தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற தமிழ்ப் படத்திலும், எக்கச்சக்க இந்திப் படங்களிலும் நடித்துள்ள பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா, திடீரென சந்நியாசினியாக மாறிவிட்டார். 10 ஆண்டுகளுக்கும் மேல் பாலிவுட்டில் நடித்து வந்த தனுஸ்ரீ பல கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து திடீரென்று நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். ஒரு சந்நியாசினியாக மாறி பல்வேறு திருத்தலங்கள், ஆசிரமங்கள் என சுற்றிக் கொண்டிருக்கிறார்.
தனது முடிவு குறித்து அவர் கூறுகையில், "என்னுடைய 16வது வயதில் நடிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஓய்வின்றி நடித்தேன்.
ஆனால் அங்கு எனக்கு நேர்ந்த அனுபவங்கள் கொடுமையானவை. இரக்கமற்ற மனிதர்கள், இதயத்தை நொறுங்க வைத்தவர்களால் நான் பட்ட மன அழுத்தங்கள் கொஞ்சமல்ல. எனக்கு ஆதரவு தரக்கூட நண்பர்கள் இல்லை. நான் இந்த முடிவை எடுக்கக் காரணம் இவைதான்..
ஒரு மாதத்துக்கு முன்புதான் கற்பனை உலகத்திலிருந்து நிஜ உலகத்துக்கு திரும்ப முடிவு செய்தேன். ஆனால் ஒரு குறை மட்டும் இருந்துகொண்டே இருந்தது. காஷ்மீரில் உள்ள லடாக் சென்று என் தலைமுடியை மொட்டை அடிக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் எனது பெற்றோர் அதை விரும்பவில்லை. எனவே லடாக் செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே என் தலைமுடியை மொட்டை அடித்துவிட்டேன். இதற்கு காரணம் என்னை யாரும் அடையாளம் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதுதான்," என்றார்.
தனுஸ்ரீ தத்தாவின் இந்த முடிவும் அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணங்களும் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.