திருப்பாச்சி படத்தில் விஜய் தனது தங்கையின் குழந்தை வளரும் இடத்தில் ரவுடிகளின் ராஜ்யம் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் சென்னையில் உள்ள அத்தனை ரவுடிகளையும் போட்டுத் தள்ளுவார். இதே கதைதான் திருத்தணியிலும். திருத்தணிக்கும் திருப்பாச்சிக்கும் ஆறு வித்தியாசங்கள் போட்டியை வைத்தால் இரண்டு மூன்றுக்கு மேல் வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது கூட கொஞ்சம் சிரமம்தான்.
ஜிம் மாஸ்டராக வேலை பார்க்கிறார் பரத். அங்கு உடற்பயிற்சி செய்ய வரும் சுனைனாவின் இடுப்பைப் பார்த்ததும் அவர் மீது காதல் வருகிறது. (பின்ன.. முதலில் இடுப்பைத்தான் காட்டுறாங்க… அப்போ அதைத்தானே சொல்ல முடியும்.) ஒரு நாள் விபத்து ஒன்றில் சிக்கிக் கொள்கிறார் பரத். அதிலிருந்து மீண்டு வரும் அவரிடம், இன்னும் 6 மாதங்களில் நீங்க மண்டய போட்ருவீங்க… அதுக்குள்ள என்னென்ன வேலைகளை முடிக்கணுமோ… எல்லாத்தையும் முடிச்சுக்குங்க… என்று சொல்கிறார் மருத்துவர். இதைக் கேட்டு அதிர்ச்சியான பரத்திடம் 6 மாதத்திற்குள்ள நீ செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு என்று சொல்லி பரத்தை மூளைச் சலவைச் செய்கிறார் ராஜ்கிரண். அவர் சொல்கிறபடி ரவுடிகளைப் போட்டுத் தள்ளுகிறார் பரத். கடைசியில் ராஜ்கிரணை வைத்து ஒரு ட்விஸ்டுடன் க்ளைமேக்ஸை சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.
படம் துவங்கினதில் இருந்து சுனைனா பரத் வீட்டில் வந்து தங்கியிருப்பது வரைக்கும் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். அவற்றுக்கு சிரிப்பும் வருகிறது. அதைத் தொடர்ந்து முழுக்க முழுக்க ஆக்க்ஷனில் கதை பயணப்படுகிறது.
சுனைனா ராம்விலாஸ் பாஸ்வானை அப்பா என்பதும் மம்தாவை அம்மா என்று சொல்லும் போதும் ஷாக் ஆகாத பரத் சுனைனா தான் ஒரு அநாதை என்று அநாதை இல்ல விழாவில் சொல்வதைக் கேட்டு ஷாக் ஆவது சுத்த சினிமாத்தனமான காட்சி.
பரத்தின் அத்தை போன்று வேடம் போட்டுக் கொண்டு சுனைனா பரத்தின் வீட்டில் வந்து தங்கியிருக்கும் போது வரும் காட்சிகளில் செம காமெடி ரகளை பண்ணியிருக்கிறார்கள். நெல்லை சிவா சுனைனாவைத் தேடி பரத்தின் வீட்டுக்கு வருகிற காட்சி காமெடியில் உச்சகட்டம்.
பரத் தனது அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் போது, நம்ம வீட்ல அம்மா போட்டோ இருக்கு அதைத் தூக்கி வெளிய போட்ராதப்பா… என்று பரத்தின் அப்பா சொல்லுகிற இடம் செம டச்சிங்கான காட்சி.
வாழ்க்கையில் பெரிய அளவுக்கு சாதிச்சவங்க எல்லாருமே சின்ன வயசுல இறந்தவங்கதான் என்று ராஜ்கிரண் சொல்லுகிற டயலாக்கைக் கேட்டவர்களுக்கு நிச்சயம் வீரமும் சாதிக்கும் வேட்கையும் அள்ளிக்கிட்டு வரும்.
ஐந்தாறு பேரைப் போட்டுத் தள்ளிவிட்டு காவல்துறை அதிகாரிகளுக்கே போன் போட்டு சொல்வது, பரத் நூறு கொலைகள் செய்வது வரைக்கும் யார் என கண்டு பிடிக்காத காவல்துறை என பேரரசு படத்திற்கே உரிய லாஜிக் மீறல்கள் படம் முழுவதும் எக்கச்சக்கம்.
ஹீரோ தான் என்பதை நிரூபிக்கிறார் பரத். இடுப்பைக் காட்டி அறிமுகமாகும் சுனைனா பரத்துடன் சேர்ந்து அவர் வீட்டில் நடிப்பது அடிப்பது அலப்பறையான காட்சி. பாடல்களுக்கு கவர்ச்சி காட்டவும் தயங்கவில்லை சுனைனா.
வில்லனாக வருகிறார் ஆஷிஷ் வித்யார்த்தி. நாலு நாட்கள்தான் அவரது கால்ஷீட் கிடைத்திருக்கும் போல. படத்தின் மிகப்பெரிய வில்லன் அவர் என்றாலும் குறைவான காட்சிகளிலேயே வருகிறார். இவருக்கு மனைவியாக வருகிற பாத்திமாபாபு. அவரது சட்டையை பிடித்து உலுக்குகிற ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து போகிறார்.
படம் முடியப் போகிற நேரத்தில் ராஜ்கிரண் ராணுவத்தில் பணியாற்றியது பற்றி சொல்லும் நேரத்தில் வருகிற அந்த ராணுவச் சண்டைக் காட்சிகள் படத்திற்கு அவசியமே இல்லை. வெறும் வசனங்களிலேயே அதை சொல்லிவிட்டு மறுடியும் அதை காட்சியாக காட்டியிருக்கிறார்கள்.
படத்தின் கதை எழுதி இயக்கி இசையமைத்திருப்பதும் பேரரசுதான். ஆக்க்ஷன் மசாலா பட இயக்குநர் என்பதால் அதில் குறை வைக்காமல் ஆக்க்ஷன் மசாலா படமாக திருத்தணியை உருவாக்கியிருக்கிறார். ஒரு பாடலை டி.ஆர். பாடியிருக்கிறார். அடி வான வில்லின் வண்ணம் என்னும் ஒரு மெலடி கம் குத்துப்பாட்டு கொஞ்சம் கேட்கிற மாதிரி இருக்கிறது.
முதல் பாதியில் இருந்த காமெடியைப் போன்று இரண்டாவது பாதியிலும் ஒரு ட்ராக் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் இன்ட்ரஸ்டாக படம் நகர்ந்திருக்கும்.
ஆக்க்ஷன் விரும்பிகளுக்கு திருத்தணி கொண்டாட்டமான படம்தான். மற்றபடி திருத்தணி ரசிகர்களை அந்த அளவுக்கு மொட்டை போடவில்லை என்றே சொல்லலாம்.