இயக்குனர் Asger Leth-க்கு இது முதல் படம். படத்தில் நடித்திருந்த சாம் வொர்த்திங்டன் பிரபல நடிகர் என்றாலும், டாம் க்ரூஸ் மாதிரி பார்த்தே ஆக வேண்டிய பட்டியிலில் இல்லை. மேன் ஆன் ஏ லெட்ஸ் பிப்ரவரியில் வெளியான போது பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. படம் வெளியாகி பரவாயில்லை என்ற மவுத் டாக்கிற்குப் பிறகே பிக்கப்பானது. ஹாலிவுட்டில் அடிக்கடி பார்க்கக் கிடைக்கிற ஒரு த்ரில்லர்தான் இந்தப் படம். அதை இங்கு குறிப்பிட முக்கிய காரணம், கோடம்பாக்கத்தில் பல சினிமா
அலுவலகங்களில் இந்தப் படத்தை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் சொந்த சரக்கு போல் இதே படம் தமிழில் வரலாம்.
சிம்ப்பிளான கதை. நியூயார்க்கிலுள்ள பிரமாண்டமான ரூஸ்வெல்ட் ஹோட்டலுக்கு நிக் கேஸிடி என்பவர் வருகிறார். வேறு பெயரில் அறை எடுத்து தங்குகிறார். அவர் இருப்பது 21ஆம் மாடி. நான் குற்றமற்றவன் என்று எழுதி வைத்துவிட்டு ஜன்னல் வழி வெளியே வருகிறார். ஒன்றரையடி அகலமே உள்ள விளிம்பில் அவர் நிற்பது சில நிமிஷங்களில் உலகுக்கே தெரிய வருகிறது.
பிளாஷ்பேக்கில் நிக் கேஸிடி சிறையில் இருக்கிறார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 25 வருடங்கள் சிறையில் களி தின்ன வேண்டும். இந்நிலையில் கேஸிடியின் அப்பா இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. இறுதிச் சடங்குக்கு வரும் நிக் கேஸிடி போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பிச் செல்கிறார். நிக் கேஸிடி செய்த தவறு என்ன, எதற்காக தப்பிச் செல்கிறார்? எதுவும் சொல்லப்படாததால் படம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியபடி ஹோட்டலின் 21வது மாடியில் நிற்கும் நிக் கேஸிடியிடம் பேசி அவரது தற்கொலை எண்ணத்தை கைவிட நெகோஷியேஷன் டீம் வருகிறது. தன்னுடன் பேச லிடியா என்ற பெண் அதிகாரிதான் வர வேண்டும் என்கிறார் நிக் கேஸிடி. லிடியாவும் வந்து சேர்கிறாள். அவளிடம் பேசியபடி எதிர் பில்டிங்கில் அத்துமீறி நுழையும் இளம் ஜோடிக்கு இங்கிருந்தே இன்ஸ்ட்ரக்சன் தருகிறார் கேஸிடி. அது கேஸிடியின் தம்பி மற்றும் அவனது காதலி.
நிக் கேஸிடி ஒரு போலீஸ் அதிகாரி. 40 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள வைரம் ஒன்றிற்குப் பாதுகாப்பாகச் சென்ற போது அந்த வைரம் காணாமல் போகிறது. பழி கேஸிடி மீது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் எஞ்சிய வாழ்நாள் ஜெயிலில். கேஸிடி அந்த வைரத்தை எடுக்கவில்லை. நகைத் தொழிலில் நஷ்டமடைந்த அந்த வைரத்துக்குரிய David Englander வைரத்தை எடுத்துவிட்டு கேஸிடி மீது பழியை போட்டிருக்கிறார். கேஸிடி குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டுமென்றால் டேவிட்டின் பாதுகாப்பில் இருக்கும் அந்த வைரத்தை கைப்பற்ற வேண்டும். போலீஸின் கவனத்தை தன் பக்கம் திருப்பி வெற்றிகரமாக வைரத்தை கைப்பற்றவே இந்த தற்கொலை நாடகம்.
கேஸிடியின் தம்பியும், காதலியும் வைரத்தை மீட்டார்களா? கேஸிடி மீதான பழி விலகியதா? விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.
கேஸிடியின் வைரத்தை கைப்பற்றும் திட்டம் அவரது அப்பா இறந்ததாக வரும் செய்தியிலிருந்து தொடங்குகிறது. பொதுவாக யாரும் இதை எதிர்பார்ப்பதில்லை. இந்தத் திட்டத்தில் கேஸிடியின் தந்தையும் ஓர் அங்கம். சதியில் இரு போலீஸ்காரர்களும் உடந்தை என்பது இறுதிகாட்சிக்கு விறுவிறுப்பை சேர்க்க உதவுகிறது.
மேன் ஆன் ஏ லெட்ஜ் பார்த்தே ஆக வேண்டிய படமல்ல. பார்க்க ஆரம்பித்தால் கடைசிவரை பார்த்தே தீர வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டும் படம்.