்வி நிலையங்களுக்குத்தான் பிரபல தொழில் நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூக்கு வருகின்றன. கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களைத் தேர்வு செய்ய எத்தகைய பெரிய நிறுவனங்கள் வருகின்றன என்பது அக்கல்லூரியின் தரத்திற்கு அது ஓர் அடையாளம். எனவே, சேர விரும்பும் கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவும்.
  • பொறியியல் கல்லூரியில் உள்ள படிப்புகள் தர அங்கீகாரம் பெற்றவையா என்பதைப் பொருத்து அங்கு வழங்கப்படும் படிப்பின் தரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். கடந்த சில ஆண்டுகளில் அக்கல்லூரியில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதமும்கூட அக்கல்லூரியின் தரத்தை உறுதி செய்வதற்கான மற்றொரு வழி.
  • புதிய பொறியியல் கல்லூரிகளைவிட, ஏற்கெனவே பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் வசதி செய்யப்பட்டிருக்கும். அங்கு முதுநிலை பொறியியல் பட்டப் படிப்பு இருந்தால், அக்கல்லூரியில் ஓரளவு குறைந்தபட்ச வசதிகள் செய்யப்பட்டிருக்கும் என நம்பலாம். ஆனால், சில நேரங்களில் பல ஆண்டுகளாக இருந்துவரும் கல்லூரிகளில் போதிய வசதிகள் இல்லாமல் இருக்கலாம். புதிய கல்லூரிகளில் நல்ல வசதிகள் செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
  • சேர விரும்பும் ஒரு கல்லூரியைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதற்கு, அக்கல்லூரிக்கு நேரடியாகச் சென்று பார்ப்பதுடன், அக்கல்லூரியில் படித்து வரும் மாணவர்களிடம் நமது சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் கல்லூரியின் நிறை, குறைகளை முன்னதாகவே தெரிந்துகொள்ளலாம்.
  • எந்தக் கல்லூரியில் சேருவது என்பதை முடிவு செய்வதற்கு முன்னதாக, அந்தக் கல்லூரி தமது குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்குமா என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • கல்லூரிகளில் டியூஷன் பீஸ் தவிர மற்ற கட்டணங்கள் எவ்வளவு என்பதை முன்னதாகவே கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது. ஏனெனில், சில நேரங்களில் தாங்கள் எதிர்பார்ப்பதைவிட கட்டணங்கள் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் கடைசி நேரத்தில் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாக நேரிடலாம்.
  • கல்லூரியில் கட்டணம் செலுத்துவதற்கு உரிய நிதி ஆதாரங்களுக்கான ஏற்பாடுகளை முன்னதாகவே செய்துகொள்ள வேண்டும். வங்கிக் கடன் பெறுவதாக இருந்தால் அதற்கான ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியதும் அவசியம்.
  • தங்களது குழந்தைகளின் விருப்பத்திற்கு மாறாக வேறு துறைகளில் படிக்க வைக்க முயலக்கூடாது. மாணவர்களுக்கு ஆர்வமில்லாத படிப்புகளில் சேர்த்து விட்டால் அப்பாடங்களில் அவர்களால் சிறப்பாகப் பிரகாசிக்க முடியாது. அதுவே மாணவர்களுக்கு பெரும் சுமையாகிவிடக்கூடும். மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், படிப்புத் திறன், மாணவரின் விருப்பம் போன்றவற்றை கருத்தில்கொண்டு எந்தக் கல்வி நிறுவனத்தில் எந்தப் படிப்பில் சேருவது என்பதை பெற்றோரும் மாணவரும் பேசி முடிவெடுக்க வேண்டும்.
  • பொறியியல் கல்லூரிகளில் அனைவரும் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவையே தேர்வு செய்கிறார்களே, அந்தப் பாடத்தைப் படித்தால்தான் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நல்ல வேலை கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். பொறியியல் கல்லூரிகளில் எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்த மாணவர்களையும் அவர்கள் சிறப்பாக படித்திருந்தால்போதும். அவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள சாஃப்ட்வேர் நிறுவனங்கள் தயங்குவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்தாலும் திறமை வாய்ந்த மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் நிச்சயம்.
  • ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில்தான் எதிர்கால வாழ்க்கையே அடங்கியிருக்கிறது என்கிற மாதிரி மாணவர்களிடம் தேவையில்லாத பிரமைகளை வளர்த்துவிட வேண்டாம். அந்தக் குறிப்பிட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்காவிட்டால் அவர்கள் ஏமாந்து போக நேரிடும். ஒரு கல்வி நிறுவனத்தையோ அல்லது படிப்பையோ தேர்வு செய்யும்போதே அது கிடைக்காவிட்டால் அதற்கான மாற்று பற்றியும் முன்னதாகவே சிந்தித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • காலையில் கவுன்சலிங்கிற்கு வருபவர்கள் முதல் நாள் இரவிலும் பிற்பகலில் கவுன்சலிங்கிற்கு வருபவர்கள் அன்றைய தினம் காலையிலும் கவுன்சலிங் நடைபெறும் இடத்திற்கு  வந்து அங்கு திரையிட்டுக் காட்டப்பட்டும் விவரங்களிலிருந்து எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவுகளில் எவ்வளவு இடங்கள் காலியாக உள்ளன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதைக் கொண்டு  சாய்ஸ் வரிசையை தேவைக்கு ஏற்ப மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இதனால், கடைசி நேரத்தில் எந்தக் கல்லூரியில் எந்தப் படிப்பைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்வதில் தேவையில்லாத பதற்றங்களைத் தவிர்க்க முடியும்.
  • மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மூலம் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்கள் விசாரணை அலுவலகத்தை அணுகி தங்களது ரேங்க் என்ன, கவுன்சலிங் நேரம் எப்போது என்பதைத் தெரிந்துகொள்வதன் மூலம் கடைசி நேர பரபரப்பைத் தவிர்க்க முடியும். கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ள நேரத்துக்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் முன்னதாகவே வந்து விடுவது நல்லது.
  • பெற்றோரில் ஒருவரையோ அல்லது கல்லூரியையும் பாடப்பிரிவையும் தேர்வு செய்வதில் முடிவு செய்வதில் உதவி செய்யும் உறவினரையோ குடும்ப நண்பர்களையோ அழைத்து வரலாம். தவிர்க்க முடியாத காரணங்களால் சம்பந்தப்பட்ட மாணவர் வர முடியாத நிலையில், மாணவர் கையொப்பமிட்ட அங்கீகாரக் கடிதத்துடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவுன்சலிங்கில் கலந்துகொள்ளலாம்.
  • கவுன்சலிங்கிற்கு வரும் மாணவர்கள் முன்பின் தெரியாதவர்கள் கூறுவதைக் கேட்டு எந்தக் கல்லூரியில் சேருவது என்று முடிவெடுக்க வேண்டாம். கவுன்சலிங் வளாகத்தில் இருக்கும் யாரோ ஒருவரை கவுன்சலிங் அரங்கிற்கு மாணவருடன் செல்ல அனுப்பி வைக்க வேண்டாம். இந்த விஷயத்தில் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget